×

வீட்டில் இருந்து சிறுக, சிறுக காதலனுக்காக 129 சவரன் திருடிய இளம்பெண்

 

பூந்தமல்லி, ஜூலை 8: காதலனுக்காக வீட்டில் இருந்து சிறுக, சிறுக 129 பவுன் நகைகளை இளம்பெண் திருடிக் கொடுத்த நிலையில், நகைகளை விற்று உல்லாசமாக இருந்த காதலன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி அருகே மதுரவாயல் ஏரிக்கரை லட்சுமி நகர் ராஜிவ்காந்தி தெருவில் பன்னீர்செல்வன்(51) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வந்த பன்னீர் செல்வனின் சகோதரர் தமிழ்செல்வன் என்பவர் இறந்து விட்டார். அண்ணனுக்கு ஆண் வாரிசுகள் இல்லாததால் அண்ணி மற்றும் 3 பெண் குழந்தைகளை பன்னீர்செல்வன் கவனித்து வருகிறார். பன்னீர்செல்வன் அவருக்கு சொந்தமான 22 சவரன் தங்க நகைகளை அண்ணியிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கூறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணி வீட்டில் வைத்திருந்த தங்க நகைகளை பன்னீர்செல்வன் சரிபார்த்தபோது, அவருக்கு சொந்தமான 22 சவரன் தங்க நகைகள் மற்றும் அண்ணிக்கு சொந்தமான 107 சவரன் தங்க நகைகள் என மொத்தம் 129 சவரன் தங்க நகைள் காணாமல் போனது தெரிய வந்தது. இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலைய குற்றப்பிரிவில் பன்னீர்செல்வன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்படாமல் நகைகள் மட்டும் திருடு போனதால் வீட்டில் இருந்தவர்களே நகைகளை எடுத்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர்.

அதில், பன்னீர்செல்வனின் அண்ணன் மகள் இந்த சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. போலீசாரின் தொடர் விசாரணையில், கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு விடுமுறையில் வேலை செய்து வந்த இடத்தில் கார்த்திக் என்பவருடன் இந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது கார்த்திக்கின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை மருத்துவ தேவைக்கு பணம் தேவைப்படுகிறது என கூறி அந்த பெண்ணிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தை வாங்கியுள்ளார். மேலும், கார்த்திக் கேட்டபோது எல்லாம் அந்த பெண் வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் நகை மற்றும் பணத்தை எடுத்து வந்து கார்த்திக்கிடம் கொடுத்து வந்துள்ளார். இதனை கார்த்திக் சாதகமாக பயன்படுத்தி கொண்டு அவரது நண்பர்களுடன் சேர்ந்து தங்க நகைகளை விற்பனை செய்து அதில் வந்த பணத்தைக் கொண்டு செல்போன், இரு சக்கர வாகனம், கார் என வாங்கி ஆடம்பரமாக செலவு செய்து உல்லாசமாக சுற்றி வந்துள்ளனர்.

இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் தொடர்புடைய செனாய் நகரைச் சேர்ந்த கார்த்திக்(21), ஆவடியைச் சேர்ந்த குமரகோபால்(20), பிரகாஷ்(22), சென்னை நந்தனம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(47), சென்னை மாத்தூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா(28) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 6 சவரன் தங்க நகைகள், 1 செல்போன், ரூ.50 ஆயிரம் ரொக்கம், பைக், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வீட்டில் இருந்து தங்க நகைகளை திருடிச் சென்ற இளம்பெண் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து, போலீசார் 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Poonamalli ,Maduravoyal ,Poonamalli… ,
× RELATED திருத்தணியில் விடுமுறை நாளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு