பெரியநெற்குணம் கிராமத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல்

*பாசி கலந்து வரும் தண்ணீரால் வேதனை

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பெரிய நெற்குணம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தற்போது பழுதடைந்துள்ளதால், தொட்டியில் இருந்து வரும் தண்ணீர் பாசிகள் சேர்ந்து தூய்மையற்ற குடிநீராக வருவதாக குடியிருப்பு வாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் போர்வெல் மோட்டார் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவதால் தண்ணீர் பிடிப்பதில் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். ஒரு சில நேரங்களில் குடிநீர் கிடைக்காமல் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று வயல்வெளி, அல்லது அருகில் உள்ள பகுதிக்கு சென்று பம்ப்செட்டில் இருந்து தண்ணீர் பிடித்து வருவதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் ஒன்று திரண்டு கூறுகையில், எங்கள் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பாசி கலந்து தூய்மையற்ற தண்ணீர் வருகிறது.

ஒரு சில நேரங்களில் நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் வராமல் நீண்ட தூரம் சென்று குடிநீர் பிடித்து வருவதாக வேதனையோடு கூறுகின்றனர். எனவே இப்பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியை முழுமையாக தூய்மை பணி செய்து சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது புதிய நீர்த்தேக்க தொட்டி அமைத்து தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: