டெல்லி: டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் உலகளாவிய அளவில் இந்தியாவின் நிலை தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. இதனை மெய்ப்பிக்கும் விதமாக இந்தியாவில் UPI பயன்படுத்துவோரின் மொத்த எண்ணிக்கை 55.49 கோடியாக அதிகரித்து உள்ளது.
2026, ஜூன் மாத நிலவரப்படி நாட்டில் மொத்தம் 55.49 கோடி பயனர்கள் UPI தளத்தில் இணைந்துள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் மக்களவையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்து இருக்கும் ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, 2025-26 நிதியாண்டில் UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 24,162 கோடியாகவும், அவற்றின் மொத்த மதிப்பு 314 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். UPI அடிப்படையிலான பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பானதாகவும் வெளிப்படையானதாகவும் மாற்ற அரசு, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) ஆகியவை ஒன்றிணைந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
அதே போல தனிநபர்களுக்கு இடையிலான பணப் பரிமாற்றம் மற்றும் தனிநபர்-வணிகர் இடையிலான பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில், பல நாடுகளின் கட்டண சேவைகளுடன் UPI இணைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்து உள்ளார். கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் தினமும் சராசரியாக 75.7 கோடி (757 மில்லியன்) பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. UPI தொழில்நுட்பம் தற்போது சிங்கப்பூர், பிரான்ஸ், UAE, இலங்கை, மொரிஷியஸ் உட்பட 12 வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் வெளிநாடுகளிலும் எளிதாக பணப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடிவது குறிப்பிடத்தக்கது.
