×

‘இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்’ அரிசிக்கே வாய்க்கரிசி: மத்திய பிரதேச பாஜ ஆட்சியில் அரங்கேறிய மெகா ஊழல்

கலகலப்பு படத்தில் நடிகர் சந்தானத்தின் ஒரு காமெடி சீன்:
சந்தானம்: ‘‘திமிங்கிலம்…. நீ என்ன பண்ற… குடோன்ல இருக்குற பருத்தி மூட்டையெல்லாம் எடுத்துட்டு போயி நம்ம பண்ணை வீட்ல வச்சிரு.
தினேஷ்: ‘‘சரி வாத்தியாரே…’’.
சந்தானம்: ‘‘பேயி… திமிங்கலம் பண்ணை வீட்டுல வைக்கிற பருத்தி மூட்டையை எடுத்துட்டு போயி நீ தென்னந்தோப்புல வச்சிரு…’’
பேய் கிருஷ்ணன்: சரிங்க வாத்தியாரே…’’
சந்தானம்: ‘‘மண்டகசாயம். தென்னந்தோப்புல வச்ச பருத்தி மூட்டையெல்லாம் எடுத்துட்டு வந்து, நம்ம குடோன்லயே வச்சிரு…’’
பாவா லட்சுமணன்: ‘‘சரி வாத்தியாரே…’’
விமல்: சார்.. இதுக்கு பருத்தி மூட்டை பேசாம குடோன்லயே இருக்கலாமே…’’
சந்தானம்: ‘‘இருக்கலாம்… இவனுங்களுக்கு கொடுக்குற சம்பளத்துக்கு என்ன வேல வாங்கறதுனே தெரியலயே…’’

இந்த காமெடி சீன் மிகவும் பிரபலமானது. குடோனில் இருக்கும் பருத்தி மூட்டை, பண்ணை வீடு, தென்னந்தோப்புக்கெல்லாம் சென்று விட்டு எப்படி மீண்டும் குடோனுக்கே வந்ததோ, அதே மாதிரி பாணியில், கற்பனை செய்து பார்த்திராத ஒரு மெகா மோசடி, பாஜ ஆட்சி நடக்கும் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியிருக்கிறது. கச்சா எண்ணெய் இறக்குமதி சார்பை குறைக்க பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் (இ20) கலப்பது என்ற கொள்கை முடிவு எடுத்த ஒன்றிய அரசு, 2030ல் இந்த இலக்கை எட்ட நிர்ணயித்திருந்தது.

ஆனால் 5 ஆண்டு முன்கூட்டியே எட்டப்பட்டு விட்டது. கரும்பு, சோளம், அரிசியில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. எத்தனால் கலப்பு முடிவால் வாகன உற்பத்தித்துறை சந்தித்த சவால்கள், வாகன விலையேற்றம், இ20 பெட்ரோலால் வாகனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என பல்வேறு பிரச்னைகளை சாமானிய மக்கள் தொடங்கி தொழில் துறையினர் வரை சந்தித்துக் கொண்டிருப்பது ஒரு புறம் இருக்க, எத்தனால் தயாரிப்பாக அரிசி சப்ளை செய்ததாக கணக்கு காட்டி மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கும் ‘மாபெரும் கொள்ளை’ நாட்டையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது.

இந்த ஊழலின் தொடக்கப்புள்ளி, இந்திய உணவுக் கழகத்தில் துவங்குகிறது. இந்த அமைப்பு மூலம் விவசாயிகளிடம் இருந்து அரிசி கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்தல், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் சப்ளை, பிற அரசு நலத்திட்டங்களுக்குத் தானியம் வழங்குதல், அவசர காலத்துக்கு இருப்பு வைத்தல், தேவைக்கு அதிகமாக இருப்பு சேர்ந்தால் சந்தைக்கு விற்பது அல்லது அரிசியின் தரத்தை பொறுத்து எத்தனால் போன்ற பிற பயன்பாடுகளுக்கு விடுவித்தல் போன்றவை இந்த கொள்முதலின் நோக்கம்.

இதில், உபரி அரிசியை வெளிச்சந்தையில் விற்கும் திட்டத்தின் கீழ் தான், எத்தனாலுக்காக அரிசி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்களில் பதிவு செய்து எத்தனால் விநியோக ஒப்பந்தங்களை வைத்துள்ள எத்தனால் தயாரிப்பு ஆலைகள் மட்டுமே இந்திய உணவுக் கழகத்திடமிருந்து இந்த அரிசியை வாங்கத் தகுதி பெற்றவை. மத்திய பிரதேசத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் தற்போதைய குறைந்த பட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ. 2,370. ஆனால், நெல் கொள்முதல் செய்வது, மில்களில் பாலீஷ் செய்வது, இவற்றை குடோனுக்கு அனுப்புவது மற்றும் குடோன்களில் சேமிப்பது ஆகியவற்றிற்கான அரசின் மதிப்பீட்டுச் செலவு குவிண்டாலுக்கு சுமார் ரூ.3,900 முதல் ரூ.4,100 வரை ஆகி விடுகிறது.

இப்படி குவிண்டாலுக்கு சுமார் ரூ.4,000 செலவில் கொள்முதல் செய்யப்படும் அரிசி எத்தனால் பயன்பாட்டுக்காக மானிய விலையில் அதாவது, ஒரு குவிண்டால் ரூ.2,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. நெல் கொள்முதல் விலையை விடவும் குறைவாக அடிமட்ட விலைக்கு இந்த அரிசியை எத்தனால் ஆலைகள் பெறுகின்றன. குடோன்களில் அரிசியை நீண்ட நாட்களுக்கு இருப்பு வைத்து அவை கெட்டுப்போவதை தவிர்க்க, உபரியாக உள்ள அரிசியில் கெட்டுப்போகும் நிலைக்கு முன்பாக உள்ள அரிசியை மானிய விலையில் எத்தனால் ஆலைகளுக்கு விற்றிருந்தால் கூட, இழப்பை தடுக்கும் முயற்சியாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், மத்திய பிரதேசத்தில் நடந்ததே வேறு. சமீபத்தில் கொள்முதல் செய்த நெல்லில் இருந்து எடுக்கப்பட்ட அரிசி மற்றும் செறிவூட்டப்பட்ட அரிசியைக் கூட, மானிய விலைக்கு ஆலைகளுக்கு தாரை வார்த்து விட்டனர் என்பதுதான் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதிலும், அதே அரிசி மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் குடோன் – எத்தனால் ஆலை – அரிசி மில் – அரசு கொள்முதல் மூலம் மீண்டும் குடோனுக்கு விற்கப்பட்டு, மெகா மோசடி அரங்கேறியுள்ளது.

வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?: கடந்த ஜூன் 2ம் தேதி, மத்திய பிரதேச மாநிலம் பாலாகாட் மாவட்டத்தில் உள்ள நவேகாவ் குடோனில் இருந்து, சிந்த்வாரா அருகே போர்காவில் உள்ள ஏவிஜெ எத்தனால் ஆலைக்கு அரிசி லோடு டிரக்கில் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அந்த டிரக் எத்தனால் ஆலைக்கு போகாமல் அரிசி மில்லில் லோடு இறக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல், ஜூன் 3ம் தேதி அரிசி லோடு ஏற்றிய மற்றொரு டிரக்கும் சிந்த்வாராவில் உள்ள எத்தனால் ஆலைக்கு செல்லாமல் பாலாகாட்டில் உள்ள சஞ்சேத்தி அரிசி மில்லுக்கு சென்றுள்ளது.

ஆனால், குடோனில் உள்ள ஆவணங்களில், எத்தனால் ஆலைக்கு மானிய விலையில் அரிசி லோடு அனுப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணையை துவக்கியபோது, கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம் ஆகின. அதில்தான் மேற்கண்டவாறு சுழற்சி முறையில் ஒரே அரிசி லோடு குடோனில் இருந்து அனுப்பப்பட்டு மில்கள் மூலம் அரசுக்கு விற்கப்பட்டு அதே குடோனுக்கு வந்து சேர்ந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

இதில் அரிசி மில், எத்தனால் ஆலை உரிமையாளர்கள், டிரக் ஓட்டுபவர்கள் என 40க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேடாக அரிசியை கடத்திய 12 டிரக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இப்படி, கடந்த ஓராண்டில் 50 லட்சம் குவிண்டால் (5 லட்சம் மெட்ரிக் டன்) அரிசி மானிய விலையில் எத்தனால் ஆலைகளுக்கு என ஆவணங்களில் குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் மேற்கண்டவாறு சுழற்சி முறையில் அனுப்பப்பட்டு ரூ.1,160 கோடி மதிப்பிலான அரிசி முறைகேடு செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. ஆனால், எத்தனால் ஆலைகளுக்கு என ஒதுக்கீடு செய்த இந்திய உணவுக்கழக கிடங்கு அதிகாரிகள், எங்களுக்கு சம்பந்தமே இல்லை என ஒதுங்கிக் கொள்வதாக கூறப்படுகிறது.

இந்திய உணவுக்கழக அதிகாரிகள் சிலர் கூறுகையில், கடந்த ஓராண்டில் சுமார் 50 லட்சம் குவிண்டால் அரிசி எத்தனால் ஆலைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அரிசியை ஒதுக்கீடு செய்வது தான் எங்கள் வேலை. குடோனில் இருந்து அரிசி மூட்டை வெளியே செல்லும் வரைதான் எங்களுக்குப் பொறுப்பு. குடோன் வளாகத்துக்கு வெளியே நடந்த விஷயத்துக்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்பது, என தெரிவித்திருப்பதாக உள்ளூர் தகவல்களும், புலனாய்வு குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய பிரதேசத்தில் பாஜ ஆளும் இரட்டை இன்ஜின் ஆட்சியில் நடந்த இந்த முறைகேடு குற்றச்சாட்டு, கற்பனையிலும் நினைத்துப்பார்க்க முடியாத ஊழலாகவே கருத வேண்டியுள்ளது. அதிலும், தரமான அரிசியை கூட தரமற்றதாக காட்டி எத்தனாலுக்கு அனுப்பி அரிசிக்கே வாய்கரிசி போடப்பட்ட வேதனை சம்பவம் இது என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

* சுழற்சி முறையில் மோசடி நடந்தது எப்படி?
* எத்தனால் ஆலைக்கு அரிசி குவிண்டால் ரூ.2,320க்கு விற்கப்படுகிறது.
* இந்த அரிசி, மில்களுக்கு குவிண்டால் ரூ.2,800க்கு கைமாற்றப்படுகிறது.
* அரிசி ஆலைக்கு விற்ற பிறகு வெளிச்சந்தையில் வாங்கப்படும் குருணை அரிசி குவிண்டால் ரூ.2,100
* பின்னர் மீண்டும் மில்லில் இருந்து அரிசி அரசு குடோனுக்கே செல்லும்போது அரசுக்கு இரட்டிப்பு இழப்பு ஏற்படுகிறது.
* அரிசியை ஒதுக்கீடு செய்வதில் விதிகளை பின்பற்றாமல் புதிய அரிசியை ஒதுக்கீடு செய்து அதிகாரிகள் முறைகேடு ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.
* இந்த மோசடியை மாவட்ட நிர்வாகம் கூட கண்காணிக்காதது எப்படி என்ற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன.
* புதிதாக சாக்குப்பைகளில் அடைத்து மில்லில் நெல் அரைத்தது போல் கணக்கு காட்டி அரசு குடோனுக்கு மீண்டும் தஞ்சம் – அரசுக்கு கொள்முதல் செலவு ரூ.4,100

* பாஜ – காங். கூட்டு? விசாரணையில் தொய்வு
பாஜ ஆட்சியில் நடந்த இந்த மெகா ஊழலை அம்பலப்படுத்தி, மக்கள் மன்றத்துக்கு கொண்டு சென்று தட்டிக்கேட்க வேண்டிய அந்த மாநில காங்கிரஸ் கூட வாய்திறக்கவில்லை என்பது மிகப்பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். எதற்கெடுத்தாலும் பாஜவும் காங்கிரசும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வது வழக்கமாக உள்ளது.

ஆனால், இந்த விஷயத்தில் இரு கட்சிகளும் பரஸ்பரம் செயல்படவில்லை. எனவே, இந்த இரண்டு கட்சிகளுக்கும் இதில் கூட்டு சதி உள்ளதா என்ற கேள்வியை முன்வைக்கின்றனர் அவர்கள். பல தரப்பிலும் ஒருங்கிணைந்து அல்லது ஒப்புதலுடன் செய்யப்பட்ட முறைகேடாக இது அறியப்படுவதால் தான் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

* கொள்ளையடிக்க ஏதுவாக கொள்கையில் மாற்றம்?
மத்திய பிரதேச அரசில் நடந்த அரிசி முறைகேடு ஆட்சியாளர்களுக்குத் தெரிந்தேதான் அரங்கியதா எனக் கருதுவதற்கு, அரசின் கொள்கை முடிவகள் இடமளிக்கின்றன. அதன்படி மேற்கொள்ளப்பட்ட முக்கிய முடிவுகள்:

2025 பிப்.15: இந்திய உணவுக்கழக குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உபரி அரிசியை எத்தனால் ஆலைகளுக்கு வழங்குவது என ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்கு குவிண்டால் ரூ.2,250 என நிர்ணயிக்கப்பட்டது.

2025, அக். 22: எத்தனால் ஆலைகளுக்கு வழங்கும் அரிசிக்கு விலையாக குவிண்டாலுக்கு ரூ.2,320 என நிர்ணயிக்கப்பட்டது.

2026, மே 8: எத்தனால் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அரிசியை எந்த கிடங்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்யும் அதிகாரம் இந்திய உணவுக் கழகத்துக்கு வழங்கப்பட்டது. இந்த அனுமதிதான், தரமான செறிவூட்டப்பட்ட அரிசியை கூட உபரி என கணக்குக் காட்டி எத்தனால் ஆலைகளுக்கு அனுப்ப வழி வகுத்தது என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

* மத்திய பிரதேசத்தில் உள்ள எத்தனால் தயாரிப்பு ஆலைகள் 36
* எத்தனால் உற்பத்தி திறன் (ஆண்டுக்கு) 143 கோடி லிட்டர்
* உற்பத்தி 63 கோடி லிட்டர்
* உற்பத்தியாகும் எத்தனால் மொத்த மதிப்பு ரூ.3,780 கோடி
* ஒரு லிட்டர் எத்தனால் ரூ.60
* எத்தனால் ஆலைகளுக்கு

* 6 மாதங்களில் மட்டும் 2.11 லட்சம் டன் அரிசி ஒதுக்கீடு
அவசர கதியில் விதிகளில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, கடந்த 6 மாதங்களில் மட்டும் கார்கோன், சிந்த்வாரா, பேட்டுல், சத்னா, பர்வானி, ஜபல்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 21 எத்தனால் ஆலைகளுக்கு 2.11 லட்சம் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விதி மாற்றத்துக்குப் பிறகு நடந்த இந்த அசுர வேக ஒதுக்கீடுகள் சந்தேகத்தை கிளப்புவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

Tags : BJP ,Madhya Pradesh ,Santhanam ,Dinesh ,
× RELATED புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி...