×

ஓசூரில் வீடியோ பதிவிட்டு பள்ளி மாணவன் தற்கொலை: செல்போனை தர பணம் வாங்கிய காவலர் சஸ்பெண்ட்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் பச்சன். இவரது மகன் ரோஷன் (18), கடந்த கல்வி ஆண்டில், ஓசூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தோல்வியடைந்தார். இதனால், கடந்த 8ம் தேதி ஓசூர் -தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ஒரு பள்ளியில், 10ம் வகுப்பு மறுதேர்வு எழுத சென்றுள்ளார். அப்போது, அவரது செல்போனை, போலீசார் ஒருவர் வாங்கி பார்த்துள்ளார்.

அதில் சிப்காட் போலீசார் வாகன தணிக்கை செய்யும் வீடியோ இருந்ததால் காவலர், செல்போனை சிப்காட் போலீசில் ஒப்படைத்தார். பின்னர்,விசாரணைக்கு கடந்த 9ம் தேதி, சிப்காட் காவல் நிலையத்திற்கு சென்ற மாணவன் ரோஷனின் தாயார் சங்கீதா மற்றும் அவரது சகோதரர் ஆகியோர், காவலர் சந்திரனிடம் விபரங்களை கூறி செல்போனை கேட்டுள்ளனர். அப்போது, அவர் மாணவர் ரோஷனை அழைத்து வரும்படி கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, நேற்று ரோஷன் சென்றபோது, போலீசாரை ஏன் வீடியோ எடுத்தாய் என கேட்டு, இனிமேல் அவ்வாறு செய்யக் கூடாது என எச்சரித்து எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பினர். அப்போது காவலர் சந்திரன், ரோஷனிடம் ரூ.2000 வாங்கி கொண்டு செல்போனை கொடுத்ததாக கூறப்படுகிறது.

வீட்டிற்கு சென்ற மாணவன், தனது செல்போனில், `அம்மா நான் உன்னை அதிகமாக மிஸ் பண்றேன். உங்களுக்கு நல்ல பிள்ளையாக நான் இருக்கவில்லை’ என்று வீடியோ பதிவிட்டு, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட எஸ்பி அனிதா, காவலர் சந்திரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags : Hosur ,Bachchan ,Mookandapalli ,Hosur, Krishnagiri district ,Roshan ,Hosur… ,
× RELATED பழநி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி...