×

பவானிசாகர் அணையில் பிடிக்கப்படும் மீன்கள் வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மீனவர்கள் புகார்

*போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

சத்தியமங்கலம் : பவானிசாகர் அணையில் பிடிக்கப்படும் மீன்கள் வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் மீனவர்கள் மூலம் பிடிக்கப்படும் மீன்கள் பவானிசாகர் மற்றும் சிறுமுகையில் உள்ள இரண்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் கொள்முதல் செய்து வந்த நிலையில் சங்கத்தின் ஒப்பந்த காலம் முடிவடைந்ததால், கடந்த 3 நாட்களாக தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்திற்கு மீனவர்கள் மீன்பிடித்து கொடுத்து அதற்கான கூலியை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே மீனவர்கள் பிடித்துக்கொடுக்கும் மீன்கள் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் விற்பனை நிலையத்திற்கு கொண்டு செல்லப்படாமல் இடைத்தரகர்கள் மூலம் வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், இதற்கு அதிகாரிகள் உடந்தையாக உள்ளதாக குற்றம் சாட்டிய மீனவர்கள் நேற்று காலை பவானிசாகர் அணையில் பிடித்த மீன்களை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்திற்கு வழங்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதிக்கு சென்ற மீன் வளர்ச்சி கழக உதவி மேலாளர் ஆனந்தியிடம் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீன் பிடிக்க அதிகாலை 4 மணிக்கு அணை நீர் தேக்கத்திற்கு செல்லும் போது நீர்வளத்துறை ஊழியர்கள் 6 மணிக்கு அணைக்கு செல்ல அனுமதிப்போம் என கூறுகின்றனர்.

மேலும், நாங்கள் பிடித்துக்கொடுக்கும் மீன்கள் மீன் வளர்ச்சி கழகத்தின் விற்பனை நிலையத்திற்கு கொண்டு செல்லாமல் வெளிமார்க்கெட்டில் இடைத்தரகர்கள் மூலம் விற்பனையாகிறது.

மீன் திருட்டை தடுக்க நடவடிக்கை இல்லை. கடந்த இரண்டு நாட்களில் நாங்கள் பிடித்துக் கொடுத்த மீன்கள் எங்கே சென்றது என கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து உதவி மேலாளர் ஆனந்தி அதிகாலையில் மீனவர்கள் அணை நீர்த்தேக்கத்திற்கு மீன் பிடிக்கச் செல்ல நீர் வளத்துறையிடம் அனுமதி பெற்று தரப்படும்.

மீனவர்கள் பிடித்துக் கொடுக்கும் மீன்கள் வெளி மார்க்கெட்டுக்கு கள்ளத்தனமாக கொண்டு செல்வது தடுக்கப்பட்டு மீன் வளர்ச்சி கழக விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மீனவர்கள் மீன் வளர்ச்சி கழகத்திற்கு மீன்களை எடை போட்டு வழங்கினர். இதனால் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Bhavanisagar dam ,Sathyamangalam ,Bhavanisagar ,Sirumukhi… ,
× RELATED பழைய ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில் மோதியதில் 9 ஆடுகள் பலி