×

முதுமலை தெப்பக்காடு முகாமில் யானை தாக்கி பாகன் காயம்: ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை

 

கூடலூர்: கூடலூர் தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானை தாக்கி பாகன் காயம் அடைந்தார். நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு முகாமில் 19 வயதான வளர்ப்பு யானை மசினி பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2007ம் ஆண்டு தாய் யானையால் கைவிடப்பட்ட இந்த யானை முதுமலை கார்குடி வனச்சரகத்தில் சாலையோர பாலத்தின் கீழ் நின்றது. ஒரு மாத குட்டியாக அங்கிருந்து மீட்கப்பட்ட யானை தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு இந்த யானை திருச்சியில் உள்ள சமயபுரம் கோயிலுக்கு அனுப்பப்பட்டது. அங்கு இந்த யானை தாக்கி அதனை பராமரித்து வந்த பாகன் உயிரிழந்தார்.

இதனையடுத்து மசினி யானை மீண்டும் முதுமலைக்கு கொண்டு வரப்பட்டு தெப்பக்காடு முகாமில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானை முதுமலையில் சிறிய குட்டியாக இருந்த காலம் முதல் பொம்மன் (49) என்பவர் பாகனாக இருந்து வந்தார். திருச்சியில் இருந்து மீண்டும் முதுமலைக்கு கொண்டு வரப்பட்ட பின்னரும் பொம்மனே மசினி யானையை பராமரித்து வருகிறார். நேற்று காலை அவர் யானையை வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து சென்று திரும்பினார். மீண்டும் மாலையில் மாயாற்றில் குளிக்க வைப்பதற்காக யானையை அவர் அழைத்து வந்தார்.

ஆற்றில் யானையை இறக்க முயன்றபோது திடீரென பாகன் பொம்மனை யானை தாக்கியது. இதில் பொம்மனின் கையில் முறிவு ஏற்பட்டு கீழே விழுந்தார். உடனடியாக அருகில் இருந்த பாகன்கள் மற்றும் வனத்துறையினர் பொம்மனை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : Pagan ,Mudumalai Theppakadu ,Ooty Government Hospital ,Gudalur ,Theppakadu ,Masini ,Mudumalai Tiger Reserve ,Nilgiris district ,
× RELATED இஸ்லாத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட...