×

‘குட் டச், பேட் டச்’ விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியையிடம் 3ம் வகுப்பில் பலாத்காரம் செய்தவரை காட்டிக்கொடுத்த 8ம் வகுப்பு மாணவி

*ஆரணியில் தொழிலாளி போக்சோவில் கைது

ஆரணி : ஆரணியில் பள்ளியில் ‘குட் டச், பேட் டச்’ விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியையிடம் 3ம் வகுப்பு படிக்கும்போது பலாத்காரம் செய்தவரை 5 ஆண்டுகளுக்கு பிறகு 8ம் வகுப்பு மாணவி காட்டிக்கொடுத்தார். இதையடுத்து தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் கடந்த 23ம் தேதி ஆசிரியை ஒருவர் 8ம் வகுப்பு மாணவிகளுக்கு ‘குட் டச், பேட் டச்’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

அப்போது யாராவது நம்மை தொட்டால் அச்சமின்றி பெற்றோரிடமோ அல்லது ஆசிரியர்களிடமோ தெரிவித்து போலீசில் புகார் அளிக்க வேண்டும் என கூறிவிட்டு, உங்களில் யாருக்காவது இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தால் என்னிடம் தனியாக வந்து தெரிவிக்க வேண்டும் என ஆசிரியை கூறி உள்ளார்.

சிறிது நேரத்தில் 8ம் வகுப்பு மாணவிகளில் ஒருவர் ஆசிரியையிடம் சென்று, ‘நான் கடந்த 2021ம் ஆண்டு, அதேபள்ளியில் 3ம் வகுப்பு படித்தபோது (8 வயது), பள்ளி வளாகம் அருகே எனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தேன்.

அப்போது, அங்கு வந்தவர், எனது கையை பிடித்து அவரது வீட்டிற்கு இழுத்துச்சென்று ஆடைகளை களைந்து பாலியல் பலாத்காரம் செய்தார். ஒரு கட்டத்தில் நான் கதறி அழுதபோது, யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி அனுப்பினார்.

நான் பயத்தில் இதுவரை யாரிடமும் சொல்லாமல் இருக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக எனக்கு இதை யாரிடம் சொல்வது என தெரியாமல் தவிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை உடனடியாக சிறுமியின் தாயை அழைத்து இந்த விஷயத்தை கூறி உள்ளார்.

இதனால் மாணவியின் தாய் கதறி அழுதார். பின்னர் ஆசிரியையின் அறிவுறுத்தலின்படி மாணவியின் தாய் ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் மாணவியிடம் அந்த நபரை காட்டும்படி கூறினர். இதில் மாணவியை பலாத்காரம் செய்தது ஆரணி டவுன் கொசப்பாளையம் முனுசாமி தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி ஐயப்பன்(42) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஐயப்பனை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை திருவண்ணாமலை போக்சோ நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

3ம் வகுப்பில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு தவித்துக்கொண்டிருந்த மாணவி, ஆசிரியை விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் 8ம் வகுப்பில் குற்றவாளியை காட்டிக்கொடுத்து கைது செய்ய வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : ARAN ,
× RELATED ‘லவ் பண்ணலன்னா ஆசிட் வீசுவேன்’ இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது