பாலக்காடு, ஜூலை 9: பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி அருகே கேரள அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்து நடத்துனர் படுகாயமடைந்தார்.
வடக்கஞ்சேரி அரசு பஸ் டிப்போவில் நடத்துனராக பணியாற்றுபவர் செய்து முகமது (46). இவர், கேரள மாநில அரசு இலவச மகளிர் பஸ்சில் நடத்துனராக ஒத்தப்பாலத்திலிருந்து புளிங்கூட்டம், ஆயக்காடு, வடக்கஞ்சேரி வழியாக கிழக்கஞ்சேரி பாண்டாம்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, வடக்கஞ்சேரி அருகே மந்நத்து பஸ் நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றி பஸ் முன்னால் நகர்ந்த போது பயணிகளின் கூட்ட நெரிசல் காரணமாக பஸ்சின் படியில் நின்ற நடத்துனர் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனைத்தொடர்ந்து உடனடியாக ஓட்டுநர் மற்றும் பஸ் பயணிகள் நடத்துநரை மீட்டு ஆலத்தூர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
