தேன்கனிக்கோட்டை அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை குத்தி கொலை செய்தேன்: கைதான கணவன் பரபரப்பு வாக்குமூலம்

 

தேன்கனிக்கோட்டை, ஜூன் 30: தேன்கனிக்கோட்டை அருகே, மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், குத்தி கொலை செய்தேன் என கைதான கணவன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். கர்நாடக மாநிலம், உனுசனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தப்பா மகன் ராஜேஷ் (30), கூலித்தொழிலாளி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, மாடக்கல் ஊராட்சி மல்லிகைபாய் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த சுஷ்மிதா(24) என்பவரை, கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது வந்துள்ளது. இதனால், கடந்த 3 மாதங்களுக்கு முன், சுஷ்மிதா பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். நேற்று முன்தினம் மதியம், ராஜேஷ், அவரது பெற்றோர் கோவிந்தப்பா-கெம்பம்மா மற்றும் ஊர் பெரியவர்கள் 30 பேர், மல்லிகைபாய் தொட்டி கிராமத்தில் உள்ள சுஷ்மிதா வீட்டுக்கு பஞ்சாயத்து பேச வந்தனர்.

அப்போது, பொதுமக்கள் பஞ்சாயத்து பேசிக்கொண்டு இருந்த போது, திடீரென ஆத்திரமடைந்த ராஜேஷ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி கழுத்தில் ஆவேசமாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த சுஷ்மிதாவை மீட்ட பெற்றோர், அஞ்செட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அதற்குள் சுஷ்மிதா இறந்து விட்டார். தகவலறிந்து வந்த தளி போலீசார், அவரது சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, மனைவியை கொலை செய்து விட்டு தப்பியோடிய ராஜேஷ், கர்நாடகா மாநிலம் கோடள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

பின்னர், தளி போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.கைதான ராஜேஷ் போலீசாரிடம் கூறுகையில், `எனது மனைவி நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை தட்டிக்கேட்டதால், 3 மாதங்களுக்கு முன்பு என்னை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம், ஊர் பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்திய போது, சுஷ்மிதா மீண்டும் என்னிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டேன்,’ என வாக்குமூலம் அளித்துள்ளார். இதை தொடர்ந்து, போலீசார் அவரை தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: