×

அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.1000 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

புதுடெல்லி: அனில் அம்பானி குழுமத்திற்கு எதிரான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, ரூ.1,021 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்குவதற்கான அதிரடி உத்தரவை அமலாக்க துறை பிறப்பித்துள்ளது. தொழிலதிபர் அனில் அம்பானியின்,அனில் திருபாய் அம்பானி குழுமத்திற்கு எதிரான பண மோசடி வழக்கை அமலாக்க துறை விசாரித்து வருகிறது. அனில் அம்பானி குழுமத்திற்கு, யெஸ் வங்கி ரூ.11,000 கோடி கடன் அளித்தது.

அதை அவர் முறைகேடாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்ப்ராடெல், ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனங்களுக்காக வாங்கிய கடன்களை, சட்ட விரோதமாக அவர் பயன்படுத்தியுள்ளார்.மொத்தம், ரூ.40,185 கோடி மோசடி செய்துள்ளார் என கூறப்படுகிறது.

அனில் அம்பானி குழுமத்தால் நடத்தப்படும் போலி நிறுவனங்கள், குழும நிறுவனங்களின் வலைப்பின்னல் மூலம், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் லிட் ஆகியவை திரட்டிய ரூ.15,548 கோடி நிதி திசை திருப்பப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விசாரணையின் ஒரு பகுதியாக,அனில் அம்பானி குழுமத்திற்கு சொந்தமான ரூ.1,021 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்குவதற்கு அமலாக்க துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.இதன் மூலம், இந்த வழக்கில் அமலாக்கதுறையால் முடக்கப்பட்ட சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.20,367 கோடியாக அதிகரித்துள்ளது.

Tags : Anil Ambani ,Enforcement Directorate ,New Delhi ,Anil Ambani Group ,The Enforcement Directorate ,Anil Dhirubhai Ambani Group ,
× RELATED ‘இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே...