×

‘இரண்டுங்கெட்டானாகி விடுவேனோ!’

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 122 (பகவத்கீதை உரை)

அர்ஜுனனுக்கு இன்னமும் சந்தேகம்  விலகவில்லை. சுய நம்பிக்கை அற்றவனாக அவன் பேசுகிறான்.

“அயதி ச்ரத்தயோபேதோ யோகாச்சலிதமானஸ
அப்ராப்ய யோகஸம்ஸித்திம் காம் கதிம் க்ருஷ்ண கச்சதி’’ (6:37)
‘‘அக்கறை, ஆர்வம், ஈடுபாடு எல்லாம் இருக்கிறது கிருஷ்ணா, ஆனால் முயற்சியில் தொய்வு ஏற்பட்டால் யோகம் கிட்டாது என்று சொல்கிறாய். அப்படி யோகம் கிட்டாதவனின் நிலைதான் என்ன?’’
“கச்சினோபயவிப்ரஷ்டஸ் சின்னாப்ரமிவ நச்யதி
அப்ரதிஷ்டோ மஹாபாஹோ விமூடோ ப்ரஹ்மண பதி’’ (6:38)

‘‘விண்ணில் மேகங்கள் கருமையாகவே கூடுகின்றன; ஆனால் அவை காற்றால் சிதறடிக்கப்படுகின்றன. அவை கலை வதோடு சற்று நேரத்தில் காணாமலேயே போய்விடுகின்றன. இந்த மேகங்களால் மண்ணுக்கு மழை என்ற பயன் உண்டா? இந்த மேகம் போல, பிரம்ம மார்க்கத்தில் மோகம் கொண்டு, வாழ்வில் பற்றுக் கோடின்றி அதனால் இரண்டிலிருந்தும் வழுவி அவன் சிதறிப்போன மேகம் போலாகிறானே!’’

“ஏதன்மே ஸம்சயம் க்ருஷ்ண சேத்துமர்ஹஸ்ய சேஷதத்வதன்ய ஸம்சயஸ்யாஸ்ய சேததா ந ஹ்யுபபத்யதே’’ (6:39)‘‘

கிருஷ்ணா என்னுடைய இந்த சந்தேகத்தைத் தீர்த்துவை. உன்னையன்றி சமாதானமடையும் வகையில் வேறு யாரால் சரியான விளக்கத்தை எனக்கு அளிக்க முடியும்?’’ ஒரு சாமானியனாகத்தான் அர்ஜுனனின் சந்தேகம் அமைகிறது. பற்று வேண்டாம், பாசம் வேண்டாம், உற்றார், உறவினர் வேண்டாம், நட்பு, அன்பு வேண்டாம்… எல்லாவற்றையும் துறந்துவிட்டு, பரமாத்மாவை நாடி யோகத்தை அடைய வேண்டும் என்று ஒருவன் பயிற்சியில் வைராக்கியத்தோடு இறங்குகிறான் என்று வைத்துக் கொள்வோம்.

அவன் யோகம் அடைவான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அவனே மரணமடைந்தான் என்றால், அதோடு அவனுடைய உலகியல் தொடர்புகள் அவனிடமிருந்து முற்றிலுமாக, நிரந்தரமாக விலகி விடுகின்றன. ஆனால், அந்த கட்டம்வரை அவன் யோகம் அடைந்துவிட்டான் என்பதற்கு என்ன சாட்சி? உலகியல் தொடர்பும் போய், யோகமும் கிட்டாததாகிய இரட்டை நஷ்டம் அடைய ஏன் இத்தனை சிரமப்பட வேண்டும்? அர்ஜுனன் பட்டவர்த்தனமாகத் தன் மனக் குழப்பத்தை விவரிக்கிறான்.

‘‘இதோ நான் இருக்கிறேன்; எனக்குக் குடும்பம் இருக்கிறது. இந்த அளவில் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். யோகம் அடைய வேண்டும் என்ற ஞான நோக்கத்திற்காக நான் முயற்சி செய்தேனானால், இந்த சந்தோஷத்தை இழக்க வேண்டியிருக்கும்தானே? யோகமும் கிட்டாமல், இந்த சந்தோஷமும் போய் இரண்டுங்கெட்டானாக நான் தவிக்க வேண்டுமா? ‘‘நான் இக்கரையில் நிற்கிறேன். நீ அக்கரையில் நிற்கிறாய்.

இங்கிருக்கும் என்னை, உன்னருகே வரச் சொல்கிறாய். நான் இக்கரையிலுள்ள ஒரு மரத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறேன். இதை விட்டுவிட்டு மறுகரைக்கு வரவேண்டும். இக்கரை மீதான பற்றை அறுத்துவிட்டால் அக்கரையை நான் பற்றிக் கொள்ள முடியும் என்பது நிச்சயமா? இந்தப் பிறவிப் பெருங்கடலில் இக்கரை எனக்குத் தெரிகிறது; ஆனால் அக்கரை எங்கிருக்கிறது? தொட்டுவிட முடியும் என்ற நம்பிக்கையில் வானோக்கிப் பறந்தால், வானத்தின் எல்லை அதற்கும் மேலாக விரிகிறதே, அதேபோல இந்தக் கடலின் பரப்பும் விஸ்தரித்துக் கொண்டே போகிறதே!

‘‘உண்மையாக, ஆத்மார்த்தமாக முயற்சி செய்யவில்லை; அதனால் மறுகரையை அடையவில்லை’’ என்று வெகு சுலபமாக என் இயலாமைக்கு நீ காரணம் காட்டி விடுவாய். ஆனால் தவிப்பவன் நானல்லவா? `இந்திரியங்களை அடக்கு, மனமும் அடங்கும், யோகம் கிட்டும்’ என்று மனித இயல்பை மீறச்சொல்கிறாய். என்னால் என் புலன்களை அடக்க இயலவில்லை. ஏதேனும் ஒன்றையாவது ஏதேனும் ஒரு சமயத்திலாவது அடக்கி வெற்றி கண்டிருக்கிறேனா என்பதும் சந்தேகமே.

ஆக, உன்னை நம்பி இக்கரையை விட்டுப் புறப்படும் நான், அக்கரையை அடைய முடியாவிட்டால் என் கதிதான் என்ன? கடலில் மூழ்குவதா? சொல், உன் ஒருவனால்தான் என் சந்தேகத்தைத் தெளிவிக்க முடியும் ’’தன்மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும், அர்ஜுனனுக்கு, கிருஷ்ணன்மீது முழு நம்பிக்கை இருக்கிறது. அவர் என்றைக்காவது ஏதேனும் பிரச்னையில் சிக்கிக் கொண்டிருக்கிறாரா என்று அவனால் யோசித்து, தேடிப் பார்க்க முடியவில்லை. அவ்வாறு எதுவுமே இல்லை என்பதுதான் அவனுடைய தேடலின் முடிவு. ‘இதுதான் என் பிரச்னை, இதற்குத் தீர்வு என்ன?’ என்று அவர் யாரிடமும் கேட்டதேயில்லை. ஏன், எந்த கட்டத்திலும் அவர் யோசித்தோ, தயங்கியோ நின்றதேயில்லை. சந்தேகம் மனித குலத்தின் உடன்பிறப்பு.

அது ஆலமரமாய் பல விழுதுகளை விட்டுக் கொண்டே இருக்கிறது. அவற்றை ஒவ்வொன்றாக வெட்டிக் கொண்டே போனாலும், மூல சந்தேகம் அப்படியே நிற்கிறது. அதனால் விழுதுகள் மீண்டும் மீண்டும் நிலத்தில் விழுகின்றன; நிலைத்து விடுகின்றன. புதிதாக ஒன்றைப் பெறுவதற்கு கையிலிருக்கும் ஒன்றைத் தியாகம் செய்ய வேண்டும் என்ற யதார்த்தத்திலேயே மனித வாழ்க்கை அமைந்திருக்கிறது. கடையிலிருந்து ஒரு பொருளை வாங்க வேண்டுமானால், கையிலிருக்கும் பணத்தை தியாகம் செய்ய வேண்டும்! ஒன்று போனால்தான் இன்னொன்று வரும்! ஆனால் இது தியாகம் இல்லை, வியாபாரம் என்பது நமக்கும் தெரியும்.

அந்த நாளைய பண்டமாற்று இப்போது கரன்ஸி மாற்றாக மாறியிருப்பதைத் தவிர வேறு புதுமை இல்லை. ஆனால், ‘நற்செயல் செய்; நற்பணியில் ஈடுபடு, நீ புண்ணியம் ஈட்டுவாய்’ என்றும் அறிவுறுத்தப்படுகிறது. நல்லது, நம் நேரத்தை, பணத்தை, சந்தோஷமாக இருக்கக் கூடிய தருணங்களை நாம் தியாகம் செய்யத் தயார்தான். ஆனால் அதற்கு பதிலாகக் கிட்டும் இந்தப் புண்ணியம் எத்தகையது, எப்படி இருக்கும்? ‘உன் குடும்பத்தின் ஆரோக்கியம் மேம்படும், அதன் வளம் சிறக்கும்; மகிழ்ச்சி பொங்கும்’ என்றெல்லாம் புண்ணிய பலன்களாகச் சொல்லப்படுமானால், அதற்காக எத்தனை காலம் காத்திருக்க வேண்டும்? அல்லது அவ்வாறு ‘புண்ணியம்’ கிட்டுமானால் அது நாம் செய்த நற்பணிக்கான விளைவுதான் என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ளவோ, விகிதாசாரப்படி ஒப்பீடு செய்யவோ முடியுமா?

ஏனென்றால், ‘பாபம் செய்யாதே, அதன் பலனை நீ அனுபவிப்பாய்’ என்ற சாபத்தை ஒருவன் ஏற்கிறான் என்றால், பின்னாளில் அவ்வாறு அவன் ஏதேனும் துன்பம் அனுபவிக்கும்போது அது, தான் செய்த பாப காரியத்துக்கான பலன்தான் என்று அவனால் ஒப்பிட்டுக்கொள்ள முடியுமா? எந்தப் பாவத்தின் எந்தப் பரிமாணத்தில் இந்தத் துன்பம் விளைந்திருக்கிறது என்று அவனால் கணக்குப் போட முடியுமா? ஏனென்றால் தொடர்ந்து பாபகாரியங்களில் ஈடுபடுபவன், அடுத்தடுத்த தன் செயல்களால் முந்தையவற்றை மறந்துபோக வாய்ப்பிருக்கிறது. ஆகவே, துன்பம் என்று வரும்போது அது எந்த பாபத்திற்கான பின்விளைவு என்று பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியுமா?

அர்ஜுனனுடைய சாமானிய மனோ தத்துவத்தை கிருஷ்ணன் அறியமாட்டாரா என்ன? ஆனால் அவரும் சாமானியராக இருந்தாரானால், ‘அது அப்படித்தான். நம்பினால் நம்பு, நம்பாவிட்டால் போ’ என்று எரிச்சலுடன் அவனைத் திருப்பி அனுப்பிவிட முடியும். ஆனால் அவர் பரமாத்மா. அர்ஜுனனின் மனதையும் அறிவார், ஒரு யோகியின் மனதையும் அறிவார். இருவரிடமும் எவ்வாறு உரையாடுவது என்பதையும் அறிவார். இப்போது அர்ஜுனனுக்கு பொறுமையுடன் பதிலளிக்க வேண்டும். இந்தக் குழப்பவாதியை, அவன் போக்கிலேயே போய் நிஜத்துக்குத் திருப்ப வேண்டும்.

ஏனென்றால் இவன் பூதனையோ, சகடாசுரனோ, திருணாவர்த்தனோ, வத்சாசுரனோ, பகாசுரனோ, அகாசுரனோ, தேனுகாசுரனோ, அரிஷ்டாசுரனோ, லியோமாசுரனோ அல்லது கேசி போன்ற அரக்கன் அல்ல; அந்த அரக்கர்கள் மாற்று உருவில் வந்தவர்கள்; தன்னைக் கொல்வதுதான் அவர்களுடைய குறிக்கோள் அதில் அவர்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை.

இத்தகையவர்களை வதைப்பதைத் தவிர வேறு வழியில்லை; ஏனென்றால் இவர்கள் அழிவைத் தவிர வேறு எதனாலும் மாற்றப்பட முடியாதவர்கள். பாலக வயதே ஆனாலும், அவர்களிடம், தான் காட்டிய கோபம், போர் ஆற்றல் எல்லாம் வேறே. ஆனால் அர்ஜுனன் சாதாரணன். கடுஞ்சொல்லாலோ, செயலாலோ அல்லாமல் இதமாகத்தான் இவனைக் கையாள வேண்டும் என்று  எண்ணிக் கொண்டார் கிருஷ்ணன்.

தியானம் செய்வதில் நோக்கம் இருக்கிறது. அது, அமைதியைப் பெறுவது. தியானப் பயிற்சியே அமைதியின் பிரதிபலிப்புதான் என்பதை உணர முடிந்தால், அப்போதுதான் அந்த தியானத்துக்கு அர்த்தம் இருக்கும். அதை நம்ப வேண்டும். உறுதியாக நம்ப வேண்டும். போலித்தனம் கூடாது. விளைவுகளுக்காகப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.

உடனேயே, இப்போதே, அடுத்த வாரத்திற்குள் என்ற எதிர்பார்ப்பு இருக்குமானால் தியானம்புரிவதாகச் சொல்லிக் கொள்ளலாமே தவிர, அது நடைமுறை சாத்தியமாகாது. இதை அர்ஜுனன் புரிந்து கொண்டு விட்டானானால், அவனுக்குப் பயிற்சி மேற்கொள்வது எளிதாகிவிடும். எந்தவகை சந்தேகத்தையும் தீர்த்து வைப்பவரே குருவாக அமையத் தகுதி படைத்தவர்.

இப்போது அர்ஜுனன் அந்த மதிப்பீட்டில்தான் கிருஷ்ணனிடம், ‘என்னைக் குழப்பத்திலிருந்து விடுவிப்பாயாக’ என்று மன்றாடுகிறான். அதாவது கொஞ்சம் கொஞ்சமாக போரில் இறங்க அவன் தன்னை ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறான் என்பதைத்தான் இவ்வாறு வெளிப்படுத்துகிறான். இதில் பாராட்ட வேண்டிய அம்சம் என்னவென்றால், பொதுவாக விளங்கும் ஒரு குருவிடம் அவன் இவ்வாறு கோரவில்லை.

அப்படி யாரிடமாவது கேட்டிருந்தானானால் அவன் மொத்தக் குழப்பவாதியாகவே மாறிவிட்டிருப்பான். அதனால்தான், ‘தேவர்கள், ரிஷிகள் ஆகிய மாலோர் யாரும் இச்சந்தேகத்தை நீக்குவதில், கிருஷ்ணா, உனக்கு நிகராக மாட்டார்கள். ஏனென்றால் நீயே சர்வக்ஞனான ஈஸ்வரன்’ என்று அவன் கிருஷ்ணனைப் போற்றுகிறான். கிருஷ்ணன் எத்தகையவர் என்பதைஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் விவரிக்கிறார்;‘‘அவதார புருஷரால் (கிருஷ்ணனால்) ஆகாத காரியம் என்று எதுவுமே இல்லை. ஜீவனையும், ஆத்மாவையும் பற்றிய சூட்சுமமான பிரச்னைகளையெல்லாம் அவர் வெகு சுலபமாகத் தீர்த்து விடுகிறார். அவருடைய போதனைகளை ஒரு சிறு குழந்தைகூட தெரிந்துகொள்ளும்.

அவர் கற்பகோடி காலங்களாகச் சேர்ந்துள்ள அக்ஞானத்தை அகற்றும் ஒளியுடைய திவ்ய ஞான சூரியன் ஆவார்’’

“பார்த்த நைவேஹ நாமுத்ர விநாசஸ்தஸ்ய வித்யதே
ந ஹி கல்யாணக்ருத்கஸ்சித்தூர்கதிம் தாத கச்சதி’’ (6:40)

‘‘பார்த்திபா, யோகம் அடைந்தவனுக்கு, இம்மையிலோ. மறுமையிலோ அழிவென்பதே இல்லை. நல்லதையே எண்ணுபவன், நல்லதையே செய்பவன் யாரும் நலிவுறுவதில்லை அப்பா’’ அர்ஜுனனை, ‘அப்பா’ என்று விளிக்கிறார் கிருஷ்ணன், இது மிகவும் அந்நியோன்யமான பாசச்சொல். ஒரு தந்தை தன் மகனைப் பார்த்து, ‘கொஞ்சம் வரியாப்பா?’ என்று கேட்பதுபோன்ற வாஞ்சை மிகுந்த வார்த்தை.

தகப்பனுக்குப் பிள்ளை எப்படியோ அதேபோலதான் குருவுக்கு சிஷ்யன். அதாவது ஆசான், தன் மாணாக்கர்கள் அனைவரையுமே தன் சொந்தப் பிள்ளைகள் போலத்தான் நடத்துவார். அவர்களுடைய அறியாமை விலக வேண்டும், அவர்கள் ஞானவானாகத் திகழ வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருப்பார். அதற்காக பாசமிகு தந்தையைப்போல, தன் சொந்த சுகங்களையும் தியாகம் செய்யக் கூடியவராக இருப்பார்.

‘எதையோ எதிர்பார்த்து, கையிலிருப்பதையும் இழப்பது பெரிய துக்கமல்லவா?’ என்பது அர்ஜுனனின் கேள்வி (சந்தேகம்). ‘‘கையிலிருப்பதை இழப்பதோடு எதிர்பார்ப்பதும் கிட்டாவிட்டால்…? முழுமையாக சாதனை செய்ய முடியாத குறையால் நான் இரட்டை இழப்புகளுக்கு ஆளாவேனே! மனதை அடக்காவிட்டால், புலன் களைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகுமோ என்ற பயம் எனக்குள் குடியேறிவிட்டால், என் நிலைமை மிகவும் பரிதாபமாகி விடுமே!’’ என்ற கையறு நிலையில் அர்ஜுனன் புலம்பும்போது, ‘நல்லதையே நினை, நல்லதையே செயல்படுத்து’ என்று மிக எளிமையாகப் பதில் சொல்கிறார் கிருஷ்ணன்.

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்

Tags : Arjuna ,
× RELATED புதன் மற்றும் ராகு தரும் டிஜிட்டல் யோகம்