*எஸ்பியிடம் வழங்கினர்
சித்தூர் : சித்தூர் எஸ்பி அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 51 பேர் புகார் மனுக்களை எஸ்பியிடம் வழங்கினர்.சித்தூர் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் எஸ்பி துஷார் துடி தலைமையில் நேற்று நடந்தது.
இதில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி எஸ்பியிடம் வழங்கினர். அவ்வாறு மனுக்களை பெற்ற எஸ்பி துஷார் துடி, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மனுதாரர்களுக்கு உறுதி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: மக்கள் பிரச்னைகளை தீர்க்கும் களமாக காவல்துறை செயல்பட்டு வருகிறது. எனவே சித்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள், பொதுமக்கள் வழங்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புகார்கள் மீது மெத்தனம் காட்ட கூடாது. பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், அனைத்தையும் சட்டப்படி விசாரணை நடத்தி மனுதாரர்களின் பிரச்னைகளை விரைந்து தீர்வு காண வேண்டும் என காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சித்தூர் எஸ்பி அலுவகத்தில் நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் மொத்தம் 51 புகார் மனுக்கள் பெறப்பட்டன.
அவற்றின் விவரங்கள்: மோசடி -2, குடும்ப தகராறுகள்- 8, துன்புறுத்தல்- 6, நில தகராறுகள்- 21, பண தகராறுகள்- 10, திருட்டு- 1, சொத்து தகராறுகள்- 3 என மொத்தம் 51 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
இதையடுத்து எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து பெற்றப்பட்ட புகார் மனுக்கள், மாவட்டத்தில் உள்ள சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க எஸ்பி துஷார் துடி உத்தரவிட்டார். அப்போது நகர டிஎஸ்பி சாய்நாத் உள்பட காவல் துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
