தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்பு: ராகுல் பிரதமராக வர வேண்டும் என்பதுதான் நமது இலக்கு என பேச்சு

 

சென்னை: ராகுல் பிரதமாக வர வேண்டும் என்பதுதான் நமது அடுத்த இலக்கு என்று காங்கிரஸ் மாநில புதிய தலைவராக பொறுப்பேற்ற மாணிக்கம் தாகூர் கூறினார்.  தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் எம்பியை கட்சி தலைமை அறிவித்தது. புதிய தலைவர் பதவியேற்கும் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று மாலை நடந்தது. புதிய தலைவர் மாணிக்கம் தாகூரிடம், முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை பொறுப்புகளை ஒப்படைத்தார். தொடர்ந்து மாணிக்கம் தாகூர் முறைப்படி தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.

பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள் ராஜேஷ்குமார், விஸ்வநாதன், அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர், டாக்டர் செல்லக்குமார், முன்னாள் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, பீட்டர் அல்போன்ஸ், எம்பிக்கள் பிரவின் சக்கரவர்த்தி, விஷ்ணு பிரசாத், சசிகாந்த் செந்தில், சுதா, கிறிஸ்டோபர் திலக், எம்எல்ஏ தாரகை கத்பட் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் புதிய தலைவர் மாணிக்கம் தாகூர் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வேண்டும் என்றால் நம்முடைய ஈகோவை விட்டு நாம் அனைவரும் சேர்ந்து வேலை பார்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சி மட்டும் தான் முக்கியம் என்பதை யோசிக்க வேண்டும். என்னை பொறுத்தவரைக்கும், வாய்க்கால் சண்டையா, வரப்பு சண்டையா?. என்ன? காங்கிரசை யார் அடித்தாலும் திருப்பி அடிப்பேன். எங்களை தொட்டால் விடமாட்டோம்.

ராகுல்காந்தி தான் எங்கள் முகம். அவர் தான் எங்கள் எதிர்காலம். ராகுல் காந்தியால் மட்டும் தான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் எழுச்சி பெறும். இதில் எந்த சந்தேகமும் கிடையாது. நான் எல்லாம் ஒரு கருவி தான். ராகுல் காந்தி பிரதமராக இருக்க வேண்டும் என்பதுதான் லட்சியமாக இருக்க வேண்டுமே தவிர வேற ஒன்றும் நமக்கு தேவை இல்லை. தவெக கூட்டணியில் நாம் இருக்கிறோம். நம்முடைய அமைச்சர்கள் பங்கும் இருக்கிறது. நாம் இந்த கூட்டணி ஆட்சியில் இருக்கும் போதே காங்கிரஸ் கட்சியின் பலத்தை கூட்ட வேண்டும். எப்படி கூட்ட முடியும். தமிழகத்தில் ராகுல்காந்திக்கு எந்த சர்வே எடுத்தாலும் சரி.

ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்று 60லிருந்து 65 சதவீதம் பேர் சொல்கிறார்கள். எதிர்பபார்ட்டியில் மோடி. அது 35 மார்க்கே தட்டாது. ராகுல் காந்திக்கு ஆதரவு கொடுப்பவர்கள் ஏன் காங்கிரசுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்பது தான் கேள்வி. தேடல் என்பது விஜய்க்கு 32 முதல் 35 சதவீதம் வரை வாக்குகள் உள்ளது. ராகுலுக்கு 65 சதவீதம் வாக்குகள் இருக்கிறது.

இந்த ஆதரவை நாம் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதுதான் லட்சியமாக இருக்க வேண்டும். விஜய்யை நம்பி எப்படி அந்த கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றதோ?. அதேபோல் ராகுல்காந்தியை நம்பி தான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற முடியும். எல்லாரும் ராகுல்காந்தியை தான் முன்னிறுத்த வேண்டும். இந்த தேர்தலில் எது நடந்துச்சோ இல்லையோ, தமிழநாட்டில் இனிமேல் பணம் கொடுத்து வெற்றி பெற முடியாது. பணத்துக்கு வேலை இல்லை. உழைக்கக்கூடிய காங்கிரஸ்காரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடிய ஒரு அரசியலை மாற்றி இருக்கிறது. இதை நாம் மறந்து விடக்கூடாது. 2029ல் ராகுல் பிரதமாக வர வேண்டும் என்பது தான் அடுத்த இலக்காக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி, கிருஷ்ணசாமி, டாக்டர் செல்லக்குமார், பீட்டர் அல்போன்ஸ், மாநில துணைத் தலைவர் கோபண்ணா, மாநில பொதுச்செயலாளர்கள் சிரஞ்சீவி, ஆலங்குளம் எம்.எஸ்.காமராஜ், ரங்கபாஷ்யம், சென்னை மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவர் எம்.எஸ்.திரவியம், மருத்துவர் அணி மாநில தலைவர் டாக்டர் கலீல் ரகுமான், கவுன்சிலர் சிவ ராஜசேகரன், ஓபிசி பிரிவு மாநில தலைவர் நவீன், துணைத் தலைவர் பரப்பாடி காமராஜ், சட்டத்துறை இணைச் செயலாளர் எஸ்.கே.நவாஸ், ஓபிசி பிரிவு துணை தலைவர்கள் எஸ்.தீனா, நித்தியா பிரியா ரவி, தாம்பரம் பொறுப்பாளர் தாம்பரம் நாராயணன் மற்றும் ஐயம் ெபருமாள், எஸ்.எம்.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: