×

காஞ்சிபுரம் முழுவதும் தொடர் மின்தடை பள்ளி மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அவலம்: இருளில் மூழ்கிய வீடுகள்:வீதிகளில் மக்கள் தஞ்சம்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் முழுவதும் நேற்று முழுவதும் தொடர் மின்தடை ஏற்பட்டதால் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டு கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் நேற்று முன் தினம் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டதால் வீடுகள் இருளில் மூழ்கின, பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். அண்மை நாட்களாகவே தமிழகம் முழுவதும் பகலில் மட்டுமல்லாது, இரவு நேர மின்வெட்டு என்பதும் தலைவிரித்தாடி வருகிறது. அதிலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் மின்வெட்டு என்பது கடந்த ஒரு மாத காலமாகவே இருந்து வருகிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் இரவு காஞ்சிபுரம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிகளுக்கு ஆளாகி மாநகரே இருளில் மூழ்கியது.

அதிலும் குறிப்பாக பெரிய காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம், பல்லவர்மேடு, தாயார் குளம், ஹசிங் போர்டு, ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெரு, பாண்டவ பெருமாள் கோவில் சன்னதி தெரு, ஒபி குளம் தெரு, மாண்டுகணீஸ்வரர் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரமின்றி பொதுமக்கள் தங்களின் வீட்டின் வாயிலில் அமர்ந்தும், பலர் நீண்ட நேரம் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக சாலையோரத்திலும் 2 மணி நேரத்திற்கும் மேலாக படுத்து உறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் மின்வெட்டு காரணமாக குழந்தை உள்ள வீட்டினர்கள் வீட்டின் வெளியில் தங்களது குழந்தை குட்டிகளோடு தெருக்களில் அமர்ந்தவாறும், மின்சாரம் எப்போது வரும் என்ற ஏக்கத்தோடும் காத்திருந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த தொடர் மின்தடையால் புதிய ஆட்சி தற்போது பின் நோக்கி தள்ளப்பட்டதாக வேதனை தெரிவித்தனர்.

மேலும், தமிழக முதல்வர் நேரடி கண்காணிப்பில் மின்வெட்டு பிரச்னையை கையில் எடுத்து உடனடி நடவடிக்கை எடுத்திட வழிவகுக்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தனர். காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வாழும் பகுதியாகும். பிள்ளையார்பாளையம் பகுதி 50க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் குடும்பங்கள் வாழும் பகுதியாகும். இப்பகுதிகளில் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. மேலும் ஒரு தனியார் பள்ளியும் இயங்குகிறது.

இந்தநிலையில், நேற்று பிள்ளையார்பாளையம் பகுதியில் மின்தடை என்று தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மின்சாரம் தடை செய்யப்பட்ட நிலையில் அரசுப்பள்ளிகளில் உள்ள மாணவ – மாணவர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வெளியில் அமர்ந்தும், மரத்தடியில் அமர்ந்தும் பாடம் படித்து கொண்டிருந்தனர். இதனால் மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். எனவே, மாணவ – மாணவிகளின் நலன் கருதி தமிழ்நாடு மின்சார வாரியமும், தவெக அரசும் முறையாக தடையில்லாத மின்சாரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள், மாணவ – மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kanchipuram ,
× RELATED பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான...