பெரியபாளையம் இறால் தொழிற்சாலையில் 2 டன் அமோனியா அகற்றம்: இன்றும் பணிகள் தொடர்கிறது

 

குன்றத்தூர்: பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில் நேற்று 2வது நாளாக 2 டன் அமோனியா வாயு அகற்றப்பட்டது. பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது. இங்கு கடந்த மாதம் 21ம் தேதி வடமாநில தொழிலாளர்கள் அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டனர். இதனால் 83 பேர் சிகிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ஒடிசா மற்றும் அசாம், ஜார்க்கண்டு மாநிலங்களை சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர். அமோனியா வாயு கசிந்த தொழிற்சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 400 டன் கடல் உணவுகள் சென்னையில் உள்ள சேமிப்பு கிடங்குகளுக்கு பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த விபத்து சம்பந்தமாக பெரியபாளையம் போலீசார் கடந்த 22ம் தேதி வழக்கு பதிந்து தொழிற்சாலை உரிமையாளர்கள் ஜோசப்மோகன், ஜோசப் ஜெகன், மேலாளர் டேனியல், ஒப்பந்தகாரர் சுரேஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தொழிற்சாலையில் உள்ள அமோனியாவை நேற்று 2வது நாளாக அகற்றும் பணிகள் நடந்தது. இடையில் நேற்று பிற்பகலில் தொழிற்சாலை பகுதியில் திடீரென காற்று வீசியதால் வாயுவை அகற்றுவதில் சற்று தொய்வு ஏற்பட்டது, பின்னர் சிறிது நேரத்தில் காற்று சீரானதும் பனிகள் மீண்டும் தொடங்கியது. இது குறித்து கலெக்டர் கவிதா கூறுகையில், நேற்று முன்தினம் இரவு முதல் குழாய்களில் சேமிக்கப்பட்டுள்ள அமோனியா வாயு குளிர்வித்து சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனை நடமாடும் சேமிப்பு தொட்டிகளில் சேமிக்கும் பணிகள் நேற்று நடைபெற்றது. இதில் 2 டன் அமோனியா வாயு அகற்றப்பட்டது. இப்பணிகள் அனைத்தும் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் மாலைக்குள் முடியாத பட்சத்தில் நாளையும் (இன்று) பணிகள் தொடரும் என்றார்.

அதிகாரிகளின் மெத்தனமே காரணம்
திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தலைமையில், நேற்று தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்திலிருந்து அனைத்து தொழிற்சங்க தலைவர்கள், நிர்வாகிகள், பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் பேசுகையில், அமோனியா வாயு கசிவில் அப்பாவி தொழிலாளர்கள் 18 பேர் பரிதாபமாக பலியானார்கள். இதில் அனைத்து துறை அதிகாரிகளும் மெத்தனமாக செயல்பட்டு உள்ளனர். அவர்களின் மெத்தனப்போக்கே உயிரிழப்புக்கு முக்கிய காரணம்.

ஏனென்றால் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் சென்று முறையாக ஆய்வு நடத்துவது கிடையாது. சம்பவம் நடைபெற்ற தனியார் தொழிற்சாலைக்கு அதிகாரிகள் முன்னதாகவே சென்று முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து இருக்காது. இனி இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பின்னர், அனைத்து தொழிற்சங்க தலைவர்கள், நிர்வாகிகள் தெரிவித்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என சசிகாந்த் செந்தில் எம்பி தெரிவித்தார்.

Related Stories: