ஜோதிடத்தில் தொழில் காரகனாக இருப்பவர் சனி பகவான்தான், சனி பகவான் தொழிலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார். இந்த சனி பகவான் வலிமை பெறும் பொழுது, புதிய தொழில்களையும் தொழில்களுக்குள் புதிய யுக்தியையும் மற்றும் அளப்பரிய பெரிய மாற்றங்களையும், நுட்பமான சில விஷயங்களையும் ஏற்படுத்துகிறார். இதற்குள், ராகு – கேது என்னும் சாயா கிரகங்கள் வந்து தங்களின் பரிபாலனத்தை செய்யும் பொழுது பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. அவ்வாறு கடந்த மூன்று வருடங்களுக்குள் ஏஐ(AI) என்னும் மாயக்காரன் பல வேலைகளை செய்தான் என்றால் அது நிச்சயம் நிதர்சனமானவை. இந்த ஏஐ(AI) தொழில்நுட்பம் பெரிய மாற்றத்தையும் ஏற்றத்தையும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றது.
அவ்வாறு செய்யும் பொழுது எல்லா தொழில்களும் டிஜிட்டல் விளம்பரங்களுக்குள் தள்ளப்பட்டு தங்களை டிஜிட்டல் மயம் என்னும் மாயா ஜாலத்திற்குள் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆக்கப்படுகின்றன. எது எப்படி ஆயினும் ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த டிஜிட்டல் யுகம் என்ன செய்யும்? எப்படி செய்யும்? என்ன புதிய தொழில்களை உருவாக்கும் என்பது அதிசயம்தான்.
இதே முப்பது வருடங்களுக்கு முன்பு ஐடி (IT) என்னும் புதிய துறை உருவானது என்பது மாற்ற முடியாத ஒன்றாக உள்ளது. இன்னும் காலம் மாற்றங்களை செய்து கொண்டே போகும்.
டிஜிட்டல் யோகம் என்றால் என்ன?
தனிப்பட்ட ஜாதகத்திலோ அல்லது கோட்சாரத்திலோ சந்திரன் மற்றும் சனி ஆகிய கிரகங்கள் கம்ப்யூட்டர் துறையில் ஈடுபடுத்துகிறது. ஆனால், அதனிலும் துல்லியமாக புதன் என்ற அறிவுக்கிரகமும், ராகு என்ற மாயா கிரகமும் இணைவு பெற்று இருப்பதே டிஜிட்டல் யோகம் ஆகும். இதில் புதன் மற்றும் ராகு இணைவு பெற்றாலும், புதன் – ராகு சப்தமமாக இருந்து மாறுதலை உண்டாக்கினாலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
டிஜிட்டல் யோகத்தின் உள் அமைப்புகளின் சிறப்புகள் என்ன?
இவ்வுலகம் முழுதும் நிகழ்வுகள் ஒவ்வொன்றிற்கும் கிரகங்கள்தான் காரணம். கிரகங்கள் தனித்து இயங்க முடியாது. அவை பொருட்களுக்குள், உயிரினங்களுக்குள், எல்லாப் பொருட்களுக்குள்ளும் ஊடுருவி தங்களின் பணியை நிறைவேற்றிக் கொள்கின்றன. அவ்வாறே சாயா கிரகங்களுக்கு சொந்தமாக ராசி வீடுகள் இல்லை. ஆகவே, எந்த வீடுகளில் பயணிக்கின்றனவோ அந்த வீடுகளை தனதாக்கிக் கொள்ளும் இயல்புடையது. அந்த தருணங்களில் தங்களுடன் இணையும் கிரகங்களுக்கு ஏற்ப பெரிய மாற்றத்தை தோற்றுவிக்கிறது. புதன் என்பது புத்திசாலித்தனம், ராகு என்பது பிரமாண்டம். இவை இணைந்து தருகின்ற பிரமாண்டம் ஆச்சர்யத்திற்குரியது. சாயா கிரகங்களுடன் இணையும் கிரகங்கள் ஆட்சி பெற்று உச்சம் பெற்று இருப்பதால் பெரிய மாற்றம் ஏற்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
டிஜிட்டல் யோகப் (புதன் + ராகு) பலன்கள்
* புதன் என்பதற்கு தரகு என்ற பொருளும் உண்டு. அதாவது, நடுவில் இருந்து வியாபாரம் செய்யும் துறையானது மிகவும் வளர்ச்சி பெறும்.
* புதன் என்பது அறிவு. மனிதனின் அறிவு இன்னும் சில வளர்ச்சிகளைப் பெறுவதற்கும் மாற்றங்களை ஏற்படுத்தவும் இந்த புதன் – ராகு இணைவான டிஜிட்டல் யோகம் நன்றாக வேலை செய்யும். குறிப்பாக, கல்வியில் ஒரு புதிய துறையை உருவாக்கும் அளவிற்கு மாற்றங்களை உண்டாக்கும்.
* வங்கித்துறையில் இந்த டிஜிட்டல் யோகத்தால் பெரிய ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்.
* வழக்கமான செயல்களில் அல்லாமல், வேறு புதிய யுக்திகளால் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது இந்த டிஜிட்டல் யோகம் என்றால் மிகையில்லை.
* ஆன்லைன் வர்த்தகம், பங்குச் சந்தை, மென்பொருள் துறைகளில் புதிய மாற்றத்தையும் ஏற்றத்தையும் ஏற்படுத்தும் என்றால் மிகையில்லை.
* இது போலவே, சில எதிர்மறை பலன்களும் உண்டு. அதையும் நாம் சொல்லித்தான் ஆக வேண்டும். இந்த டிஜிட்டல் யோகம் வரவால், ஓவியர்கள், புகைப்படக் கலைஞர்கள், இசைத்துறை வல்லுநர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் போன்றோர் பெரிய வாய்ப்புகளை இழக்கும் சூழ்நிலைகளுக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதும் நிச்சயம்.
* சிலருக்கு இந்த யோகத்தால் தூக்கமின்மை, நரம்பு தொடர்பான பிரச்னைகள், சில விஷயங்களுக்கு முடிவெடுக்க முடியாமல் தயங்குவதும் தள்ளிப்போடும் சூழ்நிலைகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சில நேரங்களில் தவறான தகவல்களை உண்மையென நம்பும் அளவிற்கு மாயைகளை உருவாக்கும் யோகம் இது. மாயக்காரன் ராகு, புதனுடன் இணைந்து மாயத்தை உருவாக்குவதில் பெரிய ஆச்சர்யமில்லை.
டிஜிட்டல் யோகத்திற்கான பரிகாரங்கள் உண்டா?
ஒரு கிரக இணைவால் எப்படி யோகம் உண்டாகிறதோ அதுபோலவே, அவயோகமும் உண்டாகிறது. இந்த அவயோகத்தால் உடலில், மனதில், தொழிலில், வாழ்வில் சில மாற்றங்கள் ஏற்படுத்தும். இதனை சரி செய்யவே பரிகாரங்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
* புதன் கிழமை ராகு காலத்தில் ரெங்கநாதரை தரிசனம் செய்யுங்கள். இதனால் ஏற்படும் பாதிப்பு, எதிர்மறை பலன்கள் குறையும்.
* காளிங்க நர்த்தனர் என்னும் கிருஷ்ணரை ராகு காலத்தில்பச்சை வண்ண மலர்களால் மாலை தொடுத்து திங்கள்கிழமையும், புதன் கிழமையும், வழிபடுவதால் வாழ்வில் மாற்றங்கள், ஏற்றங்கள் உருவாகும்.
* திருச்சி அருகே திருஈங்கோயில் மலை,மலைமேல் எழுந்தருளியுள்ள மரகதலிங்கேஸ்வரரை தரிசனம் செய்வதால் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
