×

நினைவுகளை மெல்ல பறிக்கும் டிமென்சியா… தீர்வு என்ன!

நன்றி குங்குமம் டாக்டர்

ஒருவரின் வாழ்க்கையில் நினைவுகள், சிந்தனை திறன், முடிவெடுக்கும் திறன் ஆகியவை மிகவும் முக்கியமானவை. வயது அதிகரிக்கும்போது சில மறதி ஏற்படுவது இயல்பானது. ஆனால் தினசரி வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு நினைவாற்றல் குறைதல், சிந்தனையில் மாற்றம், பழக்கவழக்கங்களில் குழப்பம் ஏற்படுவது டிமென்சியா (Dementia) எனப்படும் நிலையின் அறிகுறியாக இருக்கலாம் என்கிறார் மனநல மருத்துவர் சுபாஷினி சற்குணம். அவர், டிமென்சியா குறித்து மேலும் நம்முடன் பகிர்ந்து கொண்டவை.

டிமென்சியா என்றால் என்ன? டிமென்சியா ஏற்பட காரணம் என்ன…

டிமென்சியா என்பது ஒரு தனிப்பிட்ட நோய் அல்ல; மூளையின் செயல்பாடுகளை பாதிக்கும் பல்வேறு நிலைகளின் தொகுப்பு. இது மூளையில் உள்ள நரம்பு செல்கள் பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது. வயதானவர்களிடம் அதிகமாக காணப்பட்டாலும், சில சமயங்களில் இளம் வயதினருக்கும் ஏற்படலாம்.டிமென்சியா ஏற்பட முக்கிய காரணங்களில் ஒன்று அல்சைமர் நோய் (Alzheimer’s disease) ஆகும். இதைத் தவிர ரத்த நாள பாதிப்பால் ஏற்படும் வாஸ்குலர் டிமென்சியா, பார்கின்சன் நோயுடன் தொடர்புடைய டிமென்சியா, போன்றவை உள்ளன.

முக்கிய காரணங்கள்

அல்சைமர் நோய் (Alzheimer’s disease): டிமென்சியாவுக்கு பொதுவான காரணங்களில் ஒன்று. மூளையில் சில புரதங்கள் அதிகமாக சேர்ந்து நரம்பு செல்களை பாதிப்பதால் நினைவாற்றல் குறையத் தொடங்கும்.

வயது அதிகரிப்பு: வயது அதிகரிக்கும் போது மூளையின் செயல்பாட்டில் மாற்றங்கள் ஏற்படலாம். குறிப்பாக 65 வயதுக்கு மேல் ஆபத்து அதிகரிக்கலாம்.மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிப்பு பக்கவாதம் (Stroke), ரத்த நாளங்களில் அடைப்பு போன்ற காரணங்களால் ஏற்படும் வாஸ்குலர் டிமென்சியா (Vascular dementia) உருவாகலாம்.

மரபணு காரணங்கள்

*குடும்பத்தில் டிமென்சியா வரலாறு இருந்தால் சிலருக்கு ஆபத்து அதிகமாக இருக்கலாம்.
*தலையில் அடிபடுதல்
*மீண்டும் மீண்டும் ஏற்படும் தலையில் காயங்கள் மூளையின் செயல்பாட்டை பாதிக்கலாம்.
*சில நோய்கள் மற்றும் உடல்நிலை பிரச்னைகள்
*சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, இதய நோய்கள் போன்றவை ஆபத்தை அதிகரிக்கலாம்.
*வாழ்க்கை முறை காரணங்கள்
*உடற்பயிற்சி இல்லாமை, புகைபிடித்தல், அதிக மது அருந்துதல், தூக்கக் குறைவு, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் போன்றவையும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

டிமென்சியா வயதானவர்களிடம் அதிகம் காணப்படுவது ஏன்?

டிமென்சியா வயதானவர்களிடம் மட்டும் காணப்படுவதில்லை. இது எந்த வயதினருக்கும் வரலாம். ஆனால், பெரும்பாலும் வயதானவர்களிடம் காணப்படுகிறது. காரணம், வயது அதிகிரிக்கும்போது உடலில் உள்ள நரம்பு செல்கள் சேதம் அடைவதால் சுலபமாக பாதிக்கப்படுகிறது. அதுபோன்று வயதாக வயதாக சிலருக்கு மற்ற நோயின் தாக்கம் அதிகரிக்கும்போது ஏற்படலாம். வயது அதிகரிக்கும்போது சிலருக்கு மூளையில் புரதம் அதிகம் தங்கிவிடலாம். இதனாலும் மூளையின் செயல்பாடு குறைந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே, டிமென்சியா வயது முதிர்ந்தவர்களிடம் அதிகம் காணப்படுகிறது.

டிமென்சியா தீவிரமான நிலையில் என்ன மாதிரியான சிக்கல்களை உருவாக்கும்.டிமென்சியா தீவிரமாகும்போது, மூளையின் எல்லாபக்கத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். அப்படி பாதிப்பு அதிகரிக்கும்போது ஒவ்வொரு செயல்பாடும் குறைய தொடங்கும். இதனால், அவர்கள் எல்லாவற்றையும் மறந்து கொண்டே வருவார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் தங்களுடைய அன்றாட இயல்பான வேலைகளை கூட செய்ய மறந்துவிடுவார்கள். உதாரணமாக, நடக்க, உட்கார, சாப்பிட, உடல் உபாதைகளை கழிக்க என எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள். ஒவ்வொன்றையும் நாம் சொல்லி சொல்லித்தான் செய்வார்கள். இந்நிலையில் அவர்கள் முழுமையாக இன்னொருவரை சார்ந்து வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். இது அவர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும்.

டிமென்சியா பாதிப்பின் அறிகுறிகள் என்னென்ன?

ஏற்கெனவே சொன்னது போன்று பலவித காரணங்களால் டிமென்சியா வரலாம். அதில் மிகவும் பொதுவான காரணம் அல்சைமர் நோயால் ஏற்படுவதுதான். உதாரணமாக நூறு பேருக்கு டிமென்சியா இருக்கிறது என்றால், அதில் 60-70 பேருக்கு அல்சைமர் நோயால் ஏற்பட்டதாகதான் இருக்கும். டிமென்சியாவை பொருத்தவரையில் ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு அறிகுறிகள் இருக்கும்.

அதில் அல்சைமரில் பொதுவாக மறதி அதிகமாக இருக்கும். ஏதாவது பொருளை வைத்துவிட்டு தேடிக் கொண்டே இருப்பது, சொன்ன விஷயங்களையே மீண்டும் மீண்டும் சொல்வது. சமீபத்தில் நடந்த விஷயங்களை மறந்து விடுதல், ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பது, பணம், கணக்கு போன்ற விஷயங்களை கையாள சிரமப்படுவது, பேசும்போது சரியான வார்த்தைகளை நினைவில் கொண்டு வர முடியாமல் போவது, வழக்கமான வேலைகளைச் செய்வதில் குழப்பம் ஏற்படுவது, குணநலனில் மாற்றம், எரிச்சல் அல்லது மனநிலை மாற்றங்கள் ஏற்படுவது போன்றவை அறிகுறிகளாக இருக்கும். இந்த ஆரம்ப அறிகுறிகளை கவனித்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியமாகும். பின்னர் நோய் தீவிரமடைந்தால், குடும்ப உறுப்பினர்களை அடையாளம் காண்பதிலும் சிரமம் ஏற்படலாம். எனவே, உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

சிகிச்சை முறைகள் என்னென்ன?

ஒருவருக்கு டிமென்சியா இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, ரத்த பரிசோதனை, மூளைக்கான ஸ்கேன் போன்றவை எடுக்கப்படும். அதில் சிலருக்கு வைட்டமின் டி குறைபாட்டினால்
அல்லது வைட்டமின் பி12 குறைபாட்டினால் ஏற்பட்டிருந்தால் அந்த டிமென்சியாவை குணப்படுத்திவிடலாம். அந்த நிலையைத்தாண்டி இருந்தால், அவர்களுக்கு சிடி ஸ்கேன், எம்.ஆர். ஐ ஸ்கேன் போன்றவை பரிந்துரைக்கப்படும். பின்னர், அவரது தீவிரத்தைப் பொருத்து சிகிச்சை மாறுபடும்.

டிமென்சியா பாதித்தவர்களை எப்படிப் பராமரிக்க வேண்டும்?

*டிமென்சியா உள்ளவர்களை பராமரிப்பது பொறுமை, அன்பு மற்றும் புரிதல் தேவைப்படும் ஒரு பணியாகும். மிக மிக பொறுமை அவசியம். ஏனென்றால், அவர்களின் நினைவாற்றல் மற்றும் செயல்பாடுகள் குறைந்தாலும், அவர்களுக்கு பாதுகாப்பான சூழலும் அன்பான அணுகுமுறையும் மிகவும் முக்கியம்.அன்பாகவும் பொறுமையாகவும் அணுக வேண்டும்.

*டிமென்சியா உள்ளவர்கள் ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கலாம் அல்லது சில விஷயங்களை மறந்து விடலாம். கோபப்படாமல், அமைதியாக பதில் அளிப்பது அவசியம்.

*பாதுகாப்பான வீட்டுச் சூழல் உருவாக்குங்கள்

*வீட்டில் வழுக்கி விழும் பொருட்களை அகற்ற வேண்டும்.குளியலறை, படிக்கட்டு பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

*அடிக்கடி வெளியே சென்று வழி தவறாமல் கவனிக்க வேண்டும்.

*தினசரி பழக்கத்தை ஒழுங்காக வைத்திருக்க உதவ வேண்டும்.

*ஒரே நேரத்தில் உணவு, தூக்கம், மருந்து, நடைப்பயிற்சி போன்றவற்றை செய்வது அவர்களுக்கு நம்பிக்கையையும் அமைதியையும் தரும்.

*அவர்களிடம் எளிய வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.

*ஒரே நேரத்தில் அதிகமான கேள்விகள் கேட்க கூடாது.

*அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்.

*சத்தான உணவு, போதுமான தண்ணீர், மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள் ஆகியவற்றை சரியாக வழங்க வேண்டும். உடற்பயிற்சி அல்லது மெதுவான நடைப்பயிற்சி செய்யவும் உதவ வேண்டும்.

*அவர்களுக்கு நினைவாற்றலை தூண்டும் வகையில், பழைய புகைப்படங்கள் பார்ப்பது, இசை கேட்பது, எளிய விளையாட்டுகள், வண்ணம் தீட்டுதல், குடும்பத்தினருடன் பேசுவது போன்றவை மனநிலையை மேம்படுத்த உதவும்.

*அவர்களை தனியாக விட்டுவிடாமல், குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் வைத்திருப்பது முக்கியம்.

*டிமென்சியா நோயாளியை கவனிப்பது மன அழுத்தம் தரக்கூடும். எனவே பராமரிப்பாளரும் ஓய்வு, பொறுமை என தன்னை கவனிக்க வேண்டும்

*டிமென்சியா முழுமையாக குணமாகும் நிலை அல்ல என்றாலும், சரியான பராமரிப்பு மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும்.

தொகுப்பு:- ஸ்ரீ தேவி குமரேசன்

Tags : Kungumam Doctor ,
× RELATED உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் ரெட்ரோ வாக்கிங்!