×

எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி: முன்னாள் மாவட்ட செயலாளர் அதிமுகவில் இருந்து விலகல்

 

தஞ்சாவூர், ஜூலை 2: அதிமுகவில் கடந்த 43 ஆண்டு காலமாக பணியாற்றி வந்த ஒரத்தநாடு தொகுதி முன்னாள் அதிமுக வேட்பாளரும், முன்னாள் மத்திய மாவட்ட செயலாளருமான மா. சேகர், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தஞ்சாவூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: 43 ஆண்டுகால அரசியல் பயணத்தில், நடந்து முடிந்த 2026ம் சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு நான் தோல்வியைத் தழுவினேன். இந்த தேர்தலுக்குப் பின், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் பின்னணியில், எனது அரசியல் பயணத்தை எப்படித் தொடர்வது, மக்களுக்கு எவ்வாறு சிறப்பாகப் பணியாற்ற முடியும் என்று தீவிரமாகச் சிந்தித்தேன்.

தற்போதைய அதிமுக தலைமை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “அதிமுகவில் தற்போதைய தலைமைக்கு நிர்வாகிகளை அரவணைத்துச் செல்லும் தன்மை இல்லை. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் உடன்பாடு வைத்துக் கொண்டு முதலமைச்சராக முயற்சித்தார் என்று கூறப்படும் மையக்கருத்தே கட்சியில் பலரது அதிருப்திக்கும், தற்போதைய வெடிப்புக்கும் அடிப்படை காரணம்” என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், இது குதிரை பேரத்தால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும், மக்கள் பணியாற்றவே துணிச்சலுடன் இந்தச் சொந்த முடிவை எடுத்துள்ளேன்.

இன்று (ஜூலை 2) சென்னையில் மகாபலிபுரத்தில் நடைபெறும் நிகழ்வில் மதியழகன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் இணைகிறேன். என்னுடன் ஒரத்தநாடு மற்றும் தஞ்சாவூர் பகுதியிலிருந்து சுமார் 30,000 தொண்டர்களின் ஆதரவோடு முக்கிய நிர்வாகிகள் பலரும் தவெக-வில் இணையவுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Edappadi Palaniswami ,Former District Secretary ,AIADMK ,Thanjavur ,Orathanadu ,Central District ,Ma. Sekar ,
× RELATED வீடு கட்டுவதற்கு ரூ.50,000 மாமூல் கேட்டு தவெக நிர்வாகி மிரட்டல்