×

பெரும்பாறை அருகே 2 கோடியில்அறிவிக்கப்பட்ட மேம்பாட்டுப் பணிகள் நிறுத்தம்: வனத்துறையினர் நடவடிக்கை

 

* சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

பட்டிவீரன்பட்டி: பெரும்பாளை அருகே புல்லாவெளி அருவி பகுதியில் ரூ.2 கோடியில் நடைபெற்று வந்த மேம்பாட்டு பணிகள் வனத்துறையினரின் தடையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தின் பெரும்பாறை, கல்லாங்கிணறு, தடியன்குடிசை உள்ளிட்ட மலைக்கிராமங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழைநீர், குடகனாறு ஆற்றில் நீண்ட தூரம் பயணித்து புல்லாவெளி என்ற இடத்தில் அருவியாக பாய்கிறது. பெரும்பாறை அருகேயுள்ள மஞ்சள்பரப்பு என்ற இடத்திலிருந்து, சுமார் 500 அடி தூரத்தில் இந்த எழில்மிகு அருவி அமைந்துள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மலையடிவார பகுதியில் உள்ள சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த அருவிக்கு வருகை தந்து இதன் அழகை ரசிப்பதுடன், அருவியில் குளித்து மகிழ்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

முந்தைய நிலையில் இந்த அருவியின் தண்ணீர் விழும் பகுதிக்கு சென்று குளிப்பதற்கு, போதிய பாதை வசதி இல்லாமல் இருந்தது. பின்னர் இந்த அருவியில் நடந்த மேம்பாட்டு பணிகளின் ஒருபகுதியாக, தண்ணீர் விழும் பகுதிக்கு செல்ல இரும்பு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. இதில் சுற்றுலா பயணிகள் சென்று குளித்து மகிழ்ந்து வந்தனர். இதற்கிடையே கடந்த திமுக ஆட்சியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அருவியில் மேம்பாட்டு பணிகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி துவங்கிய பணிகள், விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த மேம்பாட்டு பணியின் கீழ் சுற்றுலா பயணிகளுக்கான உடைமாற்றும் அறை, கழிப்பறை, கார் பார்க்கிங், அருவிக்கு செல்ல படிக்கட்டுகள், பாதுகாப்பாக குளிப்பதற்கு இரும்பு தடுப்பு வேலி உள்ளிட்ட பணிகள் நடந்தது. இந்நிலையில் அருவி விழும் பகுதி, கன்னிவாடி வனத்துறைக்கு சொந்தமானது என்று கூறிய வனத்துறையினர், அங்கு நடைபெற்ற மேம்பாட்டு பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் மலைகிராம மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதற்கிடையே தற்போது அருவி பகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து தற்போது வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் மட்டும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அருவி பகுதியில் நடைபெற்ற பணிகள் வனத்துறை தடையால் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மலைகிராம மக்கள் கூறியதாவது: கடந்த திமுக ஆட்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள புல்லாவெளி அருவி மேம்படுத்தப்பட்டு, பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி புல்லாவெளி அருவியை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலாதுறை சார்பில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளுக்கான மேம்பாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன.

இந்த அருவியின் அழகை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இரும்பு படிக்கட்டுகள், பூங்கா, வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறை, அருவியில் பாதுகாப்பாக குளிக்கும் வசதி, உடை மாற்றும் அறைகள் உள்ளிட்ட பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் வனத்துறையினர் இந்த பணிகளுக்கு தடை விதித்துள்ளனர். இந்த பணிகள் முடிவுற்ற பின்பு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இதன்மூலம் இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். வாழ்வாதரமும் உயரும். இதுமட்டுமின்றி இங்கு விளையும் பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும். இந்த அருவி சுற்றுலா மையமானால் எங்களது வாழ்க்கை தரம் உயரும்.

இப்பகுதியில் விளையும் மிளகு, ஏலம், காபி போன்றவற்றை சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கும் போது இதன் மதிப்பும் உயரும். எங்கள் வாழ்வும் உயரும் என்ற எண்ணத்தில் இருந்தோம். ஆனால் தற்போது தமிழக அரசு இதனை முடக்கும் நோக்குடன் செயல்பட்டுள்ளது. எனவே தமிழக முதல்வர் வனத்துறையினரிடம் அறிவுறுத்தி, புல்லாவெளி அருவி பகுதியில் மேம்பாட்டு பணிகளை முழுமையாக செய்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் எங்கள் தரப்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறினர்.

Tags : Pullaweli Aruvi ,Dindigul ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை…