சென்னை: விராலிமலை தொகுதி வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
விராலிமலை தொகுதியில் வாக்காளர்களுக்கு ஃப்ரிட்ஜ் வாங்க கூப்பன் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக வேட்பாளர் செல்லப்பாண்டியன், சி.விஜயபாஸ்கருக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் மேற்கண்ட உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்து உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதை எதிர்த்து, அவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது சி.விஜயபாஸ்கர் தரப்பு வாக்காளர்களுக்கு தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி தலா ரூ.10,000 மற்றும் ரூ.2,000 மதிப்பிலான டோக்கன்கள்/கூப்பன்களை விநியோகித்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை அளிக்க இந்த முறைகேடான கூப்பன்கள் வழங்கப்பட்டதாக செல்லப்பாண்டியன் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இதுபோன்ற முறைகேடுகளின் மூலம் சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளதால், அவரது வெற்றியைச் செல்லாது என அறிவிக்க திமுக வேட்பாளர் செல்லப்பாண்டியன் தனது மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து சி.விஜயபாஸ்கர் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஆகியோர் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
