?கோயிலுக்குச் சென்றால் அமைதியாக வழிபட முடியவில்லை. பலரும் அங்கு வந்து அரட்டை அடிக்கின்றார்கள், ஊர் வம்பு பேசுகின்றார்கள், வியாபாரத் தலமாக போய்விட்டது. எனவே கோயிலுக்குப் போகாமல் வீட்டிலேயே வழிபாடு நடத்தலாமா?
– ஜி.வரதராஜன், கோவில்பட்டி.
பக்தி என்பது நமக்கும் இறைவனுக்கும் இடையிலான ஒரு அந்தரங்கப் பயணம். அங்கு மற்றவர்களின் நடத்தைக்கு இடம் கொடுக்கக் கூடாது. உலகம் ஒரு சந்தை போல, சத்தமாகத்தான் இருக்கும். ஆனால், அந்தச் சத்தத்திற்கு நடுவிலும் அமைதியாக இருக்கும் கலையைத்தான் கோயில் நமக்குக் கற்றுத் தருகிறது. மற்றவர்கள் மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பதைவிட, நம் பார்வையை மாற்றிக் கொள்வதே அமைதிக்கு வழி. கவனம், இறைவனிடம் மட்டும் இருந்தால், மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது கண்ணுக்குத் தெரியாது. மற்றவர்கள் கோயிலைச் சந்தையாக மாற்றினாலும், நீங்கள் அதைச் சந்நதியாகவே பாருங்கள். அவர்கள் எதைப் பேசினாலும் அது அவர்களின் வினை. நீங்கள் எதைக் கவனிக்கிறீர்கள் என்பதுதான் உங்கள் பக்தி.
?மனதில் ஆயுள்பயம் வரும் போது என்ன ஸ்லோகம் சொன்னால் மனது தெளிவடையும்?
– கிரிஜா சம்பத்குமார், நங்கநல்லூர்.
மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்லலாம். இந்த மந்திரம், சிவபெருமானுக்கு உரிய மிக சக்திவாய்ந்த மந்திரமாகும். இது மரண பயத்தைப் போக்கி, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை அருளக்கூடியது. ரிக் வேதம் மற்றும் யஜூர் வேதம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த மந்திரத்தை தினமும் உச்சரிப்பது, தீராத நோய்களைக் குணப் படுத்தி, மன அமைதி மற்றும் ஆன்மிக முன்னேற்றத்தைத் தரும்.
மந்திரம்:
“ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் – ம்ருத்யோர் முக்ஷீய மாம்ரிதாத்’’
இதன் பொருள்: இறைவனே, நறுமணம் மிக்கவனே, அனைவரையும் வளர்ப்பவனே! பழுத்த வெள்ளரிக்காய் அதன் காம்பிலிருந்து விடுபடுவது போல, நாங்கள் மரணத்தின் பிடியிலிருந்தும், பிறப்பு – இறப்பு சுழற்சியிலிருந்தும் விடுதலை பெற்று, மோட்சத்தை அடைய அருள்புரிய வேண்டுகிறோம். தினமும் 9,11,21,51 அல்லது 108 முறை ஜபிக்கலாம்.
?ஜோதிடத்தில் ஏழாம்பாவத்தை ஏன் களத்திரபாவம் என்று சொல்கிறார்கள்?
– கணேசன், துறையூர்.
ஏழாம்பாவம், ஒன்றாம் பாவத்திற்கு நேர் எதிர் பாவம். ஒன்றாம் பாவத்திற்கு சரிசமமான பாவம். ஒருவன் இரண்டு விஷயங்களைத்தான் சரிசமமாக நினைப்பான். ஒன்று நட்பு. நட்பு வந்துவிட்டால் உயர்வு தாழ்வு கிடையாது. இரண்டாவது மனைவி. எனவேதான் ஏழாம் இடத்தை நட்பு மற்றும் மனைவி அல்லது கணவனுக்கான இடமாக வைத்தார்கள். கணவனும் மனைவியும் புரிந்து கொள்வதிலும், செயல்படுவதிலும் ஒருவரை ஒருவர் சம மதிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, ஏழாம் பாவத்தை களத்திர பாவமாக வைத்தார்கள்.
?சமய மரபில் ஆறுகளுக்கு பெண்கள் பெயராக ஏன் வைத்திருக்கிறார்கள்?
– ராமதாசன், அடையாறு – சென்னை.
ஆருயிர்க் கெல்லாம் அன்பு செய்தல் வேண்டும் என்ற வள்ளலாரின் கொள்கையை இயற்கை வடிவில் செய்து கொண்டிருப்பவை ஆறுகள். அந்த அன்பின் வடிவமாகவே நாம் ஆறுகளைப் பெண் பெயரிட்டு, தெய்வமாக வணங்குகிறோம். நம் முன்னோர்கள், ஆறுகளைப் பெண்களாகக் கருதியதால்தான், அவற்றை அசுத்தம் செய்யாமல் மிகவும் மரியாதையுடன் நடத்தினார்கள். அந்தப் பார்வை மீண்டும் நமக்குத் தேவைப்படுகிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா ஆறுகளும் பெண் பெயர்களையே கொண்டுள்ளன. ஆனால், `பிரம்மபுத்ரா’ (பிரம்மாவுடைய மகன்) ஆறு மட்டும் ஆண் பெயரைக் கொண்டுள்ளது. அதன் ஆக்ரோஷமான வேகம் மற்றும் பிரம்மாண்டம் காரணமாக அது `நதியாக’ (ஆண்) அழைக்கப்படுகிறது.
?குருமங்கள யோகம் என்ன செய்யும்?
– முரளிதரன், கரூர்.
ஜோதிடத்தில் குரு மங்கள யோகம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த யோகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. `குரு’ என்றால் வியாழன் கோளையும், `மங்களன்’ என்பது செவ்வாய்க் கோளையும் குறிக்கும். இந்த இரு கிரகங்களும் இணையும்போது அல்லது ஒருவரை ஒருவர் சம சப்தமமாக (நேருக்கு நேர்) பார்க்கும் போது, இந்த யோகம் உண்டாகிறது. குரு அறிவிற்கும், செவ்வாய் வீரத்திற்கும் காரகர்கள். இந்த யோகம் உள்ளவர்களுக்கு, சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் அதிகமாக இருக்கும். எதற்கும் அஞ்சாத துணிச்சலும், அதே சமயம் நிதானமான புத்திசாலித்தனமும் இவர்களிடம் இருக்கும். அரசு வேலை, ராணுவம், காவல்துறை அல்லது பெரிய நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை ஏற்கும் வாய்ப்பு இவர்களுக்குத் தேடி வரும். நிர்வாகத் திறமையில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
செவ்வாய் பூமிகாரகன் என்பதால், இந்த யோகம் உள்ளவர்களுக்கு நிலம், வீடு, வண்டி வாகனங்கள் போன்ற சொத்துக்கள் தடையின்றி அமையும். சமூகத்தில் ஒரு தனி கௌரவம் மற்றும் செல்வாக்கு இருக்கும். மற்றவர்களுக்கு வழிகாட்டும் ஒரு `குரு’ போன்ற நிலையில் இவர்கள் இருப்பார்கள். இவர்களுடைய சொல்லுக்குப் பிறர் மதிப்பளிப்பார்கள். இந்த யோகம் முழுமையான பலன் தர வேண்டுமானால், குருவும் செவ்வாயும் ஜாதகத்தில் 6, 8, 12 ஆகிய மறைவு வீடுகளில் இருக்கக்கூடாது. மேலும், பகை வீடுகளில் இல்லாமல் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்றிருந்தால், பலன் இரட்டிப்பாகும். எல்லாவற்றையும்விட குரு தசையோ செவ்வாய்த் தசையோ வரவேண்டும்.
?வாஸ்து சாஸ்திரத்தில் அக்னி மூலையில் தண்ணீர் தேங்கக் கூடாது என்கிறார்களே?
– சந்திரசேகரன், வேலூர்.
எதிர்ப்புச் சக்திகள் ஒன்றை ஒன்று இயங்கவிடாது. அக்னி நெருப்பு. தண்ணீர் அதனை இயங்கவிடாது. அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது. தண்ணீரை அடுப்பில் ஊற்றினால் சமையலாகாது. எனவேதான் அக்னி மூலையில் சமையல் அறையை வைத்தார்கள். அங்கே தண்ணீர் தேங்கக் கூடாது என்றார்கள். யோசித்துப் பார்த்தால் எல்லாவற்றிலும் ஒரு தர்க்க ரீதியான நியாயம் நமக்குப் புலப்படும்.
?கோயிலுக்குப் போகும் பொழுது நாம் எப்படிச் செல்ல வேண்டும்?
– வி.ஹரிணி, சென்னை.
மிகுந்த அலங்காரங்களோடு விலை உயர்ந்த ஆடை அணிந்து கோயிலுக்குச் செல்வது தவறு. காரணம், அங்கே பகவானை பார்ப்பதைவிட நம்மை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். அவர்களுடைய வழிபாட்டுக்கு நாம் இடைஞ்சல் செய்வதாக ஆகிவிடும். அடுத்ததாக கோயிலில் இறை வழிபாட்டில்தான் கவனம் இருக்க வேண்டுமே தவிர, நம்முடைய கண்களோ காதுகளோ மற்றவர்கள் மீது இருக்கக் கூடாது. இதை மிக எளிதாக, கவியரசு கண்ணதாசன் ஒரு பாடலில் சொல்லி இருக்கின்றார்;
“ஆடை அணிகலன் ஆபரணங்கள்
ஆண்டவன் விரும்புவதில்லை
அங்கொரு கண்ணும் இங்கொரு
கண்ணும் ஆலய வழிபாடு இல்லை’’
உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பிவைக்கவும். ஏன் எதற்கு எப்படி? தினகரன், ஆன்மிக மலர் தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை – 600 004.
