ஊத்துக்கோட்டை: அமோனியா கசிந்து 18 பேர் உயிரிழந்த கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு முழுவதும் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இறால் மற்றும் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த மாதம் 21ம் தேதி அமோனியா வாயு கசிந்து வடமாநில தொழிலாளர்கள் 83 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 51 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர், 14 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் கடந்த 3 நாட்களாக அமோனியா வாயு வெளியேற்றும் பணி நடந்தது. நேற்று முன்தினம் வரை 5 டன் அமோனியா வாயு அகற்றப்பட்டது. நேற்று 4வது நாளாக பைப்புகளில் எஞ்சியுள்ள அமோனியா வாயுவை அகற்றும் பணிகள் நடைபெற்றது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பெரியபாளையம் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 4 நாட்களாக அம்மோனியா வாயு அகற்றும் பணிகள் நடந்து வந்த நிலையில் இன்று (நேற்று) நிறைவு பெற்றது. கடந்த 2 நாட்களில் சேமிப்பு கலன்களில் இருந்து எடுக்கப்பட்ட 5 டன் எடையுள்ள அம்மோனியா வாயு நேற்று முன்தினம் அதிகாலை 5.30 மணியளவில் டேங்கர் லாரியில் எடுத்து செல்லப்பட்டு சென்னை மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் இறக்கப்பட்டது.
தொழிற்சாலையில் உள்ள குழாய்களில் எஞ்சிய அம்மோனியாவை கந்தக அமிலம் கொண்டு கம்ப்ரஸர் மூலம் அகற்றி சுமார் 400 கிலோ அம்மோனியா வாயு டேங்கர் லாரியில் மாற்றப்பட்டுள்ளது. இன்று (நேற்று) இரவு அல்லது நாளை (இன்று) அதிகாலையோ டேங்கர் லாரி புறப்பட்டு சென்னை மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும். நாளை வழக்கம் போல் போக்குவரத்து தொடங்கும் என தெரிவித்தனர்.
