சென்னை: சென்னை அடுத்த வண்டலூர் அருகே ஓட்டேரி, வால்மீகி தெருவை சேர்ந்தவர் செல்லா (எ) செல்வகுமார் (28), கிளாம்பாக்கம் அறிஞர் அண்ணா காலனி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (35). ஏ-ப்ளஸ் கேட்டகிரி ரவுடிகளான இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பிரபல ரவுடி சீசிங் ராஜா தொடர்புடைய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும், இவர்கள் மீது வண்டலூரை சேர்ந்த திமுக வடக்கு ஒன்றிய செயலாளரும், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய துணை தலைவருமான ஆராமுதனை வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கு உட்பட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.
ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர் செய்யப்பட்ட பின்னர் சீசிங் ராஜா இடத்திற்கு யார் வருவது என்பதில் செல்லா, கனகராஜ், சஜித், விவேக் ராஜ் ஆகிய ரவுடிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நான்கு பேரும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்பது போல் வெளியில் காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள் மறைமுக போட்டி தொடர்ந்து நிலவி வருகிறது.
இவர்கள் நான்கு பேரும் கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வருவது, தொழிலதிபர்கள், கட்டுமான நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் என அனைவரையும் மிரட்டி பணம் பறிப்பது, அரசு நிலங்களை ஆக்கிரமித்து போலி ஆவணம் தயார் செய்து விற்பனை செய்வது என கூலிப்படை போல் செயல்பட்டு பணம் பெற்றுக் கொண்டு கொலை, கொலை முயற்சி, அடிதடி, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
பலமுறை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்தாலும், தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் மேற்கண்ட நான்கு பேரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில் இருந்து ஆதனூர் செல்லும் சாலையில் ரவுடிகள் செல்லா மற்றும் கனகராஜ் ஆகியோர் பெருமளவிலான கஞ்சாவை சப்ளை செய்ய பதுங்கி இருப்பதாக ஓட்டேரி காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் ஓட்டேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையில், தலைமை காவலர் ஆனந்த்ராஜ் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை சம்பவ இடத்திற்கு சென்று அங்கு கஞ்சாவுடன் பதுங்கி இருந்த ரவுடிகள் செல்லா மற்றும் கனகராஜ் ஆகியோரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை போலீசார் வாகனத்தில் ஏற்ற முயன்றபோது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரவுடி செல்லா தலைமை காவலர் ஆனந்தராஜை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உதவி ஆய்வாளர் சதீஷ்குமார், ரவுடி செல்லாவின் வலது காலில் முட்டிக்கு கீழ் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். பின்னர் வெட்டு காயமடைந்த தலைமை காவலர் ஆனந்த்ராஜ் மற்றும் குண்டு காயம் பட்ட ரவுடி செல்லா ஆகிய இருவரையும் போலீசார் மீட்டு தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து சுமார் 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கஞ்சாவை யாருக்கு சப்ளை செய்ய ரவுடிகள் அங்கு பதுங்கி இருந்தார்கள், இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் யார் யார், எங்கிருந்து கஞ்சாவை வாங்கி வந்தார்கள் என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் சில ரவுடிகள் கைது செய்யப்படலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
