கரூர் நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலையை எதிர்த்து புதிய வழக்கு: அரசுக்கு நீதிபதிகள் கண்டிப்பு

மதுரை: கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கியதை எதிர்த்த வழக்கு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதோடு வரும் வெள்ளிக்கிழமைக்குள் அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட் அறிவுறுத்தியது. கரூரில் கடந்தாண்டு செப்.27ல் தவெக சார்பில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் விஜய் கலந்து கொண்டார். அப்போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இவர்களின் குடும்பத்தினருக்கு தற்போது தமிழ்நாடு அரசு சார்பில் வேலை வழங்கப்பட்டது. இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தீரன் திருமுருகன், மனிதநேய ஜனநாயகக் கட்சி துணைச்செயலாளர் சீனி அகமது ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல், ‘தற்காலிக பணி நியமனம் வழங்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘கரூர் கூட்டநெரிசல் சிக்கி உயிரிழந்த 41 பேரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கவோ, நிர்வாக நடவடிக்கை எடுக்கவோ கூடாது என உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், ‘பதில் மனு முழுவதும் தயாராகவில்லை. இதேபோல ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் உள்ளன. அனைத்தையும் சேர்த்து வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு நீதிபதிகள், ‘முதல் மாத ஊதியம் பெறுவதற்கு முன்பாக வழக்கை விசாரிக்க வேண்டும்’ என கண்டித்த னர். மேலும், வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதில் மனுவைத் தாக்கல் செய்ய அறிவுறுத்தி வழக்கை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், அரசுத் தரப்பில் 31 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 29 பேர் பணியில் சேர்ந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு நீதிபதிகள், ‘அனைத்தும் நீதிமன்ற இறுதி முடிவுக்கு உட்பட்டதே என குறிப்பிட்டு வழக்கை ஜூலை 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: