சென்னை: கடந்த 2001-06 அதிமுக ஆட்சியில் அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் 2006ல் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில், வருமானத்துக்கு அதிகமாக சுமார் ரூ.5 கோடி அளவில் சொத்து சேர்த்தது தெரியவந்தது. இதையடுத்து, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததற்கான முகாந்திரம் இருந்ததாக கூறி அமலாக்கத் துறை விசாரித்தது. அதன்அடிப்படையில், 2022 செப்டம்பரில் 160 ஏக்கர் நிலம் உள்பட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி மதிப்பு 18 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
இதை தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணனின் தூத்துக்குடி, மதுரை, சென்னையில் உள்ள ரூ.1.26 கோடி அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அனிதா ராதாகிருஷ்ணனின் மேல்முறையீடுக்கு பின் சொத்து முடக்கத்தை ரத்து செய்து மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதிஅருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், லஞ்ச ஒழிப்பு துறையால் ஏற்கனவே முடக்கப்பட்ட சொத்துகளையும், வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்ட சொத்துகளையும் அமலாக்கத்துறையால் முடக்க முடியாது என மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கூறியுள்ள முடிவு தவறானது. குற்றத்தின் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் என்று அடையாளம் காணப்படும் சொத்துகளை முடக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. சொத்து முடக்கம் நீக்கப்பட்டால், அனிதா ராதாகிருஷ்ணன், அவரது குடும்ப உறுப்பினர்களால் அந்த சொத்துகள் பிறருக்கு விற்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட வேண்டும் என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும். அதுவரை தற்போதையை நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
