சென்னை: உயர்மட்ட தலைவர்கள் முதல் அடிமட்ட நிர்வாகிகள் வரை அதிமுக-விலிருந்து கொத்து கொத்தாக விலகி தவெக-வில் சேர்ந்து வரும் நிலையில், குதிரை பேரத்தில் முதல் குற்றவாளியே முதல்வர் விஜய் தான் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டி உள்ளார்.
தனது இந்த குற்றச்சாட்டுக்கு அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.காமராஜிடம் பேரம் பேசியதே சாட்சி என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கும் மேல் “மதிமுக MLA-க்களிடம் விஜய் பதவி விலகச் சொன்னது அப்பட்டமான குதிரை பேரம்” என்று சாடி உள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், இதையெல்லாம் பார்க்கும் போது தவெக என்பது நிச்சயம் ஒரு தூய சக்தி அல்ல; மாறாக மக்களை ஏமாற்றும் சக்தி, நாசகார சக்தி என்று கடுமையாக விமர்சித்தார்.
மாற்றம் வேண்டும் என்று திமுக, அதிமுக-விற்கு பதிலாக மக்கள் தவெக-விற்கு வாய்ப்பளித்ததாக கூறப்படும் நிலையில், இரு கட்சிகளுக்கும் தவெக உண்மையில் மாற்று அல்ல என்பதை மக்கள் விரைவில் உணர்வார்கள். திமுக ஆட்சியில் ஊழல் இருந்ததாக இப்போது கூறும் வைகோ, கூட்டணியில் இருந்த போது வாய் மூடி கொண்டிருந்ததற்கு காரணம் கேட்டால் கூட்டணி தர்மம் என்கிறார், இதை கேட்கும் போது எப்படி இருக்கிறது?
வைகோ-வின் இந்த பேச்சு முற்றிலும் தவறானது மற்றும் முதுகில் குத்தும் பேச்சு என்று கூறினார். அதே போல அதிமுக-வில் இருந்து தவெக-வுக்கு தாவியவர்களை விஜய் விரைவில் நடுத்தெருவில் நிறுத்தப் போகிறார். எடப்பாடி பழனிசாமியின் தலைமையை மாற்றினால் எல்லாம் சரியாகும் என இவர்கள் சொல்வது அவர்களது தவறை மறைக்க போடும் நாடகம். அதிமுக-வில் இருந்து விலகி சென்றவர்கள் மீண்டும் அதிமுக-விலேயே இணைய வேண்டும்.
தேவைப்பட்டால் அவர்களுக்காக கட்சி தலைமையிடம் நான் பேச தயாராக இருக்கிறேன் என்றார். மேலும் முதல்வர் விஜய்-யையே தோற்கடிக்கும் அளவிற்கு தவெக அமைச்சர்கள் அதிகமாக கதை விடுகின்றனர். ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தவர்கள், ரீல் விட்டு ஆட்சியை தொடர்கிறர்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்க்கு மக்கள் அறுதிப் பெரும்பான்மை தரவில்லை. சினிமாவில் பிரபலம் என்பதாலேயே விஜய்க்கு தனிப்பெருங்கட்சி என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது. அதிமுக, திமுக கையில்தான் மக்கள் கடிவாளத்தை கொடுத்துள்ளனர். திமுக தயவில் வெற்றி பெற்றவர்கள் ஆதரவோடுதான் தவெக ஆட்சி அமைத்துள்ளது என்றார்.
