×

தூத்துக்குடி காவல்நிலையத்தில் வாலிபர் அடித்துக்கொலை இவ்வளவு அட்டூழியத்தையும் பண்ணிட்டு ஜாலியா விசிலடிச்சு படம் பார்க்குறாங்களே; என் குடும்பத்தினரை மிரட்டி மகன் உடலை வாங்க வைத்தனர்: தாய் கண்ணீர் பேட்டி

தூத்துக்குடி: இவ்வளவு அட்டூழியத்தையும் பண்ணிட்டு ஜாலியாக விசிலடித்து படம் பார்க்குறாங்களே… என்று தூத்துக்குடி காவல்நிலையத்தில் அடித்துக்கொல்லப்பட்ட வாலிபரின் தாய் கண்ணீர் மல்க பேட்டி அளித்து உள்ளார். தூத்துக்குடி, அமுதா நகரைச் சேர்ந்த நாகராஜ் மகன் அருணாசலம் (24). டாஸ்மாக் பாரில் வேலை செய்து வந்த இவர், சட்டவிரோதமாக மது விற்றதாகக் கூறி, தென்பாகம் போலீசாரால் கடந்த 17ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

4 போலீசார் சேர்ந்து அருணாசலத்தை அடித்துக் கொன்று விட்டதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து தாய் மற்றும் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அருணாசலத்தின் உறவினர்களிடம் மாஜிஸ்திரேட் விஜயராஜ், ஆர்டிஓ பிரபு ஆகியோர் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை 7.40 மணிக்கு மாஜிஸ்திரேட் விஜயராஜ், ஆர்டிஓ பிரபு ஆகியோர் முன்னிலையில் வாலிபர் அருணாசலத்தின் உடலை 3 பேர் கொண்ட டாக்டர் குழு பிரேத பரிசோதனை செய்தது.

இந்த பரிசோதனை முழுவதும் 2 வீடியோகிராபர்கள் மூலம் பதிவு செய்யப்பட்டது. காலை 9.40 மணி வரையில் பிரேத பரிசோதனை நடந்தது. பின்னர் உறவினர்களிடம் அருணாலசத்தின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, அருணாசலத்தின் தாய் பரமேஸ்வரி, மாஜிஸ்திரேட் விஜயராஜிடம் அளித்த புகாரில், ‘‘எனது மகன் அருணாசலத்தை கைது செய்த போலீசார் அவனை தாக்கினார்கள் என்று நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். அதனை அவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோவும் வெளியாகி உள்ளது.

எனவே என் மகன் சாவுக்கு காரணமான போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். பின்னர் அவரது உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு ஓரிரு நிமிடங்கள் மட்டுமே அஞ்சலிக்காக வைத்துள்ளனர். பின்னர் அவசரமாக தகனம் செய்யும் இடத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் சென்று மாலைக்குள் அருணாசலத்தின் உடல் அவசர அவசரமாக தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், அருணாசலத்தின் தாய் பரமேஸ்வரி கண்ணீர் மல்க அளித்த பேட்டி: நடந்த சம்பவம் அனைத்தையும் பார்த்துவிட்டு, இவ்வளவு அட்டூழியத்தையும் செய்துவிட்டு ஜாலியாக தியேட்டரில் உட்கார்ந்து விசிலடித்து படம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு (தவெக அரசு) மனசாட்சி இல்லையா? எவ்வளவு கை தட்டி விசில் அடித்துக் கொண்டு விசில் சின்னத்திற்கு ஓட்டு கேட்டார்கள்? அவர்கள் நல்ல அழகாக படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி பண்ணலாமா.. அவங்க குடும்பத்தில் யாராவது இறந்திருந்தால் இப்படி தியேட்டரில் விசில் அடித்துக் கொண்டிருப்பார்களா? இந்த அமைச்சர் படம் பார்த்துட்டு இருப்பாரா? துண்டை போட்டு உட்கார்ந்து படம் பார்த்துக் கொண்டிருக்கிறார். நல்ல புத்தி இல்லையா? கோடி, கோடியாக பணம் கொடுத்தாலும் எனக்கு பணம் தேவையில்லை. படிப்பறிவில்லாத என் குடும்பத்தினரை மிரட்டி என் மகன் உடலை வாங்க வைத்துள்ளனர். இரண்டரை மணி ேநரத்திற்குள் என் மகன் உடலை நானே பார்க்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசும் அளவிற்கு மாற்றிவிட்டார்கள். என்னால் தாங்க முடியவில்லை என்று கூறினார்.

* விஜய்க்கு ஓட்டு போட்ட பலனை இப்போது அனுபவிக்கிறார்கள்: – நயினார் நாகேந்திரன்
பலியான வாலிபர் அருணாசலத்தின் குடும்பத்தினரை பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: அருணாசலம் தான் அந்த குடும்பத்திற்கு வாழ்வாதாரம். அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அடித்துக் கொன்று இருக்கிறார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட காவல்துறை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்த குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். சமீபத்தில் நாகர்கோவிலில் இதே போன்று காவல்துறை அடித்து சபரி இறந்திருக்கிறார். இது 2வது நிகழ்ச்சி அல்ல தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தென்பாகம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்து உள்ளார். காவல்துறையினர் அத்துமீறி, மனிதாபிமான மற்ற முறையில் தாய் தன் முன்னே மகன் மீது தடியடி நடத்தி இருக்கிறார்கள்.

மார்க்கண்டேயன் எம்எல்ஏவை கைது செய்யும்போது கூட காவல் துறையினர் நாக்கை துருத்திக்கொண்டு பத்திரிகையாளர்களை மிரட்டி உள்ளனர். முதல்வர் விஜய்யின் விசில் சின்னத்திற்கு ஓட்டு போட்டார்கள். அதனுடைய பலனை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். சாத்தான்குளம் வியாபாரிகள் அடித்து கொல்லப்பட்டு இன்று போலீசார் எவ்வளவு கஷ்டப்பட்டு வருகிறார்கள். இப்போது ஆரம்பத்திலேயே ஆரம்பித்துள்ளது. இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை. தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Thoothukudi ,police station ,Nagaraj ,Arunachalam ,Amuda Nagar, Thoothukudi ,TASMAC ,
× RELATED பழநி நில முறைகேட்டில் சஸ்பெண்ட் ஆன...