திராவிட அரசியலுக்கு எதிரான வெறுப்பு அரசியல் தொடர்ந்து பரப்பப்படுகிறது: திருவண்ணாமலையில் திருமாவளவன் பேச்சு

திருவண்ணாமலை, ஜூலை 12: திராவிட அரசியலுக்கு எதிரான வெறுப்பு அரசியல் தொடர்ந்து பரப்பப்படுகிறது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழ் தேசிய மாநாடு தொடர்பான மண்டல செயற்குழு கூட்டம் திருவண்ணாமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. அதில், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், விசி கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது:

கூட்டணி ஆட்சி பற்றி முதன் முதலில் பொது விவாதத்தை தொடங்கியது விசிக. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று ஆரம்பத்திலேயே அறிவித்திருந்தோம். தமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான் என்பதற்கான வாசலை திறந்து வைத்திருக்கிறோம். தமிழ்நாட்டு அரசியலில் ஒரு கட்சி ஆட்சி என்ற நிலை இனி வராது. தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வளர்ந்து இருக்கிறோம். ஒரு கட்சி கூட்டணியில் வென்று, இன்னொரு கூட்டணி அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து பலரும் விமர்சிக்கின்றனர். தயங்கி தயங்கித்தான் இந்த முடிவை எடுத்தோம். எங்களுக்கு பதவியில் நாட்டம் இல்லை. இந்த தேர்தலில் சாதி, மதம், பணத்தால் திமுக, அதிமுக அணிகள் தோற்கடிக்கப்படவில்லை. திராவிட இயக்க அரசியலுக்கு எதிரான வெறுப்பு அரசியல் தொடர்ந்து தமிழ்நாட்டில் பரப்பப்படுகிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுபோன்ற வெறுப்பு அரசியல் பரப்பப்பட்டது. திமுக, அதிமுக இரு துருவங்களாக ஆகிவிட்ட பிறகும் இரு கட்சிகளுக்கும் எதிராக தொடர்ந்து தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகிறது. துரோகம், சூழ்ச்சி, வஞ்சகம் நிறைந்த இந்த அரசியலில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு தவெகவை நாங்கள் விமர்சனம் செய்தோம். தேர்தலுக்குப் பிறகு எங்களை நாடி வந்தபோது ஆதரவளித்திருக்கிறோம். எந்த கூட்டணியில் இருந்தாலும் அந்த கூட்டணியுடன் நேர்மையாக இருப்போம்.

பாஜகவை தமிழ்நாட்டில் எந்த சூழ்நிலையிலும் உள்ளே வர அனுமதிக்க மாட்டோம். அரசு பதவியை விட்டு விலகுவதற்கு தான் அனுமதி கடிதம் கொடுத்து விட்டு வர வேண்டும். ஆனால், அரசியல் கட்சியில் இருந்து வெளியேற அந்த நிலை இல்லை. ஆனால், அண்ணாமலை அந்த கட்சியை விட்டு வெளியே வருவதற்கு அனுமதி கேட்டு விட்டு வந்திருக்கிறார். அவர் பாஜகவின் முகமாக இருந்து விடக்கூடாது. தமிழ்நாட்டில் பாஜக நேரடியாக அரசியல் செய்ய முடியாது என்பதால், அண்ணாமலை மூலம் பாஜக, ஆர்எஸ்எஸ் இறக்கி விடப்பட்டு இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. அண்ணாமலை அரசியலுக்கு வருவது பிரச்னை இல்லை. ஆனால், ஆர்எஸ்எஸ் முகமூடியுடன் வருவதுதான் இங்கு பிரச்சனை. மேற்கு வங்காளத்தில் நடந்தது போல தமிழ்நாட்டில் நடந்து விடக்கூடாது என்று கவலைப்படுகிறோம். இவர் அவர் பேசினார்.

Related Stories: