×

ஆண்டிபாளையத்தில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் தர்ணா

திருப்பூர் : செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆண்டிபாளையம் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இதுபோல் பல பனியன் நிறுவனங்கள் உள்ளன.

இதில் ஏராளமான பொதுமக்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் எங்கள் பகுதியில் உள்ள காலி இடத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.

இதில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சினால் பலரும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதியும், மாணவ மாணவிகளின் நலன் கருதியும் இந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

ஆதித்தமிழர் ஜனநாயக பேரவையினர் கொடுத்த மனு: உடுமலை தும்பலப்பட்டியை சோ்ந்த எங்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே விரைவாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றனர்.

வஞ்சிபாளையம் அரசு உயா்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கொடுத்த மனு: வஞ்சிபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி 2012ல் நடுநிலைப்பள்ளியில் இருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதுவரை 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. இந்நிலையில் மேல்நிலைப்பள்ளிக்காக தினமும் பல கி.மீட்டா் தூரத்திற்கு மாணவ மாணவ மாணவிகள் சென்று வருகிறார்கள். எனவே இதனை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்றிருந்தனர்.

புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனு: அவினாசி வஞ்சிப்பாளையம் ஸ்ரீவாரி கார்டன் பகுதியில் சட்டவிரோதமாக சிலர் சாயக்கழிவுகளை ஆற்றில் திறந்து விடுகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுகிறது.இதுபோல் மீன்களும் செத்து மிதக்கின்றன. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றிருந்தனர்.

சின்னமோளப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் கொடுத்த மனு: தாராபுரம் சின்னமோளப்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. பொதுமக்களின் தேவைக்கு கூட குடிநீர் கிடைப்பது இல்லை. இதனால் விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எனவே எங்களுக்கு குடிநீர் வினியோகம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றிருந்தனா்.

இ.எஸ்.ஐ. மருத்துவமனை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனு: எங்கள் பகுதியில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியை சோ்ந்த பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகிறோம். எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றிருந்தனர்.

அருள் ஜோதி நகரை சோ்ந்த பொதுமக்கள் கொடுத்த மனு: எங்கள் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகளவு நடக்கிறது. இதனால் வெளிபகுதியை சோ்ந்த பலரும் வந்து செல்கிறார்கள். சிலா் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே கஞ்சா விற்பனையில் ஈடுபடுகிறவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றிருந்தனா்.

செட்டிபாளையத்தை சேர்ந்த சாந்தாமணி கொடுத்த மனுவில்,“எனது மாமனார் நாராயணசாமிக்கு பாத்தியப்பட்டு கோவை வடக்கு வட்டம், சின்னவேடம்பட்டி கிராமம் 7.35 செண்ட் இடம் உள்ளது. இதில் வாரிசான எனது கோவிந்தராஜூ காலமாகிவிட்டார். எனது கணவரின் பங்கு இடத்தை நான் உயிரோடு இருக்கும்போது பொய்யான இறப்பு சான்றிதழ்கள் காட்டி எனது மகன் ராஜ்குமார், மனைவி சத்யா என்ற பெயருக்கு மாற்றி உள்ளார்.

நான் உயிருடன் இருக்கும் பொழுது எனது பெயரில் பொய்யான இறப்பு சான்றிதழ் பெற்ற எனது மகன் ராஜ்குமார் மீது தக்க நடவடிக்கை எடுத்து எனது பெயரில் உள்ள இறப்பு சான்றை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சரவணன் அளித்துள்ள மனுவில்,“திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் எவ்வித முறையான அனுமதியின்றி தனியார் நிறுவனம் விளம்பர போர்டுகள் வைத்துள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. தலைக்கு மேலாக தொங்குகின்ற சிக்னல் விளம்பர போர்டுகளை முழுமையாக அகற்ற வேண்டும்” என்றார்.

Tags : Collector ,Andipalayam ,Tiruppur ,Tiruppur Collector ,Public Grievance Redressal Day ,
× RELATED பொள்ளாச்சியில் நீர்வளத்துறையில் அறிவிக்கப்பட்ட 22 டெண்டர்கள் ரத்து