கோத்தகிரி : கோத்தகிரி அருகே உள்ள அரவேனு, கொட்டக்கம்பை மற்றும் குஞ்சப்பனை பகுதிகளில் ஈ தொல்லையால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோத்தகிரி அருகே கடந்த சில நாட்களாக அரவேனு பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் நூற்றுக்கணக்கான சிறிய அளவிலான ஈக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இவைகள் வீடு மற்றும் கடைகளில் புகுந்து சுற்றி வருகின்றன. மேலும் இவை அடிக்கடி மனிதர்களின் கண்களில் புகுந்து விடுகிறது.
இதுமட்டுமின்றி உணவுப் பொருட்களிலும் விழுந்து இறந்து விடுகின்றன. முன்னதாக ஈக்கள் தொல்லை கடந்த சில வாரங்களாக குஞ்சப்பனை மற்றும் கொட்டகம்பை பகுதியில் இருந்து வந்த நிலையில் தற்போது அரவேனு பகுதியிலும் வெகுவாக அதிகரித்து காணப்படுகிறது.
சாலையில் நடந்து செல்லும் போது கூட தலைக்கு மேல் இந்த வகையான ஈக்கள் வட்டமிடுவதுடன், கண், வாய் மற்றும் மூக்கில் புகுந்து விடுவதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
பெரும்பாலான கடைகள் மற்றும் வீடுகளில் வெள்ளைத் தாள்களில் எண்ணெய்யை தடவி வைத்து, அந்த ஈக்களை கட்டுப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் அவற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடிவதில்லை.
எனவே சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இந்த ஈக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஊராட்சி நிர்வாகம் குப்பைத் தொட்டிகள் மற்றும் கால்வாய் உள்ள இடங்களில் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
