தஞ்சாவூர்: தஞ்சாவூர் அடுத்த ஒரத்தநாடு பகுதியில் திமுக அயலக அணி தலைவர் முத்தமிழ்செல்வன் இல்ல திருமண விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்று திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இன்றைக்கு அமைந்திருக்கக்கூடிய சோபா மாடல் ஆட்சியுடைய போலி பிம்பம் கடந்த ஒரு மாதத்தில் அடித்து, துவைக்கப்பட்டு, நொறுங்கி கிடக்கின்றது. ஒவ்வொரு நாளும் இந்த ஆட்சியுடைய அவலங்கள் எல்லாம் மக்கள் புரிந்துகொண்டு இருக்கிறார்கள்.
தூய சக்தி, தூய சக்தி என சொன்னவர்கள் ஆட்சிக்கு வந்த 5வது நிமிஷமே குதிரை பேரத்தை தொடங்கினார்கள். பிற கட்சிகளுக்கு முதலில் சோபா போகும். சோபாவிற்கு பின்னாடியே நம்முடைய முதலமைச்சர் துரத்திக்கிட்டே போவார். அப்புறம் முதலமைச்சர் பின்னாலேயே அதிமுக எம்எல்ஏக்கள் எல்லாம் ராஜினாமா கடிதத்தோடு வரிசையில் வருவதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இன்னைக்கு இந்த காட்சிதான் ஒரு மாதமாக ரிப்பீட் மோடில் தினமும் இது ஒரு செய்தியாக வந்துகிட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் எங்க பார்த்தாலும் மின்வெட்டு. இன்னொரு பக்கம் விவசாயிகளுடைய போராட்டம். எல்லாத்தையும் விட மிகப்பெரிய ஒரு கொடுமை சட்டமன்ற ஒழுங்கு சீர்குலையுது. இதையெல்லாம் கழகம் சார்பாக சட்டமன்றத்தில் நாங்க எல்லாம் பேசினோம். ஆனால் அதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் சொன்னாரா என பார்த்தால் ஒரு பதிலும் கிடையாது. எங்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம், இது சட்டமன்றமா? இல்ல சினிமா தியேட்டரா?
இல்ல ஏதாவது ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துட்டோமா என கேக்குற அளவுக்கு, இன்றைக்கு சட்டமன்றத்துடைய தரத்தையே ஆளுங்கட்சியினர் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எதற்கு எடுத்தாலும் திமுகதான் காரணம் அப்படிங்கறதை ரெடிமேட் பதிலாக இன்றைய ஆட்சியாளர்கள் வைத்திருக்கிறார்கள். நம்முடைய தலைவர் செய்த பணிகளால் நல்லது நடந்தா, அதற்கும் சேர்ந்து இந்த ஆட்சியாளர்கள் இன்றைக்கு ஸ்டிக்கர் ஒட்டிட்டு இருக்கிறார்கள்.
அதுமட்டும் இல்ல, நம்முடைய தலைவரை சிறுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, தலைவரை தேடிக்கொண்டிருக்கிறார் என்றும் பேசினார். இன்றைக்கு மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலமாக, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலமாக, நான் முதல்வன் திட்டங்கள் மூலமாக, நம்முடைய தலைவர் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறார், எங்கும் நிறைந்திருக்கிறார் நம்முடைய தலைவர்.
தினமும் மக்களோடு மக்களாக இருக்கக்கூடியவர் நம்முடைய தலைவர் மக்களுடைய இதயங்களில் இருக்கக்கூடியவர் தலைவர். கிண்டல் பண்றதாக நினைத்து முதலமைச்சர், அவரை அவரே இன்னைக்கு எக்ஸ்போஸ் பண்ண தொடங்கி இருக்கிறார். இன்னும் அவர் சட்டமன்றத்தில் டான்ஸ் மட்டும்தான் ஆடவில்லை. அடுத்த கூட்டத்தொடர்ல நிச்சயம் ஒரு டான்ஸ் பர்பாமன்ஸும் இருக்கிறது. அது எங்களுடைய எதிர்பார்ப்பு. இவ்வாறு அவர் பேசினார்.
* தெரியாத்தனமா ஜெயிக்க வச்சிட்டோம் பெரம்பூரில் மக்கள் புலம்பல்
‘‘சென்னையில் இருக்கக்கூடிய முதலமைச்சருடைய தொகுதி, பெரம்பூர் தொகுதி மக்கள் என்ன தெரியுமா சொல்கிறார்கள்? ‘‘நாங்கெல்லாம் தெரியாம ஒருத்தரை தெரியாத்தனமா ஜெயிக்க வைச்சிட்டோமே, அவர் எங்க போனார்? யாராவது பார்த்தீங்களா?’’ என்று கேட்கும் அளவுக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மக்கள் புலம்பிட்டு இருக்கிறார்கள். இந்த ஆட்சியில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் யாரைத் தேடிட்டு இருக்கு? மின்சாரத்தைத் தேடிட்டு இருக்கு. போன 5 வருடம் நல்லா இருந்த சட்டம் ஒழுங்கை மக்கள் தேடிட்டு இருக்காங்க’’ என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
* பேரிடரில் தமிழ்நாடு
‘‘இன்றைக்கு தமிழ்நாடு இவ்வளவு பெரிய ஒரு பேரிடரில் மாட்டிக்கிட்டு இருக்கு. இந்த பேரிடரில் இருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டியது நம்முடைய பொறுப்பு, உடன்பிறப்புகளாகிய நம்முடைய பொறுப்பு. அதற்காக நாம் அனைவரும் வருங்காலத்தில் ஒற்றுமையோடு உழைக்க வேண்டும். நாம் பார்க்காத வெற்றியும் கிடையாது, நாம பார்க்காத தோல்வியும் கிடையாது. கட்சியையும் தலைவரையும் மனதில் வைத்து, நம்முடைய பணிகளை எல்லாம் நாம் வகுத்துக் கொள்ள வேண்டும்’’ என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
