திருவிடைமருதூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூரில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பேரூராட்சி அலுவலகத்தை திறந்து வைத்து, ரூ.20.58 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற கட்டிடங்களை காணொலி காட்சி வாயிலாக அமைச்சர்கள் ஷாஜகான், வினோத் ஆகியோர் திறந்து வைப்பதாக திட்டமிடப்பட்டு இருந்தது. இவ்விழா காலை 8:30 மணிக்கு நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதற்காக மாவட்ட கலெக்டர் ரேவதி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் காலை 8:10 மணிக்கு வேப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். விழாவுக்காக வைக்கப்பட்ட பேனரில் அரசின் விதிமுறைப்படி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஷாஜகான் பெயர் முதலில் இருந்தது. இதையறிந்த தவெகவை சேர்ந்த வேளாண்துறை அமைச்சர் வினோத், ‘‘நான் தொகுதி பொறுப்பு அமைச்சர் எனது பெயர்தான் முதலில் இருக்க வேண்டும். ஷாஜகான் பெயரை ஏன் முதலில் போட்டுள்ளீர்கள்.
அதனால் நான் விழாவிற்கு வர மாட்டேன்’’ என அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், வேளாண்துறை அமைச்சர் வினோத்திடம் செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு விழாவுக்கு வரவழைக்க சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடினர். ஆனால், அமைச்சர் வினோத் தனக்கு காணொலி வாயிலாக கூட்டம் இருப்பதாகவும், எனவே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து அனைத்து கட்டிடங்களும் திறந்து வைக்கிறேன். இந்த நிகழ்ச்சியை `கேன்சல்’ செய்து விடுங்கள் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், அமைச்சர் ஷாஜகான் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்காக ஆடுதுறையில் உள்ள வீட்டில் தயார் நிலையில் காத்திருப்பதாக, அமைச்சர் வினோத்திடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வேப்பத்தூர் பேரூராட்சி அலுவலக கட்டிடத்தை மட்டும் அவர் திறந்து வைத்துவிட்டு செல்லட்டும் என தெரிவித்ததாக தெரிகிறது. இதனையடுத்து சிறுபான்மை துறை அமைச்சர் ஷாஜகானை கட்டிடத்தை திறந்து வைக்க வருமாறு அதிகாரிகள் அழைத்ததை தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு, பேரூராட்சி கட்டிடத் திறப்பு விழாவிற்கு வந்த அமைச்சர் ஷாஜகான் கட்டிடத்தை மட்டும் ரிப்பன் வெட்டி திறந்தார். ஆனால் குத்துவிளக்கு ஏற்றவில்லை.
மேலும், காணொலி காட்சி மூலம் கட்டிடங்களை திறக்க ஏற்பாடு செய்திருந்த அலுவலக அறைக்குள் நுழைய சென்ற அமைச்சர் ஷாஜகானிடம், வேளாண் துறை அமைச்சர் வினோத் காணொலி வாயிலாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து மற்ற கட்டிடங்களை திறந்து வைப்பதாக தெரிவித்துவிட்டார்.
எனவே அங்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.இதன் பிறகு, அமைச்சர் வினோத் காணொலி மூலம், தஞ்சாவூரில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மதியம் 12 மணிக்கு மற்ற கட்டிட திறப்பு விழாவை நடத்தி தருவதாக கலெக்டரிடம் கூறி நிகழ்ச்சியை மாற்றி அமைத்தார். அமைச்சர்களின் பனிப்போரால் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் கவலையடைந்தனர்.
