சென்னை: ரியல் எஸ்டேட் ஆணைய தலைவராக இருந்த முன்னாள் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரை போல் பல நேர்மையான அதிகாரிகளை கட்டாயப்படுத்தி பதவி விலக செய்யப்படுவதாக ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சி காலத்தில் தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா இருந்தார்.
இவர் ஓய்வு பெற்ற பிறகு சிவ்தாஸ் மீனாவை கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரியல் எஸ்டேட் ஆணைய தலைவராக திமுக அரசு நியமனம் செய்தது. அவருடன் உறுப்பினர்களாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சுப்பிரமணியன் மற்றும் சுகுமார் சிட்டிபாபு நியமிக்கப்பட்டனர். இதில் சிவ்தாஸ் மீனா அவரது பணிக்காலத்தில் நேர்மையாக இருந்ததால் இவருக்கு ரியல் எஸ்டேட் ஆணைய தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் ரியல் எஸ்ேடட் ஆணைய தலைவராக இருந்த முன்னாள் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் அவருடன் உறுப்பினர்களாக பணியாற்றிய சுப்பிரமணியன், சுகுமார் சிட்டிபாபு ஆகியோர் நேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதுகுறித்து விசாரித்த போது, தவெக அரசு அமைந்த உடன் திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஒரே காரணத்திற்காக நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கில் அவர்களின் பதவிகளை ராஜினாமா செய்ய நேரடியாக நெருக்கடி கொடுத்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
அதே அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 2019ம் ஆண்டு ரியல் எஸ்டேட் ஆணைய தலைவராக ஞானதேசிகன் இருந்தார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு காலியாக இருந்த உறுப்பினர் பதவிக்கு முன்னாள் டிஜிபி சுனில்குமார் நியமிக்கப்பட்டார். சுனில்குமார் டிஜிபி என்பதால் ஞானதேசிகனை பதவியில் இருந்து நீக்கிவிட்டு சுனில்குமாரை தலைவராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திமுக ஆட்சி வந்ததும், நேர்மையான அதிகாரியான ஞானதேசிகன் ராஜினாமா செய்யத் தேவையில்லை. அவர் பதவிக் காலம் முடிந்த பிறகு முன்னாள் டிஜிபி சுனில் குமாரை தலைவராக நியமிக்கலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிவிட்டார்.
இதனால் ஞானதேசிகன் இரண்டரை ஆண்டு பணிக்காலத்தை முழுமையாக முடித்தார். அதன்பின்னர் முன்னாள் டிஜிபி சுனில் குமார் சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணைய தலைவராக முன்னாள் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீதான நியமிக்கப்பட்டார். தற்போது அவரையும் மிரட்டி ராஜினாமா செய்ய வைத்துள்ளனர் தற்போதைய அதிகாரிகள்.
ஆனால் தவெக அரசு, திமுக அரசு நிமிக்கப்பட்ட நேர்மையான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்துள்ளனர். இது தற்போது பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரிகள் தவெக அரசு மீது கடும் அதிருப்தியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
