×

திருப்பதியில் பயங்கரம் நகைக்காக மூதாட்டியை அடித்துக் கொன்ற லோகோ பைலட் கைது

*90 கிராம் தங்கம், ரூ.47 ஆயிரம் பறிமுதல்

திருப்பதி : திருப்பதியில் நகைக்காக மூதாட்டியை அடித்து கொன்ற லோகோ பைலட்டை போலீசார் கைது செய்து 90 கிராம் தங்கம், ரூ.47 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். திருப்பதி கிராமப்புற காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாய் நகர் பஞ்சாயத்து விஜயநகர் பகுதியை சேர்ந்தவர் ஜோதி(69), திருமணமாகாதவர். இவர் கடந்த 14ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது மர்மநபர் ஒருவர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார். மேலும் ஜோதியை கொடூரமாக தாக்கி கொலை செய்து, வீட்டில் இருந்த சுமார் 90 கிராம் தங்கம், ரூ.47 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு தப்பி சென்றார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ேமலும், வழக்குப்பதிவு செய்து சிறப்பு குழுக்கள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அதனடிப்படையில் நேற்று கிருஷ்ணபட்டணம் ரயில் நிலையம் அருகே ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் நெல்லூர் ஊரக மண்டலம், குடிபள்ளிபாடு கிராமத்தை சேர்ந்த ரூபேஷ்(36) என்பதும், கிருஷ்ணபட்டணம் ரயில் நிலையத்தில் லோகோ பைலட்டாகப் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. மேலும் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன்களால் பாதிக்கப்பட்ட ரூபேஷ், மூதாட்டியின் தங்க நகைகளைத் திருடி விற்பதன் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில், அவரை நோட்டமிட்டு குறிவைத்து தாக்கி கொலை செய்துள்ளார்.

இதற்காக தன்னுடன் பணிபுரிந்த சக லோகோ பைலட்டுக்குச் சொந்தமான ஸ்கூட்டரைத் திருடி, அதில் ஒரு போலி நம்பர் பிளேட்டைப் பொருத்தியுள்ளார். மேலும் கருப்பு புர்கா, முகத்துணி மற்றும் பெண்கள் அணியும் ஹெல்மெட் அணிந்து திருப்பதிக்கு வந்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் ரூபேஷிடம் இருந்து 90 கிராம் தங்க நகை, ரூ.47 ஆயிரம் பணம், கத்தி மற்றும் ஸ்கூட்டி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தனியாக வசித்து வந்த மூதாட்டியை நகை, பணத்திற்காக லோகோ பைலட் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Turupat ,Tirupati ,Tirupathi Rural Police Station ,
× RELATED காரைக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை