×

நிலத்தடி நீர்மட்டம் சரிவு: செயற்கை செறிவூட்டல் முறையை செயல்படுத்த கடலூர் விவசாயிகள் கோரிக்கை!

கடலூர்: தண்ணீரின்றி வறண்ட நீர் நிலைகளால் கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக குறைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். செயற்கை செறிவூட்டும் முறையை பயன்படுத்தி நீர் ஆதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தது உள்ளனர்.

சிதம்பரம் அருகே உள்ள வெள்ளாறு தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. அதன் இரு கரைகளிலும் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. நீராடல் இல்லாமல் வறட்சி நிலவுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கடல்நீர் உட்புகுந்த காரணத்தால் குடிநீரும் உப்பு நீராக மாறி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

எனவே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி கடல் நீர் உட்புகாமல் தடுக்க செயற்கை செறிவூட்டல் முறையை உடனே கொண்டுவர விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியான கடலூர் மாவட்டத்தில் மேட்டூர் அணை திறப்பின் மூலம் வரும் தண்ணீர், தென்மேற்கு பருவமழை, வீராணம் ஏரி நீர் என விவசாய பணிகள் தடையின்றி நடப்பது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு எந்த வழியிலும் தண்ணீர் வரத்து இல்லாமல் போனதால், வெள்ளாற்றை சுற்றியுள்ள பாசன வாய்க்கால்கள் வறண்டு புல், புதருமாக மண்டி கிடக்கிறது. உடனடியாக அவற்றை தூர் வாரினால் மழை நீரை பயன்படுத்த உதவியாக இருக்கும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு. அதே போல நெய்வேலி நிலக்கரி சுரங்கம், நாளொன்றுக்கு 72 கிலோ லிட்டர் தண்ணீரை உறிஞ்சுவதும் நிலத்தடி நீர்மட்டம் குறைய முக்கிய காரணம் என்கிறார்கள் விவசாயிகள். வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க தடுப்பணை கட்டுவதே தீர்வு என்பது விவசாயிகளின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

Tags : Cuddalore ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கம் விலை...