சென்னை: தமிழ்நாட்டில் 15 நாட்கள் இடைவெளியில் அரிசி விலை மீண்டும் உயர்ந்தது. இதன் மூலம் பொன்னி அரிசி கிலோ ரூ.80, இட்லி அரிசி ரூ.50 ஆக விலை உயர்ந்தது. இந்த தொடர் விலையேற்றத்தால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஓராண்டு அரிசி தேவை 91 லட்சம் டன்னான உள்ளது. இதில், 75 லட்சம் டன் வரை தமிழக விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மீதி தேவைக்கு ஆந்திரா, கர்நாடகா, மேற்குவங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வருகிறது.
அதே நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலானோர் கர்நாடக பொன்னி அரிசி வகைகளை தான் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இதற்காக கர்நாடகாவில் இருந்து பொன்னி அரிசி அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. கர்நாடகாவில் நடப்பாண்டு விளைச்சல் என்பது வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரிசி இறக்குமதி என்பது அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. விளைச்சல் பாதிப்பை சமாளிக்க அம்மாநில வியாபாரிகள் தமிழகத்தில் விளைவிக்கப்படும் நாட்டுப் பொன்னி ரகத்தை வாங்கி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் டீசல் விலை உயர்வு மற்றும் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பால் லாரி வாடகை உயர்வு, உரங்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் அரிசி விலை என்பது எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அரிசி விலை 15 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது முறையாக அதிரடி விலையேற்றத்தை கண்டுள்ளது. அதாவது, கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் 1 கிலோ ரூ.55 ரூபாய் விற்கப்பட்ட கர்நாடக பொன்னி கடந்த 15 நாட்களுக்கு முன்னர் ரூ.10 விலை உயர்ந்து கிலோ ரூ.65க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த விலை என்பது நடுத்தர மற்றும் ஏழை மக்களை கடுமையாக பாதித்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மேலும் அரிசி விலை ரூ.15 உயர்ந்துள்ளது. இதன் மூலம் தற்போது அரிசி பொன்னி அரிசி ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. 25 கிலோ கொண்ட ஒரு சிற்பம் ரூ.350 முதல் 500 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இட்லிக்கு பயன்படுத்தப்படும் அரிசி ரூ.35க்கு விற்கப்பட்டது. இது கடந்த 15 நாட்களுக்கு முன்னர் ரூ.40 ஆக அதிகரித்தது. இது தற்போது 2வது முறையாக ரூ.10 உயர்ந்து ரூ.50 ஆக விலை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘கர்நாடகாவில் நெல் விளைச்சல் குறைந்து விட்டதால் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு விலை ஏற்றம் கண்டுள்ளது. இதன் காரணமாக அரிசி லோடு வருவது வெகுவாக குறைந்து விட்டது. இத்தகைய தட்டுப்பாட்டை சமாளிக்க கர்நாடக மாநில வியாபாரிகள் தமிழகத்தில் விளைவிக்கப்படும் நாட்டுப் பொன்னி ரகத்தை ஏற்றுமதி செய்து வருகிறார்கள். இதன் காரணமாக ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நாட்டுப் பொன்னி தற்சமயம் ரூ.80 ஆக விலை ஏற்றம் கண்டுள்ளது.
கர்நாடகாவில் நிலைமை சரியாகும் வரை இந்த விலையேற்றம் என்பது இருந்து கொண்டு தான் இருக்கும்” என்றனர். ஏற்கனவே அத்தியாவசிய பொருட்கள் தாறுமாறாக உயர்ந்து பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் அரசி விலை 15 நாட்களுக்கு ஒரு முறை உயர்ந்து வருவது மக்களை மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதே நேரத்தில் அரிசி பதுக்களில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
