×

டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூண்டோடு வெளிநடப்பு: நாடாளுமன்றம் இன்று கூடும் நிலையில் நீட் முறைகேடு, கட்சி தாவல் பிரச்னைகளை எழுப்ப வாய்ப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் டெல்லியில் நேற்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தன. இந்த கூட்டத்தொடரில் நீட் முறைகேடு, எதிர்க்கட்சி எம்.பிக்களின் கட்சித்தாவல் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதால் இரு அவைகளிலும் அனல் பறக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மொத்தம் 19 அமர்வுகளாக இந்தக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்திருந்தார். இந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கலாக உள்ள நிலையில், ஒன்றிய அரசுக்கு எதிராக நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு, மேற்காசிய தாக்குதல்களில் இந்திய மாலுமிகள் உயிரிழப்பு, விலைவாசி உயர்வு, எதிர்க்கட்சி எம்.பிக்களின் கட்சித்தாவல் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இதனால் இந்த கூட்டத்தொடர் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ்-திமுக இடையேயான கூட்டணி முறிவு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு போன்ற அரசியல் ரீதியிலான மாற்றங்களுக்கு இடையே நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சமீபத்தில் ஒன்றிய அரசால் பிறப்பிக்கப்பட்ட சில அவசர சட்டங்களுக்கு மாற்றான மசோதாக்கள், இந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. முக்கியமாக, வருமான வரி சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட உள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதாவும் அறிமுகப்படுத்தப்படும். தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டத்திருத்த மசோதா, பிறப்பு-இறப்பு பதிவு சட்டத்திருத்த மசோதா உள்ளிட்டவையும் தாக்கலாக உள்ளன. நாடாளுமன்ற கூட்டம் சுமூகமாக நடைபெறுவதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை என்பதால் ஒன்றிய அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்துவது வழக்கம்.

அதன்படி மழைக்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கியது. இதில், ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், திமுகவின் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, அதிமுகவின் தம்பித்துரை, தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20 மக்களவை எம்பிக்கள் தனியாக பிரிந்து, ‘தேசிய குடிமக்கள் கட்சி’(என்சிபிஐ) என்ற சிறிய கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். இந்த 20 எம்பிக்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திரிணாமுல் தலைமை அளித்த மனுக்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவின் பரிசீலனையில் நிலுவையில் உள்ளன. இதற்கு சபாநாயகர் இன்னும், பிளவாகவோ அல்லது தனி அங்கீகாரமாகவோ முறைப்படி ஒப்புதல் அளிக்கவில்லை.

இருப்பினும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் இந்த புதிய குழுவிற்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க தனியாக அழைப்பு விடுத்தது. இதேபோல, உத்தவ் சிவசேனா கட்சியை சேர்ந்த 6 மக்களவை எம்பிக்கள் பிரிந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்த விவகாரத்திலும், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பிக்கள் 7 பேர் பாஜ கூட்டணிக்கு மாறிய விவகாரத்திலும், அதிருப்தி எம்பிக்களுக்கு ஆதரவாக தனி இருக்கைகளை ஒதுக்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இதை கண்டித்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா(யுபிடி), ஆம்ஆத்மி, சமாஜ்வாடி, ஜேஎம்எம் இடதுசாரிகள் மற்றும் திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி எம்பிக்களும் வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் எதிர்க்கட்சியினர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்யும் நோக்கில் வெளிநடப்பு செய்ததாகவும் எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர். நாடாளுமன்ற கூட்ட தொடர் தொடங்குவதற்கு முன்பே எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்து எதிர்ப்பை பதிவு செய்ததால் இன்று முதல் அனல் பறக்கும் என்பதில் ஐயமில்லை.

வெளிநடப்புக்கு பின் திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா கூறுகையில், ‘‘சட்டவிதிகளின்படி திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த அந்த 20 எம்பிக்கள் தனியாக செயல்பட இடமில்லை. விதிகளை மீறி ஒன்றிய அரசு அவர்களுக்கு அழைப்பு விடுத்ததை எதிர்த்து அடையாள போராட்டமாக நாங்கள் வெளிநடப்பு செய்தோம். சபாநாயகர் எந்த இணைப்புக்கும் ஒப்புதல் அளிக்கவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் தகுதி நீக்க மனுக்களைத் தாக்கல் செய்துள்ளது. அவை இன்னும் நிலுவையில் உள்ளன. அது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

20 எம்பி.க்களைத் தகுதி நீக்கம் செய்யாவிட்டால், நீதிமன்றத்தை கட்சி அணுகக்கூடும் என்றார். ஆம் ஆத்மி எம்பி என்.டி.குப்தா கூறுகையில்,‘‘ தங்களது கட்சியின் மாநிலங்களவை எம்பிக்கள் சிலரை கடத்தி, அவர்களுக்கு அவையில் தனி இருக்கை ஒதுக்கியுள்ளது. இது ஜனநாயக படுகொலை’’ என்றார். அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின் காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகய், அயோத்தி கோயில் நன்கொடை திருட்டு குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்னையை எழுப்புவோம். எத்தனால், மாணவர் விவகாரங்கள் மற்றும் மணிப்பூர் நிலைமை குறித்து பிரச்னை எழுப்பப்படும்.

இந்த பிரச்னைகளில் இருந்து அரசு ஓட முயன்றால் அரசுக்கு தான் பாதிப்பு ஏற்படும் என்றார். சமாஜ்வாடி எம்பி தர்மேந்திர யாதவ்,ராமர் கோயில் நன்கொடை திருட்டில் அரசாங்கம் தனது பொறுப்பில் இருந்து தப்பி ஓட முடியாது என்றார். ஒன்றிய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில் என்சிபிஐயில் சேர்ந்துள்ள திரிணாமுல் அதிருப்தி எம்பிக்கள் தங்களுக்கு தனி இருக்கைகளை ஒதுக்க வேண்டும் என சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ளனர். அவர்களுடைய கோரிக்கைளை புறந்தள்ளி விட முடியாது. நாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

* டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு
நாடாளுமன்ற கூட்டத்தொடர் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி)இன்று நடத்தும் பேரணியை முன்னிட்டு, டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வட்டாரங்கள் கூறுகையில் டெல்லிக்குள் நுழையும் ஒவ்வொரு வாகனமும் முழுமையாகச் சோதிக்கப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் தொழில்பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பதற்றமான பகுதிகள் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, என்றன.

* பாதுகாப்பு ஒத்திகை
நாடாளுமன்றம் இன்று கூடுவதையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த வீரர்களின் கூட்டு பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடந்தது. இதில் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை(சிஐஎஸ்எப்), டெல்லி போலீஸ், சிஆர்பிஎப், தேசிய பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் நாடாளுமன்ற பாதுகாப்பு பிரிவை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.

பாதுகாப்பு படையினரின் கூட்டு பாதுகாப்பு ஒத்திகையை சிஐஎஸ்எப் இயக்குனர் ஜெனரல் பிரவீர் ரஞ்சன் பார்வையிட்டார். மேலும் அவர் சபாநாயகர், நாடாளுமன்ற செக்ரட்டரி ஜெனரல் ஆகியோரை சந்தித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

* வந்தே மாதரம் மசோதா இன்று தாக்கல்
மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, வந்தே மாதரம் தேசிய பாடலை அவமதிப்பதை குற்றச் செயலாக ஆக்கும் மசோதாவை மாநிலங்களவையில் கொண்டுவர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. தேசிய கவுரவத்திற்கு அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026, மாநிலங்களவையின் நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதனை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்த உள்ளார்.

Tags : Delhi ,NEW DELHI ,M. ,
× RELATED இந்தியாவில் முதல் டெங்கு தடுப்பூசி...