திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சந்தியா திரையரங்கில் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி புஷ்பா திரைப்படம் வெளியிடப்பட்டது. அப்போது அங்கு வந்த நடிகர் அல்லு அர்ஜூனை பார்க்க ரசிகர்கள் திரண்டதால், கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி(32) என்ற பெண் உயிரிழந்தார். அவரது 8 வயது மகன் ஸ்ரீதேஜ் படுகாயமடைந்து பல மாதங்கள் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
இதுதொடர்பாக 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், நடிகர் அல்லு அர்ஜூன் 11வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு நாம்பள்ளி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று நம்பள்ளி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அல்லு அர்ஜூன் உள்பட குற்றம் சாட்டப்பட்ட 23 பேர் தொடர்பான 500 பக்க குற்றப்பத்திரிகையின் நகல்களை அரசு தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. விசாரணையில் அல்லு அர்ஜூன் காணொலி வாயிலாக ஆஜர் ஆனார். பின்னர், அடுத்த விசாரணையை வரும் 29ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
