திருவள்ளூர், ஜூன் 30: திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த திம்மபூபாலபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்கலோடை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் சண்முகம் (24). இவர் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் சுமார் இரவு 7 மணியளவில் தனது உறவினரின் மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு சண்முகம் பணிக்கு சென்றுள்ளார்.
இரவு, பகல் என தொடர்ந்து வேலை முடித்துவிட்டு மாலை மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, புல்லரம்பாக்கம், காந்திநகர் பகுதிக்கு வந்தபோது தூக்க கலக்கத்தில் மோட்டார் சைக்கிளை சாலையின் ஓரம் செல்லும் பூண்டி வரத்து கால்வாயில் தடுமாறி விழுந்து சேற்றில் சிக்கிக் கொண்டு உயிரிழந்துள்ளர். இது குறித்து புல்லரம்பாக்க்ம போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
