பெரம்பலூர், ஜூலை 13: பெரம்பலூரில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியில், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெரம்பலூரில் தனியார் அமைப்பின் சார்பாக நேற்று (12ம்தேதி) ஞாயிற்றுக் கிழமை காலை 6:30 மணிக்கு சிறுவர்களுக்கு, பெரியவர்களு என தனித்தனியாக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஆண், பெண் இருபாலருக்கும் தனித் தனியாக, பெரம்பலூர் பாலக்கரையில் தொடங்கி, துறையூர் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி வரை 2 கி.மீ தூரத்திற்கும், 16 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக, பாலக்கரையில் தொடங்கி, கல்யாண்நகர், கீற்றுக்கடை வரைக்கும் என 4 கிமீ தூரத்திற்கும் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.போட்டிகளை பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ சிவக்குமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதில் சிறுவர், சிறுமியருக்கு தனித் தனியாக ரூ.3000, ரூ.2000, ரூ.1000 எனவும், பெரியவர்களுக்கு தனித் தனியாக ரூ.7000, ரூ.5000, ரூ.3000 என பரிசுத் தொகைகளும், பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
