×

சிறை துன்பங்களை அனுபவித்தும் பலனில்லை; இந்திய காதலியை காண எல்லை தாண்டிய காதலனின் சோக கதை: நீதிமன்ற உத்தரவுபடி பாகிஸ்தான் திருப்பி அனுப்பி வைப்பு

காதலியைச் சந்திப்பதற்காக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி வந்த ஆக்கிரமிப்பு காஷ்மீர் வாலிபர் உரி நீதிமன்ற உத்தரவின்படி திருப்பி அனுப்பப்பட்டார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த ஜீஷான் அகமது மிர் என்ற வாலிபர், உரி பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்த மே மாதம் 31ம் தேதி கடந்து வந்து இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். ஸ்னாப்சாட் சமூக வலைதளம் மூலம் பழகிய இரம் மஜீத் என்ற தனது இந்திய காதலியை நேரில் சந்திப்பதற்காகவே அவர் எல்லை தாண்டி வந்துள்ளார் என்பதும், அவருக்கு வேறு எந்தவித தவறான உள்நோக்கமும் இல்லை என்பதும் ராணுவ விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும், சட்டவிரோதமாக எல்லை தாண்டிய குற்றத்திற்காக அவர் உரி பகுதியில் உள்ள சிலிகோட் எல்லையில் கைது செய்யப்பட்டு பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து பாரமுல்லா சிறையில் அடைத்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. போலீசாரின் குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்ட உரி நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்ததுடன், அவரைத் திருப்பி அனுப்புவதற்கான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, ேநற்று ஜீஷான் அகமது மிர் கமன் போஸ்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டார்.

அவர் நாடு கடத்தப்படுவதற்கு முன்பாக, காதலி இரம் மஜீத் மற்றும் அவரது பெற்றோர், சகோதரிகள் ஆகியோர் ஜீஷானை சில நிமிடங்கள் நேரில் சந்திக்க போலீசார் அனுமதி அளித்தனர். இந்த உருக்கமான சந்திப்பு குறித்து காதலி இரம் மஜீத் கூறுகையில், ‘அவர் புறப்படுவதற்கு முன்பு இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் மட்டுமே அவரைச் சந்திக்க எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது; அவர் எதுவும் பேசவில்லை, நாங்கள் அங்கு இருந்த முழு நேரமும் அவர் அழுதுகொண்டே இருந்தார்’ என்று கண்ணீருடன் தெரிவித்தார். இவர்களின் இந்த காதல் கதையின் பிரிவு அங்கிருந்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : Pakistan ,of ,Uri ,Kashmir ,Zeeshan Ahmed Mir ,Line of Control ,
× RELATED குழந்தை வன்கொடுமை விளம்பரங்கள்: மெட்டா நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு கெடு!