×

பாஜக பிரமுகரின் வீடியோவால் புதிய சர்ச்சை; கேரள நடிகர் சங்கத்திற்கு அதானி குழுமத்திடம் இருந்து ரூ.15 கோடி நிதியுதவி?: நடிகைகள் பரபரப்பு குற்றச்சாட்டு

கொச்சி: மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பில் நிதி முறைகேடு புகாரைத் தொடர்ந்து நடிகைகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மலையாள திரையுலகின் நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பில், நடிகை சுவேதா மேனன் தலைமையிலான குழு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் முறைகேடுகள் இருப்பதாகக் கூறி பொதுக்குழு அதனை ஏற்க மறுத்தது. இதனால் எழுந்த கடும் பிரச்னை காரணமாக அந்த கமிட்டி தனது பதவியை ராஜினாமா செய்தது. இந்த நிலையில், முறைகேடுகள் நிறைந்த பொதுக்குழுவை தற்காலிக குழுவாக ஏற்பது சாத்தியமில்லை என்று நடிகைகள் உஷா ஹசீனா, மாலா பார்வதி, மாயா விஸ்வநாத் மற்றும் அன்சிபா ஹாசன் ஆகியோர் கொச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து கூட்டாகத் தெரிவித்தனர்.

மேலும் தற்காலிக குழுவில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர்களான டாக்டர் ரோனி டேவிட் மற்றும் ஆஷா அரவிந்த் ஆகியோர் சஞ்சீவனி பணிகளை ஒருங்கிணைப்பதற்காக மட்டுமே தொடர்ந்து நீடிக்கின்றனர் என்றும் அவர்கள் விளக்கமளித்தனர். செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக பிரமுகர் பத்மஜா மேனன் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்ட நடிகை மாலா பார்வதி, ‘சுவேதா மேனனின் நற்பெயரைப் பயன்படுத்தி பன்னாட்டு நிறுவனமான அதானி குழுமத்திடமிருந்து 15 கோடி ரூபாய் நிதி உதவி பெற்றுத் தருவதாக ஒரு அரசியல் கட்சி பிரமுகர் வாக்குறுதி அளித்துள்ளார்.

எங்களுக்கு தெரிந்தவரை பத்மஜா ‘அம்மா’ அமைப்பில் உறுப்பினராக இல்லை. பன்னாட்டு நிறுவனத்திடமிருந்து எங்களுக்கு இந்த 15 கோடி ரூபாய் நிதி தேவையில்லை’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அன்சிபா ஹாசன், ‘சுவேதா மேனன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதாகக் கூறியதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை; ஆனால் பொதுக்குழுவின் மறைமுக திட்டம் குறித்து கேள்வி எழுப்பிய என்னை ஒரு மதவாதியாக சித்தரித்துக் கொடுமைப்படுத்தியுள்ளனர்’ என்று குற்றம் சாட்டினார்.

Tags : BJP ,Adani Group ,Kerala Nadigar Sangam ,Kochi ,Nadigar Sangam 'Amma ,Swetha Menon ,
× RELATED பீகார் மாநிலத்தில் உள்ள பங்கிபூர்...