* 90 பேரில் 45 பேர் மட்டுமே இருப்பதால் கூடுதல் பணிச்சுமையால் தவிப்பு
* காலியிடத்தால் அவசர சிகிச்சைக்காக நெல்லைக்கு கொண்டு செல்லும் அவலம்
தென்காசி : தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பணிச்சுமையால் மருத்துவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். சிறப்பு மருத்துவர்கள் பல துறைகளில் இல்லாத காரணத்தால் நோயாளிகள் சிகிச்சைக்காக நெல்லைக்கு செல்ல வேண்டியுள்ளது.
தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 2000 முதல் 2,500 வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். 256 படுக்கைகளுடன் துவங்கிய தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தற்போது 557 படுக்கைகள் உள்ளது.
மாதம் ஒன்றுக்கு எலும்பு மருத்துவ பிரிவில் 100 அறுவை சிகிச்சைகளும், பொது அறுவை சிகிச்சைகளில் மாதம் ஒன்றுக்கு 110 முதல் 200 அறுவை சிகிச்சைகளும், மகப்பேறு பிரிவில் 250 முதல் 300 அறுவை சிகிச்சைகளும், 150 கண் அறுவை சிகிச்சைகளும், 30 முதல் 40 காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால் பணியில் 45 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். 256 படுக்கைகள் 557 ஆக அதிகரித்த போதிலும் டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. மீண்டும் படுக்கைகளில் எண்ணிக்கையை 808 ஆக அதிகரிப்பதற்குரிய அடிப்படை கட்டமைப்புகள் தயார் நிலையில் இருக்கிறது. வெளி நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் தங்கி சிகிச்சை வரும் படுக்கைகளின் எண்ணிக்கை வைத்து பார்க்கும் போது கிட்டத்தட்ட 30 முதல் 50 மருத்துவர்கள் கூடுதலாக தேவைப்படுகின்றனர்.
தற்போது பணியாற்றும் 45 மருத்துவர்களில் நாள் ஒன்றுக்கு வெளி நோயாளிகள் பிரிவில் 15 மருத்துவர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். இது தவிர அறுவை சிகிச்சை மருத்துவர்கள் நான்கு பேர், எம்டி பொது மருத்துவம் நான்கு பேர், மகப்பேறு மருத்துவர்கள் ஐந்து பேர், எலும்பு முறிவு மருத்துவர்கள் ஐந்து பேர், இரண்டு கண் மருத்துவர்கள், ஐந்து குழந்தைகள் நல மருத்துவர்கள், நான்கு காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர்கள், ஒரு தோல் பிரிவு சிறப்பு மருத்துவர். இரண்டு மனநல சிறப்பு மருத்துவர்கள் ஆகியோர் உள்ளனர்.
தோராசிக் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சை என்று அழைக்கப்படும் இருதயவியல் சிகிச்சை, காஸ்ட்ரோ என்ட்ராலஜி எனப்படும் வயிறு பகுதி சிறப்பு மருத்துவம், சிறுநீரக சிறப்பு மருத்துவர், நரம்பியல் சிறப்பு மருத்துவர் ஆகிய சிறப்பு மருத்துவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் இல்லை.
இவை எல்லாம் இல்லாத காரணத்தால் மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருந்த போதும் தலையில் ஏற்படும் காயம், இருதய சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை, வயிற்றுப் பகுதி சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே சுகாதாரத்துறை, தென்காசியில் அரசு மருத்துவக் கல்லூரி அமையும் வரை காத்திருக்காமல் உடனடியாக சிறப்பு மருத்துவர்கள் உள்பட கூடுதலாக 40 முதல் 50 மருத்துவர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேம்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக இருக்கும் அவலம்
தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருந்தாலும் சிறப்பு சிகிச்சைகள், தோராசிக் சிகிச்சைகள், சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சைகள் உள்ளிட்டவற்றுக்கு தேவையான மருத்துவர்களை நியமிக்காத வரை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை என்பது பெயரளவுக்கு மேம்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற செயல்பாடுகள் மட்டுமே இருக்குமே தவிர மாவட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளான அறுவை சிகிச்சைகளை பூர்த்தி செய்யும் மருத்துவமனையாக இருக்காது என்பது பரவலான கருத்தாக உள்ளது.
எந்தெந்த சிகிச்சைகளுக்கு மருத்துவர்கள் தேவை
இருதயவியல் அறுவை சிகிச்சை பிரிவில் எம்டி இருதயவியல் மற்றும் எம்எஸ் இருதயவியல் சிறப்பு மருத்துவர்கள் என மொத்தம் நான்கு பேர் வேண்டும். நெப்ராலஜி மற்றும் யூராலஜி என்று அழைக்கப்படும் சிறுநீரக சிறப்பு சிகிச்சை பிரிவில் இரண்டு எம்டி மருத்துவர்கள், இரண்டு சர்ஜரி மருத்துவர்கள் என நான்கு பேர் வேண்டும்.
கேஸ்ட்ரோ என்ட்ராலஜி எனப்படும் வயிறு பகுதி சிறப்பு மருத்துவர் பிரிவில் எம்டி மருத்துவர்கள் இருவரும், சர்ஜரி மருத்துவர்கள் இருவரும் என நான்கு மருத்துவர்கள் வேண்டும். நரம்பியல் பிரிவில் எம்டி மருத்துவர் இருவரும், அறுவை சிகிச்சை மருத்துவர் இருவரும் என நான்கு பேர் வேண்டும். இது தவிர ஒவ்வொரு பிரிவுக்கும் தொழில்நுட்ப பணியாளர்கள் வேண்டும்.
