×

உடல் உஷ்ணத்தை தணிக்கும் மகிழம்பூ!

நன்றி குங்குமம் தோழி

கோடை வெயிலின் கடுமையை தணிப்பதில் மகிழம்பூ முன்னோடியாகத் திகழ்கிறது. 4 மகிழம் பூக்களை ஒரு டம்ளர் வெந்நீரிலிட்டு (இரவில்) மூடி வைத்து, மறுநாள் காலை தண்ணீரை மட்டும் பருகி வந்தால் உடல் உஷ்ணம் தணியும். சிறுநீர் சார்ந்த நோய்கள் விலகும். புத்தம் புதிய மகிழம் பூக்கள் ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அத்துடன் ஒரு கைப்பிடி அளவு பாசிப்பயறு, 3 வேப்பிலை, சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உடம்பெல்லாம் பூசி அரை மணி நேரம் கழித்து குளித்தால், வியர்க்குருக்கள் மறையும். மேலும், தொடர்ந்து பயன்படுத்தி வர அழுக்குத் தேமல் அடியோடு மறையும்.

4 மகிழம் பூக்கள், ஒரு தேக்கரண்டி தனியா விதை(கொத்தமல்லி) ஆகியவற்றை சேர்த்து, கொதிக்க வைத்து வடிகட்டி தினசரி இரவில் பருகி வர நிம்மதியான தூக்கம் உண்டாகும்.
மகிழம்பூ, ரோஜாப்பூ, தாமரைப்பூ, தண்ணீர் விட்டான் கிழங்கு ஆகியவற்றை 100 கிராம் சேர்த்துக் கலந்து தூள் செய்து, காலை, மாலை இருவேளையும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர மனபயம், மன அழுத்தம், மன உளைச்சல் தீரும்.

மகிழம்பூ, மருதாணிப்பூ, ஆலந்தளிர், அரச இலை தளிர் இவற்றை தலா ஒரு கையளவு எடுத்து விழுதாய் அரைத்து தலை முழுவதும் மயிர்க்கால்களில் படும்படி தேய்த்து, அரைமணி நேரம் ஊறியதும் குளிக்கவும். தொடர்ந்து 21 நாட்கள் இம்முறையை பின்பற்றினால் முடி உதிரல், செம்பட்டை முடி, முடி வெடித்தல், இளநரை போன்ற குறைபாடுகள் நீங்கி முடி அடர்த்தியாய், கருமையாய், தாராளமாய் வளரும்.

மகிழம்பூ ½ கிலோ, கருஞ்சீரகம் 100 கிராம் இரண்டையும் சேர்த்தரைத்து படை, அரிப்பு உள்ள இடங்களில் பூசினால் தோல் வியாதிகளை முழுமையாக குணப்படுத்தும்.
மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, தனியா, ரோஜாப்பூ, ஏலப்பொடி, அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை தலா 25 கிராம் சேர்த்து தூள் செய்து காலை, மாலை இருவேளையும் அரை தேக்கரண்டிஅளவு தேனில் குழைத்து சாப்பிட தலைவலி, நாள்பட்ட தலைவலி, தலைபாரம், ஒற்றைத் தலைவலி போன்ற குறைபாடுகள் தீரும். மகிழம்பூ, பாதாம் பிசின், மஞ்சள் ஆகியவற்றை தலா 100 கிராம் சேர்த்து தூள் செய்து காலை-மாலை இரு வேளையும் அரை தேக்கரண்டி அளவு சாப்பிட, ஏழு தினங்களில் வெள்ளைப்படுதல்
குணமாகும்.

– அபர்ணா சுப்ரமணியம், சென்னை.

Tags :
× RELATED உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் ரெட்ரோ வாக்கிங்!