×

ஜவ்வாது மலை அடிவாரத்தில் கம்பங்காட்டில் புகுந்து காட்டுயானை அட்டகாசம்

செங்கம் : ஜவ்வாது மலை அடிவாரத்தில் கம்பங்காட்டில் புகுந்து காட்டுயானை அட்டகாசம் செய்த சம்பவம் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியது.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்துக்கு உட்பட்ட ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களில் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது.

தற்போது பருவமழை இல்லாததாலும், கோடைகாலம் முடிந்தும் வெயில் சுட்டெரிப்பதாலும் மான்கள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இரைதேடி கிராமங்களுக்குள் புகுந்துவிடுகிறது. இதில் மான்களை நாய்கள் விரட்டி கடித்து இறக்கும் பரிதாப சம்பவங்களும் நடக்கிறது.

ஒரு சிலர் தண்ணீர் தேடி வரும் மான், காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. எனவே வனவிலங்குகளை பாதுகாக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல் வனவிலங்குகள் கிராமங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் செங்கம் வட்டத்துக்கு உட்பட்ட கல்லாத்தூர் கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டுயானை ஒன்று வனப்பகுதியில் இருந்து வந்து புகுந்தது. அப்பகுதியில் கம்பு, சோளம், வாழை போன்றவை பயிரிடப்பட்டுள்ள நிலையில், கோபால் மகன் குப்பன் என்பவருக்கு சொந்தமான கம்பங்காட்டில் ஒற்றை காட்டுயானை புகுந்து அறுவடைக்கு தயாராக இருந்த கம்பு பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தி கொண்டிருந்தது. யானை பிளீறும் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்த மணி என்பவர் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.

மேலும் அப்பகுதி விவசாயிகளை அழைத்தார். அனைவரும் ஒன்று திரண்டு யானையை விரட்டினர். இதனால் யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதற்கிடையில் அடுத்தடுத்து விவசாய நிலங்களில் புகுந்து வாழை, கம்பு, சோளம் உள்ளிட்டவற்றை யானை சேதப்படுத்தி உள்ளது. இச்சம்பவம் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு மீண்டும் யானை ஊருக்குள் புகுந்துவிடாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். யானை மீண்டும் ஊருக்குள் புகுந்துவிடுமா? என விவசாயிகளும், பொதுமக்களும் பீதியடைந்துள்ளனர்.

மின்வேலி அமைத்தால் நடவடிக்கை

வனத்துறையினர் கூறுகையில், ‘யானை ஊருக்குள் வந்தால் அதனை விரட்டுவதற்கு முயற்சித்து தொல்லை கொடுக்க வேண்டாம். இதனால் யானை மிரண்டு சேதங்களை ஏற்படுத்திவிடும். வனத்துறையினரை அழைத்தால், உடனடியாக வந்து யானையை விரட்ட நடவடிக்கை மேற்கொள்வோம். அதேபோல் வனவிலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்துவிடுவதை தடுக்க மின்வேலி அமைக்க வேண்டாம். இது சட்டப்படி குற்றம்.

இதில் வனவிலங்குகள் மட்டுமின்றி மனிதர்களும் சிக்கி உயிரிழக்க வாய்ப்புள்ளது. எனவே மின்வேலி அமைத்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மின் இணைப்பு துண்டிக்கவும் மின்வாரிய அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் வனவிலங்குகளை வேட்டையாடினால் கைது நடவடிக்கை பாயும்’ என்றனர்.

வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும்

பெரும்பாலும் வன விலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்துவிடுகிறது. தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. எனவே வனவிலங்குகள் ஊர்களில் புகுந்துவிடாமல் தடுக்க வனப்பகுதிகளில் தேவைக்கேற்ப வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும்.

மேலும் தொட்டிகளில் தண்ணீர் இருப்பதை அவ்வப்போது உறுதிப்படுத்தி நிரப்ப வேண்டும். இதனால் வனவிலங்குகள் பெரும்பாலம் ஊருக்குள் புகுந்துவிடுவதை தடுக்க முடியும் என கிராம மக்கள் கூறுகின்றனர். மேலும் வனப்பகுதியையொட்டி சோலார் மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Jawvadu hill ,Chengam ,Thiruvannamalai district ,
× RELATED பொள்ளாச்சி அருகே மக்கள் எதிர்ப்பை மீறி கோமங்கலம் சுங்கச்சாவடி திறப்பு