உங்க புகழ் பாட “பள்ளி சிறுவர்கள்” தான் கிடைத்தார்களா முதல்வரே.!! ரீல்ஸ் அரசியலில் ஈடுபடுவது வெட்கக்கேடு

சென்னை: செங்கல்பட்டு மற்றும் திருத்தணி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற முதலமைச்சர் விஜய் பிறந்த நாள் விழாவில், பள்ளி சிறுவர்களை வைத்து வாழ்த்து பாடல் பாடச் செய்து தவெகவினர் ரீல்ஸ் எடுத்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன், குழந்தைகளை தொடர்ந்து பகடைகாய்களாக பயன்படுத்தும் தவெக-விற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளி என்பது மாணவர்கள் கல்வி கற்கும் இடம். அது எந்தக் கட்சியின் புகழ் பாடும் மேடையோ, ரீல்ஸ் எடுக்கும் படப்பிடிப்பு தளமோ அல்ல.
தவெக அரசு பதவியேற்ற நாள் முதல் மக்கள் பணியில் காட்ட வேண்டிய அக்கறையை, ரீல்ஸ் அரசியலில் காட்டி வருவது ஜனநாயகத்தின் வெட்கக்கேடு என்று கடுமையாக சாடி உள்ளார்.

முதலமைச்சர் சினிமா துறையிலிருந்து வந்தவர் என்பதற்காக, அந்த சினிமா கலாச்சாரத்தை பள்ளி மாணவர்களிடம் திணிப்பது ஏற்க முடியாத செயல். இது போன்ற செய்கைகளை தவெக அமைச்சர்கள் ஊடக பேட்டிகளில் “முறையற்ற செயல்” என்று கூறுவது மட்டும் போதாது. மாணவர்களின் கல்வி சூழலை அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்தியவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உண்மையாகவே தமிழக நலன்மேல், மாணவர்கள் மேல் அக்கறை கொண்ட எந்த ஒரு அரசு இதுபோன்ற செய்கைகளை ஊக்கப்படுத்தாது. எனவே பள்ளி வளாகங்களில் அரசியல் நிகழ்ச்சிகள், புகழ் பாடல்கள், ரீல்ஸ் படப்பிடிப்புகள் போன்றவற்றை உடனடியாகத் தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார் வானதி சீனிவாசன்.

Related Stories: