×

வியட்நாம் படகு விபத்து: திருச்சி, பழநி, தர்மபுரி, சேலம் வேலூரை சேர்ந்த 7 பேர் பலி

திருச்சி: வியட்னாமில் நடந்த படகு விபத்தில் திருச்சி, பழநி, தர்மபுரி, சேலம், வேலூரை சேர்ந்த 7 பேர் பலியாகி உள்ளனர். திருச்சி கிராப்பட்டி அருணாசலம் நகரை சேர்ந்த அழகுராஜன்(40), திருவனைக்காவல் கீழகொண்டையாம் பேட்டையை சேர்ந்த பாலாஜி(40), பீமநகர் யானைக்கட்டி மைதானத்தை சேர்ந்த ஷேக் அப்துல்லா(41) ஆகிய 3 பேர் வியட்நாமில் நடந்த படகு விபத்தில் பரிதாபமாக இறந்தனர். இறந்த 3 பேரும் பிரபல செல்போன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.

இது குறித்து அழகுராஜனின் மாமா தங்கவேல் கூறுகையில், ‘‘மருமகன் அழகுராஜன் பிரபல செல்போன் நிறுவனத்தில் திருச்சி மண்டல மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிறுவனத்தில் பாலாஜி மற்றும் ஷேக் அப்துல்லா ஆகியோர் விற்பனையாளராக பணியாற்றினர். விற்பனை இலக்கு எட்டப்பட்டால், செல்போன் நிறுவனத்தின் சார்பில் சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். அதைபோல் கடந்த புதன்கிழமை அழகுராஜன் உள்பட 3 பேரும் திருச்சியில் இருந்து வியட்நாமுக்கு சுற்றுலா சென்றனர்.

நேற்று மாலை 3.30 மணியளவில் டிவி பார்த்ததுபோதுதான் படகு விபத்தில் அவர்கள் இறந்ததை தெரிந்து கொண்டோம்\\” என கண்ணீர் மல்க கூறினார். அழகுராஜாவின் மனைவி சண்முகப்பிரியா. தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.  வியட்நாம் நாட்டில் சுற்றுலா சென்ற இடத்தில் படகு விபத்தில் பலியானவர்களில் திண்டுக்கல் மாவட்டம், பழநியை சேர்ந்த முருகபிரபு (43) என்பவரும் ஒருவர். முருகபிரபு, பழநி புறநகர், சிவகிரிப்பட்டி ஊராட்சி பகுதியில் அபார்ட்மென்ட் குடியிருப்பில் வசித்து வந்தார்.

மனைவி மகாலட்சுமி (37), மகள் சர்விகா (8) ஆகியோருடன் முருகபிரபுவின் தாய் திலகவதியும் வசித்து வருகிறார்.சர்விகா பழநி அருகே தாழையூத்துவில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். முருகபிரபு தனியார் செல்போன் விற்பனை ஏஜென்சி வைத்துள்ளார். இவரது பங்குதாரராக தட்டான்குளத்தை சேர்ந்த நிர்மல்குமார் (41) என்பவர் உள்ளார். விற்பனை இலக்கை எட்டியதற்காக செல்போன் நிறுவனத்தின் சார்பில் இருவரும் வியட்நாம் செல்வதற்காக கடந்த 7ம் தேதி சென்னை சென்றனர்.

8ம் தேதி சென்னையில் இருந்து ஒரு குழுவாக வியட்நாம் கிளம்பி சென்றனர். நாளை வீடு திரும்ப இருந்த நிலையில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. முருகபிரபுவின் வீட்டில் உறவினர்களும், நண்பர்களும் சோகத்துடன் குவிந்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், கடத்தூர் பெருமாகோயில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயவேல். ஓய்வு பெற்ற காவலர். இவரது மனைவி அருள்மொழி என்ற தனம். இவர்களது மகன் செந்தில்குமார் (45). செல்போன் விநியோகஸ்தராக இருந்தார். மேலும், அலுமினிய பேக்டரி, சொந்தமாக பஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.

இவருக்கு பூவிழி (40) என்ற மனைவியும், 7 வயதில் லோகஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். செல்போன் விற்பனையில் இலக்கை தாண்டியதால், அந்த நிறுவனம் சார்பில், செந்தில்குமார் வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டார். வீட்டிலிருந்து கடந்த 8ம் தேதி புறப்பட்டு சென்ற அவர், வியட்நாமில் படகு கவிழ்ந்து பரிதாபமாக பலியானார். அவரது இறப்பு குறித்த தகவலறிந்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இதே போல், வியட்நாம் படகு கவிழ்ந்த விபத்தில், சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீதர்(62) என்பவரும் பலியானது தெரிய வந்துள்ளது. இவர் சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள தனியார் அபார்ட்மெண்டில் வசித்து வந்தார். சேலம் அழகாபுரம் காவல் நிலையம் பின்புறம், செல்போன் விநியோகம் செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தின் சார்பில் தான், ஸ்ரீதரை வியட்நாமுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனர்.

இவருக்கு ஜெயந்தி(55) என்ற மனைவியும், திருமணமாகாத ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் கார்த்திக் ஆஸ்திரேலியாவிலும், மகள் ஹரிணி ஸ்காட்லாந்திலும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். ஸ்ரீதர் இறந்த தகவல் நேற்றிரவு 7.30 மணிக்கு தான், செல்போன் விநியோக அலுவலகம் மூலம் அவரது மனைவி ஜெயந்திக்கு தெரியவந்தது. அவர் தனது மகன் மற்றும் மகள், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.அவர்கள் கதறியது பரிதாபமாக இருந்தது.

வேலூர் சைதாப்பேட்டை கன்னிகாபரமேஸ்வரி தெருவை சேர்ந்தவர் வினய் குமார்(48). இவர் மெயின்பஜாரில் சிறிய நகைகடை நடத்தி வந்தார். மேலும் பிரபல ெசல்போன் நிறுவனத்தின் வேலூர் டிஸ்ட்ரிபியூட்டராக இருந்து வந்துள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 13 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். வியட்நாம் சுற்றுலா சென்ற இவர் படகு விபத்தில் பலியாகி உள்ளார். நேற்று காலை வினய்குமார் மனைவி மற்றும் மகளுடன் மொபைலில் பேசி உள்ளார். அப்போது, ‘நாளை ஊர் திரும்பிவிடுவேன்’ என்று கூறி உள்ளார். ஆனால் மாலையில் அவர் படகு விபத்தில் இறந்துவிட்டதாக தகவல் அறிந்து மனைவி மற்றும் மகள் கதறி அழுதனர்.

* செல்போனில் ஸ்டேட்டஸ்
பிரபல செல்போன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அழகுராஜன், நேற்று சுற்றுலா சென்ற பகுதி குறித்து தனது செல்போனின் ஸ்டேட்ஸ் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக, தனது நண்பர்களிடம் பேசியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

* கும்மிடிப்பூண்டி தொழிலதிபர் உயிரிழப்பு
கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பாபு (52) என்பவரும் வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தார். கடந்த 8ம் தேதி இவர் வியட்நாம் நாட்டிற்கு சுற்றுலா சென்றார். படகு விபத்தில் இவர் பலியான தகவல் கிடைத்ததை அடுத்து கும்மிடிப்பூண்டி போலீசார் மற்றும் தாசில்தார் பாபுவின் குடும்ப உறுப்பினர்களிடம் நிகழ்வைப் பற்றி கேட்டு அறிந்து வருகின்றனர்.

* அப்பாவ பார்க்கணும்… அழுது துடித்த மகள்…
உயிரிழந்த முருகபிரவின் மகள் சர்விகா நேற்று பள்ளியில் இருந்து பாதியிலேயே அழைத்து வரப்பட்டார். தந்தையின் இறப்பு செய்தியை மறைத்து வைத்திருந்த நிலையில், வீட்டிற்கு வந்த உறவினர்களின் அழுகையால் தந்தையின் உயிருக்கு ஏதோ ஆபத்து ஏற்பட்டிருப்பதை உணர்ந்து, தனது தந்தையை காண வேண்டுமென தாய் மற்றும் உறவினர்களிடம் அவர் அழுது மன்றாடியது காண்போர் நெஞ்சை கலங்கடித்தது.

Tags : Vietnam ,Trichy ,Palani ,Dharmapuri ,Salem ,Vellore ,Azhugarajan ,Arunachalam Nagar ,Kirapatti ,Balaji ,Keezhakondaiyampet ,Thiruvanakaval ,Bhimanagar ,
× RELATED பழநி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி...