×

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக மாநில முதல்வர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

திருவாரூர்: கர்நாடக முதல்வர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என தமிழகை அரசை பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகாவின் வரைவுத்திட்ட அறிக்கைக்கு எதிராக தடை விதிக்க கோரி தமிழகம் வழக்கு தொடர்ந்தது. 2025 நவம்பர் 13ம் தேதி நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பில், வரைவு திட்ட அறிக்கை தயார் செய்ய ஒவ்வொரு மாநிலங்களுக்கும் உரிமை உள்ளது.

அதற்கு தடை விதிக்க முடியாது. விரைவு திட்ட அறிக்கை சட்டத்திற்கு உட்பட்டதா? என்பதை ஒன்றிய அரசும், நீர் வள ஆணையமும் முடிவு எடுத்து கொள்ளும். தடை விதிக்க இயலாது என்கிற தீர்ப்பை கர்நாடகம் தனக்கு அணை கட்டுவதற்கு சாதகமாக பயன்படுத்தக்கூடாது என்பதை தெளிவுபடுத்தி உள்ளது. கர்நாடகாவில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.கே. சிவக்குமார், ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சர் பாட்டீலை சந்தித்து தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் மேகதாது அணைக்கு எதிராக போடப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எங்களுக்கு அணைகட்ட அனுமதி வேண்டும் என கோரிக்கை விடுப்பது நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் நடவடிக்கைஆகும். எனவே, டி.கே.சிவக்குமார் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். டிகே சிவகுமார் தூண்டுதலில் கர்நாடக இன வெறியர் வாட்டாள் நாகராஜ் ஜூலை 15ல் ஓசூர் மற்றும் பெங்களூர் சாலையை மறித்து போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். தமிழக திரைப்படங்கள் கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என அறிவித்துள்ளார். இதனால் தமிழகம், கர்நாடகா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

எந்நேரமும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடிய பேராபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தேசிய தலைமையிடம் எடுத்துரைத்து மேகதாட்டு பிரச்சனையில் சட்டப்படி நடந்து கொள்ள டி.கே சிவக்குமாருக்கு அறிவுறுத்த வேண்டும். காவிரி பிரச்சனையில் இன மோதலை உருவாக்குவதை அனுமதிக்க கூடாது. கர்நாடகாவால் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் காங்கிரஸ் தேசிய தலைமை பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Karnataka ,Chief Minister ,Mekedatu Dam ,P.R. Pandian ,Tamil Nadu government ,President of the Coordination Committee ,of All Farmers' Unions of ,Tamil ,Nadu ,Supreme Court… ,
× RELATED மானாவாரி விவசாயத்தை பாதுகாக்க கோடை...