நன்றி குங்குமம் டாக்டர்
கண்ணே கண்ணே கலங்காதே…
தொலைதூரக் கல்வி கற்கும் குழந்தைகளாக இருந்தாலும் சரி, மடிக்கணினிகள் (Laptops) மற்றும் அலைபேசிகளின் மூலம் பணியாற்றும் தொழில்முறை நிபுணர்களாக இருந்தாலும் சரி, இன்று ‘திரைகள்’ (Screens) நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாத ஒரு அங்கமாகிவிட்டன. தகவல் தொழில்நுட்பத் துறையில் உருவான நவீன முன்னேற்றங்கள். நமக்கு தகவல் தொடர்பு, வணிகம், பொருளாதாரம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றை உருவாக்கிக்கொடுத்தாலும் அது நம் கண்களின் மேல் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிலான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கணக்கெடுப்பின்படி, தோராயமாக 69% மக்கள், நீண்ட நேரம் திரையை மிக அருகில் இருந்து பார்ப்பதால் அல்லது பல மணி நேரம் தொடர்ந்து டிஜிட்டல் திரை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுப்படுவதால் கண் சோர்வு (Eye Strain) அறிகுறிகளை அனுபவிப்பதாகத் தெரியவந்துள்ளது. அனைத்து வயதினரிடையேயும் கண் ஆரோக்கியத்தில் இப்போது ஒரு தெளிவான மாற்றம் ஏற்படுவதை கண் மருத்துவர்கள் (Ophthalmologists) நேரில் கண்டு வருகின்றனர்; கிட்டப்பார்வை (Myopia), டிஜிட்டல் கண் சோர்வு மற்றும் உலர் கண் நோய் (Dry Eye Disease) போன்ற பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் மண்டல மருத்துவ இயக்குநரான டாக்டர் ஷிபு வர்க்கி அவர்களின் கூற்றுப்படி, “மொபைல் போன் மற்றும் லேப்டாப்களின் திரைகளில் இருந்து வெறும் புளூ லைட் (Blue light) உமிழ்வதால் மட்டுமே நம் கண்கள் பாதிக்கப்படுவதில்லை. ஆனால், நாம் நீண்ட நேரம் ஒரே நிலையில் இருந்தபடி பார்த்து கொண்டே இருப்பதால், அதாவது திரையிலிருந்து பார்வையை எடுக்காமல் இருப்பதுதான் உண்மையில் கவலைக்குரிய விஷயம்.
தொடர்ந்து கண் இமைகளை மூடாமலும், கண்களை ஒரே இடத்தில் நிலைகொண்டு பார்ப்பதால், கண் தசைகளுக்குப் போதிய ஓய்வு கிடைக்காமல் அவை தீவிரமாக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றன. இது கண்ணின் தகவமைப்பு அழுத்தத்திற்கும் (accommodative stress- ‘அகோமடேடிவ் ஸ்ட்ரெஸ்’ (கண் குவியப்படுத்தும் திறன் சார்ந்த அழுத்தம்), பார்வையில் ஏற்ற இறக்கங்களுக்கும், அந்நாளின் முடிவில் கண்கள் மிகவும் பாரமாக இருப்பது போன்ற உணர்வுக்கும் வழிவகுக்கிறது.
நாம் கவனிக்கத் தவறும் மற்றொரு விஷயம், நம் கண் இமைகளை முழுமையாக சிமிட்டாமல் இருப்பது (incomplete blinking) என்பதைத்தான். திரைகளைக் கூர்ந்து கவனிக்கும்போது, கண் இமைகள் முழுமையாக மூடுவதில்லை. இதனால் கண்ணின் மேற்பரப்பு வறண்டு, பாதுகாப்பற்றதாக மாறுகிறது.
குழந்தைகளைப் பொறுத்தவரை இந்த பாதிப்பு இன்னும் ஆழமானது; ஏனெனில், வளர்ந்து வரும் அவர்களின் கண்கள் நீண்ட நேரமாக வீட்டிற்குள்ளேயே இருந்து, திரைகளுக்கு மிக அருகில் இருந்தபடியே கவனம் செலுத்துவதால் எளிதில் பாதிக்கப்படுகின்றன. எனவே, ஆரம்பக்கட்டத்திலேயே இதைக் கண்காணிப்பது மிகவும் அவசியமாகும். கண் ஆரோக்கியத்தின் எதிர்காலம் என்பது, பெருகிவரும் இந்த டிஜிட்டல் வாழ்க்கை முறைக்கு ஏற்ப, நமது பார்வைப் பழக்கவழக்கங்களை நாம் எவ்வளவு கட்டுக்கோப்பாக மாற்றிக்கொள்கிறோம் என்பதில்தான் அடங்கியிருக்கிறது” என்றார்.
அதிகநேரம் திரைகளைப் பார்க்கும் வாழ்க்கை முறையினால் கண் ஆரோக்கியம் எவ்வாறு மாறுபடுகிறது?
டிஜிட்டல் சாதனங்களை அதிகநேரம் பயன்படுத்துவது ஆன்லைன் மீட்டிங்குகளில் பங்கேற்பது மற்றும் தொடர்ந்து ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது போன்றவை நமக்கு ‘டிஜிட்டல் கண் சோர்வை’ (digital eye strain) ஏற்படுத்துகின்றன. பணிபுரியும் ஊழியர்களிடையே இது ஒரு பொதுவான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தலைவலி, கண் சோர்வு, மங்கலான அல்லது மாறும் பார்வைத் திறன், கழுத்து வலி, கவனத்தை ஒருமுகப்படுத்துவதில் சிரமம் மற்றும் ஒளியை எதிர்கொள்ள முடியாத நிலை (light sensitivity) போன்றவை இதன் அறிகுறிகளாக இருக்கலாம்.
அதே நேரத்தில், நீண்ட நேரம் திரைகளைப் பார்ப்பது, தொடர்ந்து புத்தகம் படிப்பது அல்லது புத்தகத்தை கண்களுக்கு மிக அருகில் வைத்துகொண்டு படிப்பது போன்ற கண்களுக்கு அருகே வைத்து மேற்கொள்ளும் பணிகளாலும், வெளியில் விளையாடும் நேரம் குறைந்து இருப்பதாலும் குழந்தைகளிடையே கிட்டப்பார்வை (myopia) பாதிப்பு கவலைகொள்ளும் வகையில் அதிகரித்து வருகிறது.
இந்த மாற்றத்தில் மிகவும் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், இதன் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் மிக நுட்பமாக இருப்பதால், பெற்றோர்கள் இதை எளிதில் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். குழந்தைகள் கண்களைச் சுருக்கிப் பார்க்கத் தொடங்குவது, அடிக்கடி கண்களைத் தேய்ப்பது, தொலைக்காட்சி அல்லது வகுப்பறை கரும்பலகைக்கு மிக அருகில் சென்று அமர்வது, தலைவலியைக் குறிப்பிடுவது அல்லது தூரத்தில் இருக்கும் பொருட்களைத் தெளிவாகப் பார்ப்பதில் சிரமப்படுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம். இந்த அறிகுறிகளை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
அதிக நேரம் திரைகளைப் பார்ப்பதால் கண் சிமிட்டுவதும் குறைகிறது; இது ‘உலர்ந்த கண் நோய்க்கு’ (dry eye disease) வழிவகுக்கிறது. இது கண்ணீர் படலத்தைப் பாதிப்பதோடு, ஏசி (air-conditioned)-யில் நீண்ட நேரம் செலவிடும் சூழல், தவறான முறையில் நாம் உட்காருவதால் மாறும் உடல் அமைப்பு (poor posture), போதிய அளவு தண்ணீர் குடிக்காதது மற்றும் தொடர்ந்து சாதனங்களைப் பயன்படுத்துவது ஆகியவற்றால் மேலும் தீவிரமடைகிறது. இதனால் கண்களில் எரிச்சல், சிவந்து போதல், சுருக்கெனப் பாயும் உணர்வு, நீர் வடிதல் அல்லது கண்களில் மணல் விழுந்தது போன்ற உணர்வு ஏற்படலாம்.
ஆரம்பக்கட்ட அறிகுறிகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகின்றன அல்லது சாதாரணமானது என்றோ இயல்பானதாகவோ கருதப்படுகின்றன ஆனால், இவை நம்முடைய செயல்திறனையும், கற்கும் வேகத்தையும், தூக்கத்தின் தரத்தையும், ஒட்டுமொத்த பார்வையின் சௌகரியத்தையும் பாதிக்கின்றன. எனவே, திரைகளைப் பயன்படுத்தும் பழக்கத்தில் விழிப்புணர்வும், முன்னெச்சரிக்கையான கண் பராமரிப்பும் எவ்வளவு அவசியம் என்பதை இது உணர்த்துகிறது.
ஆரோக்கியமான முறையில் திரையைப் பார்க்கும் பழக்கவழக்கங்களை உருவாக்க வேண்டியது அவசியம்.நல்ல விஷயம் என்னவென்றால், இந்த டிஜிட்டல் வாழ்க்கை முறையால் ஏற்படும் பெரும்பாலான கண் பிரச்சனைகளை, எளிய மற்றும் முறையான பழக்கவழக்கங்கள் மூலம் சரிசெய்ய முடியும். ‘வருமுன் காப்பதே சிறந்தது’, குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் அதிக நேரம் திரைகளைப் பயன்படுத்துபவர்கள் மத்தியில், ஆரம்பக்கால விழிப்புணர்வும் முறையான கண் பரிசோதனைகளும் மட்டுமே இதற்கு முக்கியத் தீர்வாகும்.
வேலை செய்யும் இடத்தில் அமரும் போது, முறைப்படி அமர்வது முக்கியம் உடலை சரியான அமர்வு நிலையில் (ergonomics) வைத்து கொள்வது, கண்களுக்கும் திரைக்கும் இடையே சரியான தூரத்தை தொடர்ந்து பின்பற்றுவது மற்றும் திரையின் வெளிச்சத்தை (brightness) சரியான அளவில் வைத்திருப்பது ஆகியவை கண்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள தசைகளின் அழுத்தத்தைக் குறைக்க உதவும். பொழுதுபோக்கிற்காகத் திரைகளைப் பார்க்கும் நேரத்தைக் குறைத்து, வெளிப்புற விளையாட்டுகளை ஊக்குவிப்பது குழந்தைகளின் கண் வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருக்கும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் கண் சுருக்குதல், அடிக்கடி ஏற்படும் தலைவலி அல்லது தொலைவில் உள்ளவற்றைப் பார்ப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருக்கிறதா என்று அடிக்கடி கவனிக்க வேண்டும். பணிபுரியும் ஊழியர்கள் சரியான உடல் அமர்வு நிலை, போதிய நீர்ச்சத்து மற்றும் சீரான தூக்க முறையைப் பின்பற்ற வேண்டும்; அதோடு, எவ்வளவு நேரம் தொடர்ந்து பணிபுரிகிறோம் என்ற விழிப்புணர்வோடு முழுமையாக கண் சிமிட்டுவதையும், திரைப் பயன்பாட்டிற்கு இடையே முறையான இடைவெளிகளை எடுத்துக்கொள்வதையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
மிக முக்கியமாக, கண்கள் சிவந்து போதல், வலி, மங்கலான பார்வை, வறட்சி அல்லது அடிக்கடி ஏற்படும் தலைவலி போன்ற தொடர்ச்சியான அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம். கண் மருத்துவரைத் தகுந்த நேரத்தில் அணுகுவது மிகவும் அவசியமானது; ஏனெனில், பாதிப்பு ஏற்பட்ட பிறகு சிகிச்சை அளிப்பதை விட, வருமுன் காக்கும் பராமரிப்பே எப்போதுமே அதிக பலன் தரும்.
டிஜிட்டல் யுகத்தில் கண் பராமரிப்புக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை இந்த ‘மருத்துவர்கள் தினம்’ நமக்கு நினைவூட்டுகிறது. திரைகள் நம்மை விட்டுப் போகப்போவதில்லை; சொல்லப்போனால், கல்வி, வேலை, மருத்துவம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றின் எதிர்காலத்தை அவைதான் தொடர்ந்து தீர்மானிக்கப் போகின்றன. எனவே, தொழில்நுட்பத்தைத் தவிர்ப்பதில் நமது கவனம் இருக்கக் கூடாது, மாறாக அதை பொறுப்புடன் பயன்படுத்துவதில்தான் இருக்க வேண்டும்.
நமது உடலின் மற்ற உறுப்புகளைப் போலவே, கண்களுக்கும் எப்போதாவது ஒருமுறை கவனம் செலுத்தாமல், தொடர்ந்து விழிப்புணர்வுடன் கூடிய முறையான பராமரிப்பை வழங்க வேண்டும். இன்றைய திரை சார்ந்த உலகில், தேவையற்ற திரை நேரத்தைக் குறைப்பது, குழந்தைகளை வெளியில் சென்று விளையாட ஊக்குவிப்பது மற்றும் அறிகுறிகள் தோன்றும் வரை காத்திருக்காமல் வழக்கமான கண் பரிசோதனைகளைச் செய்வது போன்ற எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள் சிறந்த பலனைத் தரும். நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை நாம் எவ்வாறு பாரமரிக்கிறோமோ, அதேபோன்று நமது கண்களையும் நாம் பாதுகாப்பாகப் பராமரிக்க வேண்டும்.
தொகுப்பு:கண் மருத்துவர் ஷிபு வர்க்கி
